வட கிழக்கு பருவமழையை கண்டு தூத்துக்குடி மக்கள் பயப்பட வேண்டாம் - மேயர் ஜெகன் உறுதி
தமிழக முதல்-அமைச்சர் அறிவிப்பின்படி அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும். தூத்துக்குடியை பொறுத்தவரை அம்மா உணவகங்கள் சிறப்பான முறையில் இயங்கி வருகின்றன.
தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற சாதாரண கூட்டம் மாநகராட்சி கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கினார். துணைமேயர் ஜெனிட்டா, ஆணையாளர் மதுபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாநகராட்சியின் டுவிட்டர், பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடக பக்கங்களை தனியார் நிறுவனம் மூலம் பராமரிக்க ஆண்டுக்கு ரூ.12 லட்சம் ஒதுக்கீடு செய்வது உள்ளிட்ட 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் அ.தி.மு.க கொறடா மந்திரமூர்த்தி பேசும் போது, தூத்துக்குடி தெப்பக்குளத்தை முறையாக பராமரிக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். தாமிரபரணி ஆற்றில் கழிவுகள் கலப்பதால், அதனை சுத்தப்படுத்தி மக்களுக்கு வினியோகிக்க வேண்டும், அதுபோல அம்மா உணவங்களை மூடக்கூடாது, தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்று கூறினார். அப்போது, தி.மு.க. கவுன்சிலர் சுரேஷ்குமார், வார்டு சம்பந்தப்பட்டபிரச்சினைகளை விடுத்து, தேவையற்ற பிரச்சினைகளை பேசி வருகிறார் என்று கூறி எதிர்ப்பு தெரிவித்தார். தொடர்ந்து கவுன்சிலர்கள் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.
இதற்கு பதில் அளித்து மேயர் ஜெகன் பெரியசாமி பேசும் போது, தமிழகத்தின் துணை முதல்-அமைச்சராக பொறுப்பேற்று உள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தூத்துக்குடியில் நடந்த நம்ம ஸ்ட்ரீட் நிகழ்ச்சிக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது.
தூத்துக்குடியில் பிரதான மழைநீர் கால்வாயான பக்கிள் ஓடையை தூர்வாரும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகள் அக்டோபர் 15-ம் தேதிக்குள் முடிவடைந்துவிடும். அதே போன்று மாநகரில் உள்ள 9 பிரதான மழைநீர் வழித்தடங்களை தூர்வாரும் பணிகளும் நடந்து வருகின்றன. இந்த பணிகள் அனைத்தும் பருவமழை தொடங்குவதற்கு முன்பாக முடிக்கப்படும். அதுபோல மாநகரில் மழைநீர் வடிகால் பணிகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டன. எனவே, இந்த ஆண்டு பருவமழையை கண்டு மக்கள் பயப்பட வேண்டாம். மாநகராட்சியில 1 லட்சத்து 57 ஆயிரம் குடிநீர் இணைப்புகள் உள்ளன. இதில் 1 லட்சத்து 35 ஆயிரம் வீட்டு உபயோக இணைப்புகள் உள்ளன. தீர்வை இல்லாமலும் குடிநீர் இணைப்புகள் உள்ளன. இது தொடர்பாக ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி தெப்பகுளத்தை பராமரிக்க மாநகராட்சி சார்பில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. தெப்பகுளத்தில் கழிவுகளை கொட்டுவோருக்கு அபராதம் விதிக்கப்படும். மேலும், அந்த பகுதியில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தமிழக முதல்-அமைச்சர் அறிவிப்பின்படி அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும். தூத்துக்குடியை பொறுத்தவரை அம்மா உணவகங்கள் சிறப்பான முறையில் இயங்கி வருகின்றன என்றார்.
கூட்டத்தில் மாநகராட்சி கவுன்சிலர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.