இத்தனை நாள் இல்லாமல் இப்போது ஏன்? சீமான் கேள்வி எழுப்பியது எதற்காக?
தற்போது முருகனை வைத்து அரசியல் செய்கிறார்கள். இந்த விவகாரத்தில் நீதிபதியின் உத்தரவை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் இரு தரப்பையும் அழைத்து பேசி தீர்க்கவே உத்தரவிட்டிருக்க வேண்டும்.

தஞ்சாவூர்: இவ்வளவு நாள் இல்லாமல் இப்போது மகளிர் உரிமைத் தொகையை வழங்க என்ன காரணம் என்று நாம் தமிழர் கட்சி சீமான் கேள்வி எழுப்பினார்.
நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை கலந்தாய்வு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இதில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார்.
முன்னதாக நிருபர்களை சந்தித்த அவர் கூறியதாவது: தமிழ்நாட்டை இரண்டு கட்சிகளும் மாறி மாறி ஆண்டு வருகிறார்கள். மாதம் ஆயிரம் பெறக்கூடிய நிலையில் பெண்களை வைத்துள்ளார்கள். இவ்வளவு நாள் இல்லாமல் மகளிர் உரிமைத் தொகையை இப்போது எதற்காக கொடுக்க வேண்டும். ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.
என்னுடைய தாய்மார்கள், சகோதரிகளை இந்த நிலைக்கு தள்ளி விட்டார்களே என்று இந்த அரசை நினைத்து வெட்கப்படுகிறேன், வேதனைப்படுகிறேன். எல்லா துறைகளிலும் ஊழல் மலிந்து விட்டது. அயோத்தியில் ராமரை வைத்து அரசியல் செய்தார்கள்.
தற்போது முருகனை வைத்து அரசியல் செய்கிறார்கள். இந்த விவகாரத்தில் நீதிபதியின் உத்தரவை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் இரு தரப்பையும் அழைத்து பேசி தீர்க்கவே உத்தரவிட்டிருக்க வேண்டும். தமிழ்நாடு காவல்துறையால் தான் இந்த பிரச்சனை பூதாகரமானது. பாரதியை நான் எங்கும் பேசுவேன். நாளை திமுகவோ அல்லது திராவிட இயக்கமோ பாரதி குறித்து கூட்டம் நடத்தினால் அதிலும் பேசுவேன். நான் எங்கு நிற்கிறேன் என பார்க்காதீர்கள். என்ன பேசுகிறேன் என பாருங்கள்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பா.ஜ.க.விற்கு சதித்திட்டம் தீட்டி கொடுப்பதே திமுக தான். இவ்வாறு அவர் கூறினார்.





















