புதிய திருமண மண்டபத்துக்கு முன்னாள் திமுக மாவட்ட செயலாளர் பெயரை? - மாமன்ற உறுப்பினர் கோரிக்கை
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் 153 பூங்காக்கள் உள்ளன. இவை அனைத்தும் சீரமைக்கப்பட்டு உள்ளன. காலியாக உள்ள இடங்களில் கைப்பந்து, கூடைப்பந்து விளையாட்டு மைதானங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி மாநகராட்சியில் குடிநீருக்கு அடுக்கு விகித முறையில் கட்டணம் நிர்ணயம் உட்பட 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தூத்துக்குடி மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் மாநகராட்சி கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கினார். ஆணையாளர் மதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் குடிநீர் கட்டண விகித முறையை மாற்றுவது உள்ளிட்ட 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், 2 ஆயிரத்து 500 சதுர அடி நிலத்தில் 3 ஆயிரத்து 500 சதுரடி வரை கட்டப்படும் குடியிருப்பு கட்டிடங்களுக்கு கட்டிட அனுமதி பெற தேவையில்லை என்ற தமிழக அரசின் அரசாணையை தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நடைமுறைப்படுத்துவது தொடர்பாக சிறப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் பேசும் போது, குடிநீர் கட்டணம் அடுக்கு முறை கட்டணமாக மாற்றப்படுவதால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாதா?. கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் குடிநீர் கட்டணம் 3 மடங்கு உயர்ந்தது. தற்போது குடிநீர் கட்டணம் மாறுமா என்பதை விளக்க வேண்டும். பாதாள சாக்கடை கால்வாய்கள் முறையாக சுத்தம் செய்யப்படாததால் கழிவுநீர் தேக்கமடைந்து, வீடுகளுக்குள் திரும்ப வருகிறது. எனவே, கூடுதல் வாகனங்களை வாங்கி பாதாள சாக்கடையை முறையாக சுத்தம் செய்ய வேண்டும் கோரிக்கை வைத்தனர்.
தூத்துக்குடி மாநகராட்சி 39 வது வார்டு உறுப்பினர் சுரேஷ் பேசிம்போது, தூத்துக்குடி 2-ம் கேட் அருகே மாநகராட்சி சார்பில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் திருமண மண்டபத்துக்கு முன்னாள் எம்.எல்.ஏ என்.பெரியசாமி ( அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் ஆகியோரின் தந்தை) பெயரை வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதில் அளித்து மேயர் ஜெகன் பெரியசாமி பேசும் போது, கடந்த மாதம் நடந்த கூட்டத்தில் அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில் மண்டலம் வாரியாக மக்கள் குறைகளை தீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 4 மண்டலங்களிலும் முதல் சுற்று முகாம் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வடக்கு மண்டலத்தில் மொத்தம் பெறப்பட்ட 97 மனுக்களில் 80 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது. கிழக்கு மண்டலத்தில் 114 மனுக்களில் 77 மனுக்களுக்கும், மேற்கு மண்டலத்தில் 127 மனுக்களில் 108 மனுக்களுக்கும், தெற்கு மண்டலத்தில் 153 மனுக்களில் 27 மனுக்களுக்கும் தீர்வு காணப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சியில் 1 லட்சத்து 51 ஆயிரத்து 628 கட்டிடங்கள் வரிவிதிப்பு செய்யப்பட்டு உள்ளன. இதில் 87 ஆயிரத்து 561 கட்டிடங்களுக்கு மாநகராட்சி மூலம் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த குடிநீர் இணைப்புகளுக்குரிய கட்டணங்கள் காலாண்டுக்கு ஒருமுறை மீட்டர் ரேட் கணக்கிடப்பட்டு வசூலிக்கப்படுகிறது. பெரும்பாலான குடிநீர் இணைப்புகளில் அளவுமானி பொருத்தப்படாமல் உள்ளது. எனவே, மீட்டர் ரேட் கட்டண விகிதங்களை அடுக்கு விகித கட்டணங்களாக மாற்றம் செய்து நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த முறையினால் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது.
விரைவில் பாதாள சாக்கடை கால்வாய்கள் சுத்தம் செய்யப்படும். தூத்துக்குடியில் மக்கள் பயன்பாட்டில் உள்ள 80 சதவீத சாலைகள் புதிதாக போடப்பட்டுவிட்டன. மீதமுள்ள சாலைகளும், சிறிய சந்துக்களில் உள்ள சாலைகளும் விரைவில் போடப்படும். மாநகராட்சி பகுதியில் 153 பூங்காக்கள் உள்ளன. இவை அனைத்தும் சீரமைக்கப்பட்டு உள்ளன. மேலும், காலியாக உள்ள இடங்களில் கைப்பந்து, கூடைப்பந்து போன்ற விளையாட்டு மைதானங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாநகராட்சியில் ஸ்டெம் பூங்கா, திருமண மண்டபம் உள்ளிட்ட 5 இடங்களுக்கு பெயர் வைக்காமல் உள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் வைத்து, அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.