ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் ஆய்வுக் குழு தேவையில்லை - ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பு நிர்வாகிகள் கோரிக்கை
தமிழ்நாடு முதலமைச்சர் உறுதி அளித்தபடி நடந்து கொண்டிருக்கின்ற சட்டமன்ற கூட்டத் தொடரில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக சிறப்புச் சட்டம் இயற்றி ஸ்டெர்லைட் நச்சு ஆலையை நிரந்தரமாக அப்புறப்படுத்த வேண்டுகிறோம்.
ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் ஆய்வுக் குழு தேவையில்லை என்ற கருத்தை தமிழக அரசு உறுதியாக உச்சநீதிமன்றத்தில் முன்வைக்க வேண்டும் என்று ஒருங்கிணைந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பு நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேதாந்தா நிறுவனத்திற்கு உட்பட்ட ஸ்டெர்லைட் ஆலை தூத்துக்குடியில் செயல்பட்டு வந்தது. இந்த ஆலை அமைந்துள்ள பகுதிகளில் சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுவதாக 2018ஆம் ஆண்டு பொதுமக்கள், பல்வேறு அமைப்புகள் போராட்டங்கள் நடத்தியது. இந்த போராட்டத்தின் போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கக்கோரி வேதாந்தா நிறுவனம், நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு பிப்.14ம் தேதி தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இதனையடுத்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தெரிவிக்கும் போது, ஸ்டெர்லைட் ஆலை பாதுகாப்பாகச் செயல்படுகிறதா என்ற ஆய்வு நடத்தாமல் உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய இயலாது. ஆலையை மூடி 6 ஆண்டுகள் ஆகிவிட்டது. தமிழ்நாடு அரசும், ஸ்டெர்லைட் ஆலை ஒப்புக் கொண்டால் நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்யலாம். அதன் பிறகு ஆலையைத் திறப்பதா, இல்லை வேண்டாமா என்பது தொடர்பாக முடிவுகள் செய்யலாம் எனத் தெரிவித்து வழக்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளனர். விசாரணையின்போது, கடும் கட்டுப்பாடுகளுடன் ஆலையை மீண்டும் இயக்குவது தொடர்பாக நிபுணர் குழுவை அமைக்கலாம் என்ற யோசனை குறித்து ஆலோசிக்க அவகாசம் தேவை என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், வேதாந்தாவின் நாசகார ஸ்டெர்லைட் நச்சு ஆலையை தூத்துக்குடி மண்ணிலிருந்து அடியோடு அகற்றிவிட்டு தூய்மையான சுதந்திர காற்று சுவாசிக்க வேண்டும், எதிர்கால தலைமுறைக்கு மாசற்ற தூத்துக்குடியை விட்டுச் செல்ல வேணும் என்பதே தூத்துக்குடி மக்களின் நெடுங்கால நிலைப்பாடு. இந்நிலைப்பாட்டில் தமிழ்நாடு அரசு மக்களோடு இருக்கும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கின்றோம் ஆய்வுக் குழு என்று சொல்லி ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்க முயற்சிப்பதை முழுமையாக நிராகரிக்கிறோம். தமிழ்நாடு அரசு "ஆய்வுக் குழு தேவையில்லை" என்ற கருத்தை உறுதியாக உச்சநீதிமன்றத்தில் முன்வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பு நிர்வாகிகள் ஒருங்கிணைப்பாளர் பாத்திமா பாபு தலைமையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அவர்கள் அளித்துள்ள மனுவில், நாசக்கார ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான இறுதி விசாரணை தற்போது உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வழக்கை விசாரித்து வரும் நீதியரசர்கள் ஆலையை ஆய்வுக்குழு அமைத்து ஆய்வு செய்து அதன் மூலமாக ஆலையை திறப்பதா வேண்டாமா என முடிவெடுக்கலாமா என தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு அடுத்த விசாரணையில் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசானது உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வாதத்தின் போது புதிய ஆய்வுக் குழு அமர்த்தி புதிய விசாரணை குழு என்பதை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று வாதிட்டது. இந்நிலைப்பாட்டில் மாசு கட்டுப்பாட்டு துறையின் முழுமையான ஆய்வின் அடிப்படையில் சட்டபூர்வமாக மூடப்பட்ட ஸ்டெர்லைட் நச்சு ஆலையை திறக்க அனுமதிக்க மாட்டோம் என்று உச்சநீதிமன்றத்தில் உறுதியாக தீர்க்கமாக, எழுத்துப்பூர்வமாகவும் வாதிடவும் கோருகிறோம். வேதாந்தாவின் நாசக்கார ஸ்டெர்லைட் நச்சு ஆலை தூத்துக்குடி மண்ணில் இருந்த நிரந்தரமாக அகற்றிட தமிழ்நாடு முதலமைச்சர் உறுதி அளித்தபடி நடந்து கொண்டிருக்கின்ற சட்டமன்ற கூட்டத் தொடரில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக சிறப்புச் சட்டம் இயற்றி ஸ்டெர்லைட் நச்சு ஆலையை நிரந்தரமாக அப்புறப்படுத்த வேண்டுகிறோம் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.