திருச்செந்தூர்-தூத்துக்குடி ரயில் பாதை: 18 கிமீ தூரம் போதும்! மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகுமா?
Tiruchendur to Thoothukudi New Railway Line: ஆறுமுகநேரி-ஸ்பிக் நகர் இடையே மொத்தம் 18 கிலோ மீட்டர் தூரம் புதிய அகல ரெயில் பாதை அமைத்து விட்டால் திருச்செந்தூர்-தூத்துக்குடி ரெயில் பாதை முழுமை பெற்று விடும்.

அறுபடை வீடுகளுள் முக்கிய வீடான திருச்செந்தூரில் இருந்து தூத்துக்குடிக்கு புதிய ரயில் பாதை அமைக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர், வெறும் 18 கி.மீ தூரத்தை இணைத்தால் போதும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.
மத்திய அரசு கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருந்தார், இதில் ரெயில்வே தொடர்பான அறிவிப்புகளும் வெளியிடப்பட்டது. தமிழ்நாட்டிற்கு ஒரு சில திட்டங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்ட நிலையில் பல புதிய திட்டங்களுக்கான கோரிக்கை எழுந்துள்ளது. முக்கியமாக திருநெல்வெலி- திருச்செந்தூர் இரட்டை ரயில் பாதை அமைக்க வேண்டும் எனவும், தூத்துக்குடி-திருச்செந்தூர் இடையே வெறும் 18 கி,மீ தூரத்திற்கு அமைத்தால் புதிய பாதையும் கிடைத்துவிடும்.
தூத்துக்குடி-திருச்செந்தூர் பாதை:
திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு அதிகரித்து கொண்டே வருகிறது.திருச்செந்தூருக்கு போதிய ரயில்கள் இல்லாததால் பக்தர்கள் தற்போது சாலை மார்க்கமாகவே திருச்செந்தூர் வந்து செல்கின்றனர், ரயில் மார்க்கமாக வருபவர்கள் வாஞ்சி மணியாச்சி, திருநெல்வெலி, திருவைகுண்டம் வழியாக சுற்றிக்கொண்டு திருச்செந்தூர் செல்ல வேண்டிய நிலை உள்ளது. தற்போது இந்த பாதையில் செந்தூர் எக்ஸ்பிரஸ், பாலக்காடு விரைவு ரயில் செல்கிறது. இது மட்டுமின்றி நெல்லை-திருச்செந்தூர் பாசஞ்சர் ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன.
அதிக கி.மீ எடுக்கிறது
செந்தூர் விரைவு ரயிலானது நெல்லைக்கு 61 கி.மீ சென்று அங்கிருந்து மதுரை, திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, விழுப்புரம் வழியாக சென்னை செல்கிறது. இதன் பயண தூரம் மொத்தம் 775 கி.மீ தூரம் ஆகும். திருச்செந்தூரில் இருந்து சாலை மார்க்கமாக தூத்துக்குடி வழியாக சென்றால் 637 கி.மீ மட்டுமே ஆகிறது. ரயிலில் சென்றால் கூடுதலாக 138 கி.மீ அதிகம் எடுக்கிறது, இதனால் பயண நேரம் 3 மணி நேரம் கூடுதலாக விரயம் ஆகிறது.

புதிய பாதை மக்கள் கோரிக்கை:
இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் திருச்செந்தூர்-தூத்துக்குடி இடையே புதிய ரயில் பாதை அமைக்க வேண்டும் என்பது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. இந்த பாதையின் கூடுதல் சிறப்பு என்னவென்றால் குறிப்பிட்ட தூரத்தில் பாதையை இணைத்தால் மட்டுமே போதுமானது ஆகும்.
அதாவது திருச்செந்தூரில் இருந்து காயல்பட்டினம், ஆறு முகநேரி வரை 9 கிலோ மீட்டர் தூரம் வடக்கு நோக்கி தண்டவாளம் ஏற்கெனவே அமைந்துள்ளது. அந்த பாதையில் தான் நெல்லைக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது எனவே, தூத்துக்குடிக்கான ரெயில் பாதையை ஆறுமுகநேரியில் இருந்து தொடங்கினால் போதுமானது.

18 கிலோ மீட்டர் பாதை
எதிர்திசையில் தூத்துக்குடி மீளவிட்டான் ரெயில் நிலையத்தில் இருந்து தூத்துக்குடி துறைமுகம் மற்றும் ஸ்பிக் நகருக்கு தனியாக ரெயில் பாதை அமைந்துள்ளது. இந்த வழியாக தற்போது சரக்கு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
எனவே, ஸ்பிக் நகரில் இருந்து பாதையை தொடங்கி, ஆறுமுகநேரி-ஸ்பிக் நகர் இடையே மொத்தம் 18 கிலோ மீட்டர் தூரம் புதிய அகல ரெயில் பாதை அமைத்து விட்டால் திருச்செந்தூர்-தூத்துக்குடி ரெயில் பாதை முழுமை பெற்று விடும். இதன் மூலம் திருச்செந்தூரில் இருந்து காயல் பட்டினம், ஆறுமுகநேரி, சாகுபுரம், ஆத்தூர், புன்னக்காயல்,பழையகாயல், ஸ்பிக் நகர், துறைமுகம் வழியாக தூத்துக்குடி மீளவிட்டான் சென்றடையலாம். தொடர்ந்து ரெயில் வாஞ்சி மணி யாச்சி வழியாகவும், தற்போது மதுரைக்கு அமைக்கப்பட்டுவரும் புதிய பாதை வழியாகவும் பயணிக்க முடியும். இது தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு ஒரு புதிய மாற்று வழி ரெயில் பாதையாகவும், ஆத்தூர், பழையகாயல், ஸ்பிக் நகர் பகுதி மக்களுக்கு நேரடி ரெயில் சேவையும் கிடைக்கும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.
























