திருச்செந்தூர் கோயில் செயல்பாடுகள் மீது கண்காணிப்பு! உயர்மட்ட அதிகாரிகள் குழு அமைப்பு.
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் நிர்வாகத்தை ஆய்வு செய்ய உயர்மட்டக் குழு அமைப்பு: இந்து சமய அறநிலையத்துறை அதிரடி
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைமுறையில் உள்ள அன்னதானத் திட்டம், பக்தர்கள் தங்கும் விடுதி முன்பதிவு மற்றும் கோயில் நிர்வாகம் தொடர்பான பல்வேறு செயல்பாடுகளை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் டி.ஜி.வினய் அதிரடியாக உயர்மட்ட ஆய்வுக்குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளார்.
திருச்செந்தூர் திருக்கோயிலுக்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னதானத் திட்டத்தின் தரம், அதன் செயல்பாடுகள், மற்றும் திருக்கோயிலுக்குச் சொந்தமான விடுதிகளில் பக்தர்கள் தங்குவதற்காக செய்யப்படும் அறை முன்பதிவு நடைமுறைகளில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளனவா என்பது குறித்து விரிவாக ஆய்வு செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், கோயில் நிர்வாகம் தொடர்பான ஒட்டுமொத்த செயல்பாடுகளையும் சீரமைக்கும் நோக்கில் இந்த ஆய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்த ஆய்வுக் குழுவில் இந்து சமய அறநிலையத்துறையின் பல்வேறு நிலைகளில் உள்ள முக்கிய அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.
கோ.ஜெயப்பிரியா, இணை ஆணையர் (சட்டம்), ஆணையர் அலுவலகம். கு.தங்கம், துணை ஆணையர்-3, ஆணையர் அலுவலகம். பா.பாஸ்கரன், உதவி ஆணையர்-6, ஆணையர் அலுவலகம். சி.கார்த்திகேயன், முதுநிலை கணக்கு அலுவலர், அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில், இராமேஸ்வரம்.மு.பகவதி, மேலாளர், இணை ஆணையர் அலுவலகம், தூத்துக்குடி. மாயக்கண்ணன், திட்டப்பொறியாளர், ஆணையர் அலுவலகம். இந்த ஆய்வுக்குழுவினர் திருக்கோயிலுக்குச் சென்றால், அவர்களுக்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும், வசதிகளையும் வழங்க வேண்டும் என்று திருச்செந்தூர் திருக்கோயில் இணை ஆணையர் மற்றும் செயல் அலுவலருக்கு, அறநிலையத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
ஆய்வுப் பணிகள் தடையின்றி நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்பதில் நிர்வாகம் உறுதியாக உள்ளது. அறநிலையத்துறை அமைச்சர் கடந்த மே 29-ம் தேதி வழங்கிய ஆய்வுக்குறிப்பின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆய்வுக்குழுவினர் கள ஆய்வு மேற்கொண்டு, அது குறித்த விரிவான அறிக்கையை வரும் ஜூன் 20-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் ஆய்வு மற்றும் குழு அமைப்பு, திருச்செந்தூர் திருக்கோயில் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வருவதற்கும், பக்தர்களின் வசதிகளை மேம்படுத்துவதற்கும் எடுக்கப்பட்ட முக்கியமான நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. ஆய்வுக்குப் பிறகு எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் பக்தர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்





















