World Elephants Day : ஆகஸ்ட் - 12 : உலக யானைகள் தினம்.. பல்வேறு கோணங்கள்.. பல்வேறு கோரிக்கைகள்
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வனவிலங்கு பாதுகாப்பு சட்ட திருத்தங்களைத் தொடர்ந்து அனைத்து கோயில்களிலும் யானைகளை கொண்டு வர யானை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆண்டு தோறும் ஆகஸ்ட் 12 -ம் தேதி உலக யானைகள் தினம் கொண்டாடப்படுகிறது. நமது சுற்றுச்சூழல் அமைப்பில் அவற்றின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் சர்வதேச யானைகள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. மேலும், அவற்றின் பாதுகாப்பு மற்றும் வாழ்விடம் பற்றிய விழிப்புணர்வை பரப்புவதிலும் இந்த நாள் முக்கியத்துவம் பெறுகிறது. முன்பு இருந்தது போல யானைகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதாக எந்த ஒரு தகவல்களும் வரவில்லை என்றாலும், வேட்டையாடுதல், வாழ்விட அழிப்பு, சிறைபிடிப்பது, தவறாக நடத்துவது போன்ற செயல்கள் இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது இதனால் யானைகளின் எண்ணிக்கை குறைய வாய்ப்புகளும் அதிகரித்துள்ளது என்றால் அது மிகையாகாது. குறிப்பாக ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் யானைகள் பல்வேறு அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருகின்றன.
2012 -ம் ஆண்டு ஆகஸ்ட் 12 -ம் தேதி அன்று தான் முதன் முதலில் உலக யானைகள் தினம் அனுசரிக்கப்பட்டது. தாய்லாந்தை தளமாகக் கொண்ட யானை மறு அறிமுகம் அறக்கட்டளை, கனேடிய திரைப்பட தயாரிப்பாளர் பாட்ரிசியா சிம்ஸுடன் இணைந்து சர்வதேச யானைகள் தின நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வருகிறது. அந்த நாளில் ஆசிய மற்றும் ஆப்பிரிக்க யானைகளின் அவலநிலை மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு வருகிறது. கடந்த 2012 -ம் ஆண்டு முதல், சிம்ஸ் உலக யானைகள் தினத்தை முன்னெடுத்து நடத்தி வருகிறார்.
பொதுவாக யானையினை கண்டால் காண கண் கோடி வேண்டும் என்பது போல யானையை பார்க்க பார்க்க நேரம் போவதே தெரியாது. யானையை பார்பதற்கு சற்று பயமாக உயர்ந்தாலும், யானை என்ற பெயரைக் கேட்டவுடனே நம் மனதில் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி உண்டாகும். அது மட்டும் இன்றி தற்போதைய கால சூழலில் ஏற்படும் மன அழுத்தத்தை கூட கோயிலுக்கு சென்று யானையினை கண்டால் மன அழுத்தம் குறைந்து ஒருவித நிம்மதி கிடைப்பதாகவும் கூறுகின்றனர். 'யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே' என்ற பழமொழியை நாம் அனைவரும் கேட்டிருப்போம். திருவிழாக்காலங்களில் சாமி புறப்பாட்டின் போது முன்னே அழகாக அசைந்தாடி வரும் யானையின் அழகை காணக் கண் கோடி வேண்டும் என்பார்கள்.
தமிழர்களுக்கும், யானைகளுக்கும் இடையே பிரிக்க முடியாத உறவு காலம் காலமாக இருந்து வருகிறது. மதுரை மீனாட்சியின் அரசாட்சி குறித்து பாடும் 'அல்லி அரசாணி மாலை' என்ற பாடல் தொகுப்பில் 'மாடு கட்டி போரடித்தால் மாளாது செந்நெல்லென்று ஆனை கட்டிப் போரடிக்கும் அழகான தென்மதுரை' என்று பாடப்பட்டுள்ளது. மன்னர்கள் காலத்தில் யானைப்படை மிக முக்கியமானதாக கருதப்பட்டது. அந்த காலகட்டத்தில் பெரிய கோயில்களை கட்டுவதற்கு யானைகள் பல உதவிகள் செய்துள்ளன. யானைகள் செய்த உதவிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இன்றளவும் யானைகளை கோயில்களில் வைத்து பராமரித்து வருகின்றனர்.
அதேபோல தனியார் சிலரும் யானைகளை பராமரித்து வருகின்றனர். யானைகளிடம் ஆசிர்வாதம் வாங்குவதன் மூலம் தோஷங்கள் நீங்குவதாக ஐதீகம். யானை காலடி மண்ணை பூஜைக்கு பயன்படுத்துவது வழக்கம். யானையின் முடியில் மோதிரம் செய்து அணியும் பழக்கமும் இன்றளவும் நடைமுறையில் உள்ளது. யானைகள் இருக்கும் கோயில்களில் யானைகளை இறைவனாக நினைத்து அவற்றுக்கு கஜ பூஜைகளும் செய்யப்பட்டு வருகிறது. சுவாமிக்கு அபிஷேகம் செய்யும் புனித நீர் அடங்கிய கலசத்தை யானை மீது வைத்து கொண்டு வரும் வழக்கம் காலம் தொட்டு இருந்து வருகிறது.
இத்தகைய சிறப்புகள் வாய்ந்த யானைகளின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாக கோயில்களில் குறைந்து வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் கோயில்களில் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் பத்திற்கும் மேற்பட்ட யானைகள் இருந்த நிலையில், தற்போது மயிலாடுதுறை மாவட்டத்தில் இரண்டு யானைகள் மட்டுமே உள்ளன. சமீபத்தில் மத்திய அரசு வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தில் சில திருத்தங்களை கொண்டு வந்துள்ளது. அதில், யானைகளை வாங்கவும், விற்கவும் அனுமதி அளிப்பதாக கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தின் பல்வேறு திருக்கோயில்களுக்கு விரைவில் யானைகள் வரும் வாய்ப்பு உருவாகியுள்ளது. அடுத்த ஆண்டு உலக யானைகள் தினத்திற்குள் தமிழகத்திலுள்ள பெரும்பான்மையான திருக்கோயில்களுக்கு யானைகள் வரவேண்டும் என்பதே யானை ஆர்வலர்களின் மற்றும் இங்குள்ள யானை பிரியர்களின் எதிர்பார்ப்பாகும்.