ஆடித்தபசு - அரியும் நானே சிவனும் நானே.. காட்சியளித்த சுவாமி சங்கரநாராயணர்
அருள்மிகு கோமதி அம்மாளுக்கு சுவாமி சங்கரநாராயணனாக காட்சியளித்த போது பக்தர்கள் மற்றும் விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் விளைவித்த பொருட்களை சப்பரத்தின் மீது தூவி நேர்த்திக்கடனை செலுத்தினர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணசுவாமி கோயிலில் ஆடித்தபசு காட்சி நடைபெற்றது-லட்சம் பக்தர்கள் தவசுக் காட்சியை கண்டு தரிசித்தனர்.
அருள்மிகு.சங்கரநாராயணசுவாமி கோயிலில் ஆடித்தபசு திருவிழா கடந்த 11 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.திருவிழா மொத்தம் 12 நாள் நடக்கும். 11ஆம் நாள் திருவிழாவையொட்டி முக்கிய நிகழ்வான ஆடித்தபசு காட்சி நடைபெற்றது.
காலையில் பட்டுபரிவட்டம்,அலங்கராத்திற்குரிய சாமான்கள் சகிதம், சங்கரநாராயணசுவாமிக்கு மண்டகப்படி அழைப்புச் சுருள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் சுவாமி,அம்பாள், சந்திரமௌலிஸ்வரர் மற்றும் மூன்று உற்சவ மூர்த்திகளுக்கும் கும்பம் அபிஷேகம் நடைபெற்றது. அப்போது பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி,அம்பாளை வழிபட்டனர்.
சிறப்பு பூஜைகள் முடிந்தபிறகு கோமதிஅம்பாள் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி மேளதாளத்துடன் ஊர்வலமாகப் புறப்பட்டு மேலரதவீதியில் உள்ள தவசு மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு அவருக்கு அபிஷேகம் அலங்காரம்,தீபாராதனை நடைபெற்றது.இதைத்தொடர்ந்து மாலையில் சுவாமி,சங்கரநாராயணராக ரிஷிப வாகனத்தில் எழுந்தருளி தெற்குரதவீதியில் வந்தார். அப்போது பக்தர்கள் கர கோஷம் எழுப்பி, ஆரவாரம் செய்தனர்.
ஆடித்தபசு
மாலை 6.12 மணிக்கு தவசுப் பந்தலுக்கு வந்த சங்கரநாராயணர் வெண்பட்டு உடுத்தியிருந்தார். அவரது முகத்திற்கு நேராக திரைப் போடப்பட்டிருந்தது. இந்நிலையில் ஏற்கனவே மேலரதவீதி தவசு மண்டபத்தில் எழுந்தருளியிருந்த கோமதி அம்பாள் புறப்பட்டு சங்கரநாராயணர் எழுந்திருளியிருந்த எதிர் பந்தலுக்கு வந்தார். சங்கரநாராயணரை 3 முறை வலம் வந்த கோமதி அம்பாள் மீண்டும் தனது பந்தலுக்குத் திரும்பினார்.அவருக்கு தேங்காய், பழம் வழங்கப்பட்டு பட்டுச் சேலை சாற்றப்பட்டது.
இதைத்தொடர்ந்து சங்கரநாராயணர் முகத்திற்கு நேராகப் போடப்பட்டிருந்த திரை விலக்கப்பட்டது.அப்போது ரிஷிப வாகனத்தில் எழுந்தருளிய சுவாமி சரியாக 6.58 மணிக்கு சங்கரநாராயணர் திருக்கோலத்தில் அம்பாளுக்குக் காட்சிக் கொடுத்தார். இருவருக்கும் ஒருசேர தீபாராதனை நடைபெற்றது. அப்போது பக்தர்கள் பக்திக் கரகோஷம் எழுப்பினர்.இரவு 12 மணிக்கு மேல் சுவாமி யானை வாகனத்தில் எழுந்தருளி, சங்கரலிங்கசுவாமியாக கோமதிஅம்பாளுக்குக் காட்சிக் கொடுத்தார்.
ஆடித்தபசு காட்சியைக் காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும்,பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் குவிந்தனர்.கோயிலுக்குள்ளும்,காட்சி நடக்கும் இடத்திலும் பக்தர்கள் செல்வதற்கு மிகவும் சிரமம்பட்டனர்.அவர்கள் பாதுகாப்பாக செல்வதற்கு போலீஸார், நாட்டுநலப்பணித் திட்ட மாணவர்கள்,ஆன்மீக அமைப்புகளைச் சேர்ந்த பெண் பக்தர்கள் மற்றும் தொண்டு நிறுவனத்தினர் உதவி செய்தனர்.
அரியும் நானே சிவனும் நானே
சங்கரநாராயணர் கோயிலில் ஆடி மாதம் பவுர்ணமி தினத்தில் உத்தராடம் நட்சத்திரத்தில் ஆடித்தபசு திருவிழா நடைபெறுவது வழக்கம். சங்கன், பதுமன் ஆகிய இரு நாகர்கள் தங்களுடைய இஷ்ட தெய்வங்களான சிவன், திருமால் ஆகியோரில் யார் பெரியவர் என வாதம் நடத்தியதுடன் அம்பாளிடம் வந்து முறையிட்டனர். அவர் சிவபெருமானிடம் முறையிட்டார். சிவபெருமான், அம்பாளை பொதிகைமலையில் புன்னை வனத்தில் தவம் செய்யும்படிக் கூறினார். அதன்படி அவர் தவம் செய்தார். அம்பிகையின் தவத்துக்கு இரங்கி ஈசன், சங்கரநாராயணராக காட்சியளித்தார். அதுவே தபசுக் காட்சி வைபவமாகக் கொண்டாடப்படுகிறது.