கிணற்றில் விழுந்த வாளியை எடுக்க சென்ற தொழிலாளிகள்; அடுத்த கனமே நேர்ந்த சோகம்
கிணற்றுக்குள் சென்றவர், எந்த அசைவும் இல்லாததால் மாரிமுத்து கிணற்றுக்குள் இறங்கி உள்ளார். அவரும் நீண்ட நேரமாகியும் வெளியில் வரவில்லை.
![கிணற்றில் விழுந்த வாளியை எடுக்க சென்ற தொழிலாளிகள்; அடுத்த கனமே நேர்ந்த சோகம் Thoothukudi news Two laborers were killed by poisonous gas while cleaning a useless well - TNN கிணற்றில் விழுந்த வாளியை எடுக்க சென்ற தொழிலாளிகள்; அடுத்த கனமே நேர்ந்த சோகம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/04/d889e351194bd8fb4cce854e234a2b9d1722772284079571_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தூத்துக்குடி தாளமுத்து நகர் நேரு காலனி பகுதியில் வெகு நாளாக முடி கிடந்த கிணற்றை சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி கணேசன், மாரிமுத்து இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இரண்டு பேர் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தூத்துக்குடி தாளமுத்துநகர் நேருகாலனி ஆனந்தநகரை சேர்ந்தவர் கந்தசாமி. இவருடைய மகன் கணேசன்(வயது 60). இவர் வீட்டில் சுமார் 3 அடி அகலமும், 18 அடி ஆழமும் கொண்ட உறைகிணறு உள்ளது. இந்த கிணற்றின் அருகே செப்டிக் டேங்க் உள்ளது. இதனால் செப்டிக் டேங்கில் உள்ள தண்ணீர் கிணற்றுக்குள் இறங்கி, கிணற்றில் உள்ள தண்ணீர் துர்நாற்றம் வீசத் தொடங்கி இருக்கிறது. இதனால் அந்த தண்ணீரை பயன்படுத்த முடியாமல் இருந்தனர்.
இதனை தொடர்ந்து கிணற்றில் உள்ள தண்ணீரை வெளியேற்றி விட்டு சுத்தம் செய்வதற்கான பணியில் வீட்டு உரிமையாளர் கணேசன், ஆறுமுகநேரியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் மாரிமுத்து (36) ஆகிய 2 பேரும் ஈடுபட்டு உள்ளனர். முதலில் மோட்டார் மூலம் கிணற்றில் இருந்த தண்ணீரை வெளியேற்றி உள்ளனர். அப்போது, ஒரு வாளி கிணற்றுக்குள் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த வாளியை எடுப்பதற்காக கணேசன் கயிறு கட்டி கிணற்றுக்குள் இறங்கி உள்ளார். கிணற்றுக்குள் சென்றவர், எந்த அசைவும் இல்லாததால் மாரிமுத்து கிணற்றுக்குள் இறங்கி உள்ளார். அவரும் நீண்ட நேரமாகியும் வெளியில் வரவில்லை.
இதனால் உறவினர்கள் சத்தம் போட்டதை தொடர்ந்து, அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து உள்ளனர். அங்கு நின்று கொண்டு இருந்த நேருகாலனியை சேர்ந்த கார்த்திக் மகன் பவித்ரன்(32), செல்வம் மகன் ஜேசுராஜன் ஆகியோர் கிணற்றில் இறங்கி பார்த்து உள்ளனர். அப்போது, அவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் சத்தம் போட்டு உள்ளனர். உடனடியாக அவர்களை மீட்டனர். ஆனாலும் அவர்கள் மூச்சுத்திணறலால் மயங்கினர். உடனடியாக அவர்கள் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி தாளமுத்துநகர் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆய்வு செய்தனர். அப்போது, கிணற்றுக்குள் விஷ வாயு பரவி இருப்பதால் கணேசன், மாரிமுத்து ஆகிய 2 பேரும் மூச்சுத்திணறி உயிரிழந்து இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து தீயணைப்பு படையினர் உரிய உபகரணங்கள் அணிந்து சென்று கிணற்றுக்குகள் மூச்சுத்திணறி உயிரிழந்த 2 பேர் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக தாளமுத்துநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)