தூத்துக்குடியில் மழைக்காலத்தில் ஏற்படும் துயர நிலை என்று மாறுமோ - பரிதவிக்கும் பொதுமக்கள்
தூத்துக்குடியில் முகாமிட்டு உள்ள அரசு அதிகாரிகளும் விடுதிகளில் தங்கி உள்ளதால் எந்த விடுதியிலும் தங்கும் அறைகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18-ந் தேதி பெய்த அதிகனமழை காரணமாக மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கயத்தாறு, கடம்பூர் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் தூத்துக்குடி அருகே உள்ள கோரம்பள்ளம் குளம் வேகமாக நிரம்பியது. இதனால் குளத்தில் உள்ள 24 கண் மதகு திறக்கப்பட்டது. இதனால் உப்பாற்று ஓடையில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆனாலும் கோரம்பள்ளம் குளத்தில் திடீர் உடைப்பு ஏற்பட்டது. இதனால் குளத்தின் தண்ணீர் தூத்துக்குடி பாளை ரோட்டில் உள்ள பாலம் வழியாக பாய்ந்து ஓடியது. இதில் அந்த பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. தொடர்ந்து மறவன்மடம், அந்தோணியார்புரம், சோரீஸ்புரம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வழியாக மாநகருக்குள் புகுந்தது.
இந்த வெள்ளத்தால் மாநகரம் 4 நாட்களாக தத்தளித்துக் கொண்டு இருந்தது. கடந்த 3 நாட்களாக மழை இல்லாமல் வெயில் அடித்து வருகிறது. அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்தாலும் உடனடியாக வெயில் அடித்து வருவதால் பெரிய அளவில் பாதிப்பு இன்றி மழைநீர் வடியத் தொடங்கி உள்ளது. பாளையங்கோட்டை ரோட்டில் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு 2 அடிக்கும் அதிகமாக தண்ணீர் தேங்கி இருந்தது. நேற்று இந்த தண்ணீர் வடிந்ததால் போக்குவரத்து தொடங்கி உள்ளது. இருசக்கர வாகன ஓட்டிகள், கார்களிலும் அந்த ரோட்டில் மக்கள் பயணிக்க தொடங்கி இருக்கின்றனர். அதே போன்று தூத்துக்குடி அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து நெல்லை, கோவில்பட்டி உள்ளிட்ட ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
தூத்துக்குடி மீளவிட்டான் அருகே ரெயில் பாதையில் உடைப்பு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தற்போது வெள்ளநீர் வெளியேறியதால் அந்த பகுதியில் ரெயில் பாதை சீரமைக்கப்பட்டது. தொடர்ந்து போக்குவரத்துக்கு தகுதியாக இருப்பதாக சான்றிதழ் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து தூத்துக்குடியில் இருந்து ரெயில்கள் இயக்கப்பட்டன. அதே போன்று விமான சேவையும் முழுமையாக செயல்பட்டு வருகிறது. இதனை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
அதே நேரத்தில் தூத்துக்குடியில் பிரதான சாலைகளில் ஓரளவு மழை வெள்ளம் வடிய துவங்கினாலும் அவ்வப்போது பெய்யும் மழையால் வெள்ள பாதிப்பு தொடர்கிறது. பெரும்பாலான தெருக்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. முத்தம்மாள்காலனி, ஆதிபராசக்தி நகர், தனசேகரன் நகர், நிகிலேசன் நகர், புஷ்பாநகர், கதிர்வேல் நகர், ராஜீவ்நகர், தபால் தந்தி காலனி, ஸ்டேட் வங்கி காலனி, இந்திராநகர், போல்டன்புரம், கால்டுவெல்காலனி, கோயில்பிள்ளை நகர், தெர்மல்நகர், தாளமுத்துநகர் வண்ணார் பேட்டை, டி.சவேரியார்புரம் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் வடியாமல் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதிகளில் உள்ள மக்கள் படகு, பரிசல்கள் மூலம் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
மேலும் சிலர் அவர்களின் வீடுகளிலேயே தங்கி உள்ளனர். அவர்கள் போதிய உணவு வசதி இன்றி சிரமப்பட்டு வருகின்றனர். குறிப்பாக பால், குடிநீர் வசதி இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இது போன்று வீடுகளில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு விரைந்து நிவாரண பொருட்கள் வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தூத்துக்குடி மாநகரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தூத்துக்குடியில் உள்ள தனியார் விடுதிகளில் தங்கி உள்ளனர். மேலும் தூத்துக்குடியில் முகாமிட்டு உள்ள அரசு அதிகாரிகளும் விடுதிகளில் தங்கி உள்ளதால் எந்த விடுதியிலும் தங்கும் அறைகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.