சாகர்மாலா திட்டங்களால் எங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு - மீனவர்கள்
தூத்துக்குடி கடற்கரை பகுதிகளில் 24 மணி நேர ஆம்புலன்ஸ் வசதி செய்ய வேண்டும்- மீனவர்கள் கோரிக்கை
தூத்துக்குடி மாவட்ட மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், மீன்வளத்துறை இணை இயக்குனர் காசிநாதபாண்டியன், உதவி இயக்குனர் விஜயராகவன், மீன்வளக்கல்லூரி உதவி பேராசிரியர் ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மீனவர்களுக்கான கடன் அட்டை திட்டம், அதனால் மீனவர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்தும் மகளிர் சுய உதவிக் குழுக்களில் மீனவ பெண்கள் இணைவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்தும், மீனவர்களுக்கு அளிக்கப்படும் பல்வேறு பயிற்சிகள் குறித்தும் விளக்கி கூறப்பட்டது.
தொடர்ந்து கூட்டத்தில் மீனவர்கள் பேசும் போது, கடலில் மீனவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அவர்களை விரைவாக மருத்துவமனைக்கு அழைத்து செல்ல கடற்கரை பகுதியில் 24 மணி நேர ஆம்புலன்சு வசதி செய்ய வேண்டும். கடந்த 18-ம் தேதி இரவில் புன்னக்காயல் அருகே மீனவர்கள் மீன்பிடிக்கும் பகுதி வழியாக சென்ற கப்பலால் 10 வலைகள் சேதமடைந்து உள்ளன. இது தொடர்பாக துறைமுக அதிகாரிகளிடம் கேட்டால் ஆதாரம் கேட்கின்றனர். சாகர்மாலா போன்ற வளர்ச்சி திட்டங்களால் பாரம்பரிய மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. மீனவர்களின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும். கடம்பாகுளத்தில் மீன் குஞ்சுகள் இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடலில் 24 மணி நேரமும் சுற்றி வரும் வகையில் அனைத்து மருத்துவ வசதிகளுடன் கூடிய ஒரு படகை தயார் செய்து கடல் ஆம்புலன்ஸ் சேவையாக மீன்வளத்துறை ஏற்பாடு செய்ய வேண்டும். சிறிய மாவட்டமான கன்னியாகுமரியில் 3 உதவி இயக்குநர் அலுவலகங்கள் மற்றும் ஒரு துணை இயக்குநர் அலுவலகம் உள்ளது. ஆனால், தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடியில் மட்டும் தான் உதவி இயக்குநர் அலுவலகம் உள்ளது. இதனால் மீனவர்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன. எனவே, மீனவர்களின் நலனை கருத்தில் கொண்டு திருச்செந்தூரில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம் தொடங்க வேண்டும்.
அண்ணா மேலாண்மை நிறுவனம் மூலம் மீனவ மாணவர்களுக்கு குடியுரிமை தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆனால், மதிப்பெண் 80 சதவீதம் இருக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த மதிப்பெண்ணை 50 அல்லது 60 ஆக குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சங்குகுளி மீனவர்கள் முறையற்ற முறையில் சங்குகுளி தொழிலில் ஈடுபடுகின்றனர். இதனால் கடலில் சங்கு வளம் பாதிக்கப்படுகிறது. இதனை தடுக்க வேண்டும். தருவைகுளத்தில் உள்ள ஓடையின் முகத்துவராத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். சங்குகுளி தொழில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக பராம்பரியமாக நடைபெறுகிறது. உயிருள்ள சங்குகளை நாங்கள் எடுப்பதில்லை. இறந்த சங்குகளை மட்டுமே எடுக்கிறோம். இதனால் யாருக்கும், எந்த வகையிலும் பாதிப்பு கிடையாது. பாரம்பரிய சங்குகுளி மீனவர்களை பாதுகாக்க வேண்டும். அவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும். காயல்பட்டினம் சிங்கித்துறையில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும். புன்னக்காயல் கிராமத்துக்கு பஸ்வசதி, முறையான குடிநீர், மின்வாரிய ஒயர்மேன் வசதி செய்து தரவேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதற்கு பதில் அளித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி பேசும் போது, தமிழக அரசு சார்பில் மீனவர்களுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பல்வேறு திறன்மேம்பாட்டு பயிற்சியும் அளிக்கப்படுகிறது. இதனை மீனவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தப்படும். வலைகளை கப்பல் சேதப்படுத்தியது குறித்து போலீசில் புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
மீனவர்கள் கிசான் கிரெடிட் கார்டு என்ற மீனவர் கடன் அட்டையை அதிகமாக பெற்று பயன் பெற வேண்டும். மேலும், பெண்கள் அனைவரும் மகளிர் சுய உதவிக்குழுக்களில் சேர வேண்டும். தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள படிப்பகம், நகராட்சி பகுதியில் உள்ள அறிவுசார் மையம் மற்றும் நூலகங்களை மீனவ இளைஞர்கள் நல்ல முறையின் பயன்படுத்தி கொள்ள வேண்டும். மேலும், வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் அளிக்கப்படும் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிகளிலும் பங்கேற்று பயன்பெற வேண்டும் என்றார்.
கூட்டத்தில் தூத்துக்குடி உதவி ஆட்சியர் பிரபு, கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் ஆறுமுகம், மீன்வளத்துறை உதவி இயக்குனர் புஷ்ரா ஷப்னம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.