தூத்துக்குடியில் விரைவில் விமான தளம் அமைக்கப்படும் - டி.ஐ.ஜி சவுகான்
இந்தியர்கள் மட்டுமின்றி கடலில் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் ஆபத்தில் சிக்கினாலும் அவர்களையும் மீட்டு, அவர்களது உயிரை காப்பாற்றுவது எங்களது கடமை.
தூத்துக்குடி அருகே நடுக்கடலில் கப்பல் தீப்பிடித்தால் மீட்பது எப்படி என்று கடலோர காவல்படையினர் பயிற்சி ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
தூத்துக்குடி கடலோர காவல்படை சார்பில் மண்டல அளவிலான தேடுதல் மற்றும் மீட்பு பயிற்சி ஒத்திகை நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி கடலோர காவல்படை கமாண்டர் டி.எஸ்.சவுகான் தலைமை தாங்கினார். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், மாநகராட்சி ஆணையாளர் மதுபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த பயிற்சியில் தூத்துக்குடி கடலோர காவல்படையில் உள்ள வஜ்ரா, வைபவ், ஆதேஷ், அபிராஜ், அதுல்யா ஆகிய 5 ரோந்து கப்பல்களும், ஒரு டோர்னியர் விமானம் மற்றும் ஹெலிகாப்டரும் ஈடுபட்டன. தூத்துக்குடியில் இருந்து சுமார் 5 கடல்மைல் தொலைவில் திடீரென ஒரு சரக்கு கப்பலில் தீப்பிடித்தது. உடனடியாக அந்த கப்பலில் இருந்து அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கடலோர காவல்படை ரோந்து கப்பல் விரைந்து சென்று, கப்பலில் உள்ள மோட்டார் மூலம் கடல் நீர் உறிஞ்சப்பட்டு, தீப்பிடித்த கப்பல் மீது பீய்ச்சியடிக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது. தொடர்ந்து கப்பலில் இருந்த மாலுமிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
அதே போன்று நடுக்கடலில் விமானம் விபத்துக்குள்ளாகி விழுந்தால், அதில் மீட்பு பணிகளை எப்படி கையாள வேண்டும் என்று ஒத்திகை நடத்தப்பட்டது. அப்போது மீட்பு படகுகள், கப்பல், மருத்துவமனை உள்ளிட்டவை விபத்து நடந்த பகுதி நோக்கி விரைந்தன. அதே நேரத்தில் டோர்னியர் விமானம் தாழ்வாக பறந்து சென்று, விபத்தில் சிக்கி கடலில் தத்தளித்துக் கொண்டு இருந்தவர்கள் அருகே உயிர் காப்பு மிதவையை போட்டனர். அந்த மிதவை படகு போன்று மாறியது. இதில் விபத்தில் சிக்கியவர்கள் ஏறி பாதுகாப்பாக அமர்ந்து கொள்ள முடியும். இதில் 3 நாட்கள் வரை உயிர்வாழ்வதற்கு தேவையான உணவு, தண்ணீர், மருந்து உள்ளிட்ட பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தன. இதனை பயன்படுத்தும் முறை விளக்கி கூறப்பட்டது.
பின்னர் கப்பல்கள் செல்ல முடியாத பகுதியில் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்படக்கூடிய மீட்பு படகை செலுத்தி தத்தளிப்பவர்களை மீட்பது, கடலில் தத்தளித்துக் கொண்டு இருக்கும் மீனவரை ஹெலிகாப்டரில் இருந்து கயிறு கட்டி மீட்பது குறித்தும் செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. பயிற்சியின் போது, கடலோர காவல்படை, போலீசார், கடலோர பாதுகாப்பு போலீசார், விமான நிலைய அதிகாரிகள், கடலோர பாதுகாப்பு போலீசார், மீன்வளத்துறை அதிகாரிகள், அரசு மருத்துவமனை மருத்துவர்கள் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளுடன், மீட்பு பணியின் போது ஏற்படும் இடர்பாடுகளை களைவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த டி.ஐ.ஜி சவுகான், “இந்திய கடலோர காவல் படையின் கிழக்கு பிராந்தியம் சார்பில் ஆண்டுக்கு ஒரு முறை கடல் தேடுதல் மற்றும் மீட்பு ஒத்திகை பயிற்சி நடத்தப்படும். அதன்படி தற்போது தூத்துக்குடி கடல் பகுதியில் தேடுதல் மற்றும் மீட்பு ஒத்திகை பயிற்சி நடத்தப்பட்டு உள்ளது. கப்பல் துறை, சுங்கத்துறை, மீன்வளத்துறை, உள்ளூர் போலீசார், மாநில அரசு அதிகாரிகள் என சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து இந்த ஒத்திகை பயிற்சி நடத்தப்படும். கடல் பகுதியில் ஏற்படும் பிரச்சினைகள், சவால்களை எதிர்கொள்வது தொடர்பாக இந்த ஒத்திகை பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தூத்துக்குடியில் பயிற்சி வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது. இந்த பயிற்சியில் பங்கேற்ற அனைத்து துறை அலுவலர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த ஆண்டு ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்களை இந்திய கடலோர காவல் படை மீட்டு உள்ளது. கடல் பகுதியில் போக்குவரத்து அதிகரித்துள்ள நிலையில் இதுபோன்ற ஒத்திகை பயிற்சி கடலில் ஆபத்தில் சிக்குவோரை மீட்பதற்கு பெரிதும் உதவியாக இருக்கும். இந்தியர்கள் மட்டுமின்றி கடலில் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் ஆபத்தில் சிக்கினாலும் அவர்களையும் மீட்டு, அவர்களது உயிரை காப்பாற்றுவது எங்களது கடமை. இந்திய கடலோர காவல் படை சார்பில் தூத்துக்குடியில் விரைவில் விமான தளம் அமைக்கப்படும். தென் தமிழக கடலோர பகுதிகளில் மீட்பு மற்றும் பாதுகாப்பு பணிகளுக்கு இந்த விமான தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தேடுதல் மற்றும் மீட்பு பணிகளை தவிர கடத்தல் தடுப்பு பணிகளிலும் இந்திய கடலோர காவல் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். போதை பொருட்கள் மட்டுமன்றி கடத்தல் தங்கமும் கடந்த 2 ஆண்டுகளாக பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. கடந்த ஓராண்டில் மட்டும் ராமேஸ்வரம் பகுதியில் சுமார் 40 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்து உள்ளோம்” என்றார்.