50 நாட்களை கடந்தும் வடியாத வெள்ள நீர்..செயல்படாத அரசு.. வீடுகளில் கருப்பு கொடியேற்றி மக்கள் போராட்டம்
50 நாட்களுக்கு மேல் ஆகியும் ஊருக்குள் செல்லக்கூடிய சாலையில் வெள்ள நீர் வடியாததால் பள்ளிக்கூடம், மருத்துவமனை உள்ளிட்ட அவசரத் தேவைகளுக்கு கூட செல்லமுடியாமல் தவித்து வருகின்றனர்.
திருச்செந்தூர் அருகிலுள்ள வட்டன்விளை பகுதியில் 50 நாட்களை கடந்தும் வெள்ள நீரை வெளியேற்றப்படாததை கண்டித்து பொதுமக்கள் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி வெள்ளநீரில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் பெய்த கனமழை காரணமாகவும் தாமிரபரணியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாகவும் பல்வேறு ஏரி குளங்கள் உடைந்து கிராமங்களையும் குடியிருப்புகளையும் வெள்ள நீர் சூழ்ந்தது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு கிராமங்கள் துண்டிக்கப்பட்டு தனித்தீவுகளாயின.
வெள்ளம் வந்து 50 நாட்களை கடந்தும் ஒரு சில பகுதிகளில் இன்றும் வெள்ளம் வடியாமல் இயல்பு நிலைக்கு திரும்பமுடியாமல் மக்கள் தவித்துவருகின்றனர். திருச்செந்தூர் அருகிலுள்ள வட்டன்விளை பகுதியில் சாலையில் சுமார் 1 கிமீ தூரம் இடுப்பளவு தண்ணீர் இருந்துவருவதால் அந்தப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிவருகின்றனர். இதுதொடர்பாக அரசிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டிய பொதுமக்கள் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து 300-க்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றியும் வெள்ளநீரில் இறங்கியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 50 நாட்களுக்கு மேல் ஆகியும் ஊருக்குள் செல்லக்கூடீய சாலையில் வெள்ள நீர் வடியாததால் பள்ளிக்கூடம், மருத்துவமனை, உள்ளிட்ட அவசரத் தேவைகளுக்கு கூட செல்லமுடியாமல் தவித்துவருகின்றனர். மேலும் உணவுப்பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கும் கூட சுமார் 10 கிமீ தூரம் சுற்றி செல்லவேண்டியுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.
மேலும் மழை வெள்ளத்தால் பனை கிழங்குகள் முற்றிலுமாக அழிந்து பல கோடி நஷ்டம் அடைந்த நிலையில் வெள்ளம் வழியாததால் பனைத்தொழிலும் முற்றிலுமாக பாதிக்கப்பட்டு வாழ்தாரத்தை இழந்து நிற்பதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே தமிழ்நாடு அரசு உடனடியாக அந்தப் பகுதியில் பாலம் அமைத்து சாலை வசதியினை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.