பல ஆண்டுகள் கோரிக்கை இனியாவது உயிர்பெறுமா? திருச்சியில் அரசு போக்குவரத்து கழக தனிபிரிவு அமையுமா?
திருச்சி மாநகரம் சுமார் 15 லட்சம் மக்களைக் கொண்டுள்ளது. இந்த நகரத்தின் போக்குவரத்து சேவைகளை சீரமைக்கவும், மேம்படுத்தவும் ஒரு தனிப் பிரிவு அவசியம்.

தஞ்சாவூர்: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் திருச்சிக்கு ஒரு புதிய பிரிவை உருவாக்க வேண்டும். அதன் தலைமையகத்தை திருச்சியிலேயே அமைக்க வேண்டும் என்பது பயணிகள் மற்றும் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை. ஆனால் இன்னும் அதற்கு எவ்வித ஆரம்பக்கட்ட பணிகளோ, உறுதியோ வழங்கப்படவில்லை. இந்த கோரிக்கையை திருச்சி எம்.பி. துரை வைகோவும் கையில் எடுத்துள்ளார்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் திருச்சிக்கு ஒரு புதிய பிரிவை உருவாக்கி, அதன் தலைமையகத்தை திருச்சியிலேயே அமைக்க வேண்டும் என்று மாநில போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரிடம் திருச்சி எம்.பி. துரை வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். தற்போது, திருச்சி, கும்பகோணம் பிரிவின் கீழ்தான் இயங்குகிறது.
திருச்சி மாநகரம் சுமார் 15 லட்சம் மக்களைக் கொண்டுள்ளது. இந்த நகரத்தின் போக்குவரத்து சேவைகளை சீரமைக்கவும், மேம்படுத்தவும் ஒரு தனிப் பிரிவு அவசியம். திருச்சி நகரின் நகரமயமாக்கல் மற்றும் கல்வி மையமாக அதன் நிலை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, புதிய போக்குவரத்து கழக பிரிவை திருச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு உருவாக்க வேண்டும் என்று எம்.பி. துரை வைகோ தனது மனுவில் முக்கியமான சாரம்சமாக குறிப்பிட்டுள்ளார். இந்த கோரிக்கையின் அவசியத்தை அமைச்சர் ஏற்றுக்கொண்டதாக துரை வைகோ அரியலூரில் அமைச்சரைச் சந்தித்த பிறகு தெரிவித்தார்.
திருச்சிக்கு ஒரு தனி டிஎன்எஸ்டிசி பிரிவு இல்லாததால், புதிய பேருந்து வழித்தடங்களை உருவாக்குவதிலும், பேருந்துகளை அவ்வப்போது மேம்படுத்துவதிலும் சிரமங்கள் ஏற்படுகிறது. மத்திய மண்டலத்தில் உள்ள பேருந்து ஆர்வலர்களுக்கு இது ஒரு பெருமைக்குரிய தருணமாக பிப்ரவரி மாத நிலவரப்படி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (TNSTC) கும்பகோணம் கோட்டம், சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தை (MTC) பயணிகளின் எண்ணிக்கையில் விஞ்சிவிட்டது.
3,441 பேருந்துகளைக் கொண்ட இந்தக் கோட்டம், 11,347 லட்சம் பயணிகளைப் பதிவு செய்து, சென்னை MTC-யின் 10,727 லட்சம் பயணிகளை முந்தியுள்ளது. ஆனால், இந்த "ஆர்வம்" இத்துடன் முடிந்துவிடுகிறது. கும்பகோணம் கோட்டத்தின் பரந்த அளவு மற்றும் அதன் செயல்பாட்டு எல்லைகள் சென்னையை வெகுதூரம் பின்னுக்குத் தள்ளுகின்றன. 11 மாவட்டங்களை உள்ளடக்கிய அதன் நிர்வாக மற்றும் செயல்பாட்டு சவால்கள் அதன் சேவைகளைப் பாதிக்கிறது. திருச்சிக்கு ஒரு தனி கோட்டம் வேண்டும் என்ற கோரிக்கை பயணிகளிடமும், மக்களிடமும் மற்றும் ஊழியர்களிடமும் வலுப்பெற்று வருகிறது. கும்பகோணம் கோட்டத்தைப் பிரித்து திருச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய கோட்டம் ஒன்றை உருவாக்க டிஎன்எஸ்டிசி தொழில்நுட்பக் குழு ஒப்புதல் அளித்து 13 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், இந்தத் திட்டம் இன்னும் அமலுக்கு வரவேயில்லை.
மயிலாடுதுறை முதல் ராமநாதபுரம் வரை 300 கி.மீ. பரப்பளவை உள்ளடக்கிய இந்தக் கோட்டம், மாநிலத்திலேயே மிகப்பெரியது. இதில் ஆறு மண்டலங்கள், அதிக பணிமனைகள் மற்றும் அதிக பயணிகள் எண்ணிக்கை உள்ளன. இருப்பினும், இந்த பரந்த அதிகார வரம்பு திறமையான நிர்வாகம், வழித்தடத் திட்டமிடல் மற்றும் பேருந்து நவீனமயமாக்கல் ஆகியவற்றிற்குத் தடையாக உள்ளது. புதிய வழித்தடங்கள் மற்றும் நவீன பேருந்துகள் கிடைக்காததால் பயணிகள் அதிருப்தியில்தான் உள்ளனர்.
புதிதாக திருச்சி கோட்டம் அமைக்கப்பட்டால் கரூர், அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகியவற்றைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தால், நிர்வாகத்தை பரவலாக்கவும், வழித்தடங்களை மேம்படுத்தவும், பேருந்து பயன்பாட்டைச் சீராக்கவும் உதவும். மாநிலத்தின் நான்காவது அதிக மக்கள் தொகை கொண்ட நகரமாக இருந்தபோதிலும், திருச்சியின் போக்குவரத்துத் தேவைகள் இன்னும் கும்பகோணத்திலிருந்து தொலைதூரத்தில் நிர்வகிக்கப்படுகின்றன. இது உள்ளூர் தேவைகளைப் புரிந்துகொள்வதில் சிரமத்தை ஏற்படுத்துகிறது. குறைந்த தளம் கொண்ட பேருந்துகள் மற்றும் மின்சாரப் பேருந்துகள் இயக்குவதிலும் இது பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று பயணிகள் தரப்பில் புகார்கள் தொடர்ந்து எழுந்து வருகிறது.
திருச்சியில் ஒரு புதிய கோட்டத்தை உருவாக்கத் தேவையான உள்கட்டமைப்பு உள்ளது. ஆனால் நிதிச் சுமை இந்த முடிவை தாமதப்படுத்துகிறது என்று டிஎன்எஸ்டிசி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர். பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் திறக்கப்பட்ட பிறகும், திருச்சி நகரத்திற்குள் நேரடி இணைப்பு மோசமாக உள்ளது. இதனால் பயணிகள் பல பேருந்துகள் மாறி செல்லும் நிலையுள்ளது. இதனால் பணம் மற்றும் நேரம் விரயமாகிறது. புதுக்கோட்டை, கரூர் மற்றும் ராமேஸ்வரம் போன்ற தொலைதூரப் பணிமனைகளிலிருந்து ஊழியர்கள் கும்பகோணம் தலைமையகத்திற்குப் பயணம் செய்வதிலும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். எனவே இந்த முறையாவது திருச்சி கோட்டம் அமைக்க ஆரம்பப்புள்ளி வைக்கப்படுமா என்று மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.






















