வீட்டுச் சுவர் இடிந்து விழுந்து இளம்பெண் பலி: தஞ்சாவூர் அருகே சோகம்
ஓட்டு வீடு மிகவும் மோசமான நிலையில் இருப்பதால் முத்துவேல், சீதா, கனிமொழி, ரேணுகா ஆகியோர் அஸ்பெஸ்டாஸ் வீட்டில் தூங்கி உள்ளனர்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே மழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் இளம்பெண் பலியானார். பெற்றோர் உட்பட 3 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் கும்பகோணம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள டிட்வா புயல், சென்னைக்கு தென்கிழக்கே 220 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. இப்புயலின் காரணமாக டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று காலை 8.30 மணி நிலவரப்படி அதிகபட்சமாக குருங்குளத்தில் 124 மி.மீட்டர் மழை பதிவானது.

தொடர்ந்து, ஈச்சன்விடுதி 112, நெய்வாசல் 109, ஒரத்தநாடு 104, அய்யம்பேட்டை 93, பேராவூரணி 92, வெட்டிக்காடு 90, பட்டுக்கோட்டை 88, திருவிடைருதூர் 88, பூதலூர் 86, மஞ்சளாறு 86, மதுக்கூர் 86, திருவையாறு 79, தஞ்சாவூர் 77, வல்லம் 70, அணைக்கரை 70, அதிராம்பட்டினம் 67, திருக்காட்டுப்பள்ளி 62,பாபாசம் 59, கும்பகோணம் 51,கல்லணை 36 என மாவட்டம் முழுவதும் சராசரியாக 82.18 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இந்த மழையால் வீட்டு சுவர் இடிந்து விழுந்து தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே இளம் பெண் பலியானார்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே ஆலமன்குறிச்சி உடையார் தெருவை சேர்ந்தவர் முத்துவேல் (56). கூலி தொழிலாளி. இவரது மனைவி சீதா (45), இவர்களின் மகள்கள் கனிமொழி (21) பி.பி.ஏ., பட்டதாரி. ரேணுகா (20) டிப்ளமோ அக்ரி. இவர்களுக்கு சொந்தமான பழைய ஓட்டு வீடு ஒன்றும், ஆஸ்பெஸ்டாஸ் வேயப்பட்ட வீடும் உள்ளது. இந்நிலையில், ஓட்டு வீடு மிகவும் மோசமான நிலையில் இருப்பதால் முத்துவேல், சீதா, கனிமொழி, ரேணுகா ஆகியோர் அஸ்பெஸ்டாஸ் வீட்டில் தூங்கி உள்ளனர்.
தொடர் கனமழையால் நேற்று இரவு சுமார் 11:30 மணிக்கு பழைய ஓட்டு வீட்டின் சுவர் இடிந்து, ஆஸ்பெஸ்டாஸ் சீட்டு வீட்டின் சுவரின் மேல் விழுந்தது. இதில், முத்துவேல், சீதா, கனிமொழி,ரேணுகா ஆகிய நான்கு பேரும் படுகாயமடைந்தனர். அக்கம் பக்கத்தினர் சத்தம் கேட்டு, காயமடைந்தவர்ளை மீட்டு, கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் முத்துவேலின் இரண்டாவது மகள் ரேணுகா, மேல் சிகிச்சைக்காக, தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி ரேணுகா நள்ளிரவு இறந்தார். இதுகுறித்து வருவாய்துறை மற்றும் கும்பகோணம் தாலுக்கா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கும்பகோணம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






















