எப்போங்க? படகு சவாரி விடுவது எப்போங்க: கடல் போல் காட்சியளிக்கும் சமுத்திரம் ஏரி
எப்போங்க... படகு சவாரி எப்போங்க என்று தஞ்சை மக்கள் வெகு ஆர்வமாக கேட்கின்றனர். எங்கு? எதற்கு தெரியுங்களா?
தஞ்சாவூர்: எப்போங்க... படகு சவாரி எப்போங்க என்று தஞ்சை மக்கள் வெகு ஆர்வமாக கேட்கின்றனர். எங்கு? எதற்கு தெரியுங்களா?
மிகவும் பழமையான சமுத்திரம் ஏரி
தஞ்சை அருகே மாரியம்மன் கோவில் பகுதியில் சமுத்திரம் ஏரி உள்ளது. இந்த ஏரி தஞ்சையில் இருந்து 4 கி.மீ தூரத்தில் உள்ளது. பழமையான இந்த சமுத்திரம் ஏரி 287 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரி மூலம் 6 கிராமங்களில் உள்ள 1,116 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த ஏரி நாயக்கர் காலத்தில் வெட்டப்பட்டது. பின்னர் வந்த மராட்டியர்களின்ஆட்சிக்காலத்தில் ஏரி புனரமைக்கப்பட்டது. இந்த ஏரி குறித்த ஓவியம் லண்டனில் உள்ள பிரிட்டிஷ் நூலகத்தில் இடம் பெற்றுள்ளது. இந்த ஏரிக்கு கல்லணை கால்வாயில் இருந்து தண்ணீர் வரும். மராட்டிய அரச குடும்பத்தினர் இந்த ஏரியில் படகில் பயணம் செய்து மாரியம்மன் கோயிலுக்கு சென்று வந்ததாகவும் கூறப்படுகிறது.
ரூ.8.84 கோடி மதிப்பீட்டில் நடந்த பல்வேறு பணிகள்
இந்த ஏரி எப்போதும் கடல் போல் காட்சி அளிக்கும். இந்த ஏரியை சுற்றுலாத் தலமாக மாற்ற வேண்டும் என்று தஞ்சை பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து கல்லணை கால்வாய் கோட்ட பொதுப்பணித் துறை சார்பில் இது தொடர்பாக விரிவான அறிக்கை தயார் செய்யப்பட்டது. ரூ.8.84 கோடி மதிப்பீட்டில் இதற்காக திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு பல்வேறு பணிகள் நடைபெற்றது. அதன்படி சமுத்திர ஏரியில் பறவைகள் இங்கு தங்கி குஞ்சு பொறிக்கும் மூன்று தீவுகள் ஏற்படுத்தப்பட்டு அதில் மரங்கள் நடப்பட்டு பறவைகள் தங்குமிடமாக உருவாக்கப்பட்டது. மேலும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இதனை சுற்றி பார்க்கும் வகையில் படகு சவாரி வசதியும் ஏற்படுப்பட்டது.
மேலும், பொழுது போக்கு மீன்பிடி பயிற்சித் தளமும் அமைக்கப்பட்டது. சிறுவர் விளையாட்டு பூங்கா, வாகன நிறுத்துமிடத்துடன் கூடிய பெரிய சுற்றுலாத் தலமாக அமைக்கப்பட்டது. குழந்தைகள் விளையாடுவதற்காக சறுக்கு மரம் ஊஞ்சல் உள்ளிட்ட விளையாட்டு சாதனங்களும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கு நடை மேடைகள் அமைக்கப்பட்டுள்ளது.
மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்ட சமுத்திரம் ஏரி
அதனை கடந்த மார்ச் மாதம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இங்கு தினமும் மாலை நேரங்களில் பொதுமக்கள் தங்கள் குடும்பங்களுடன் வந்து பொழுதை போக்கி செல்கின்றனர். கடந்த மார்ச் மாதம் சமுத்திரம் ஏரியில் 30 சதவீதம் தண்ணீர் மட்டுமே இருந்தது. அப்போது கோடை காலம் என்பதால் கால்நடைகள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு மட்டுமே இந்த நீா் போதுமானதாக இருக்கும் என படகு சவாரி இயக்கவில்லை. ஆனால் தற்போது கல்லணை கால்வாயில் மூலம் தண்ணீர் நிரப்பப்பட்டு முழு கொள்ளளவில் தண்ணீர் உள்ளது. மேலும் சமுத்திரம் ஏரியில் படர்ந்திருந்த ஆகாய தாமரைகளும் அகற்றப்பட்டு விட்டது.
பள்ளி காலாண்டு விடுமுறை
இந்த நிலையில் தற்போது பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலாண்டு தேர்வு நிறைவு பெற்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் தஞ்சை மக்கள் தங்கள் குழந்தைகளை அழைத்துக் கொண்டு மாலை வேளையில் பூங்காக்களுக்கு செல்வர். இதனால் மாரியம்மன்கோவில் பகுதியில் உள்ள சுற்றுலா தலமாக மாறியுள்ள சமுத்திர ஏரியில் படகு சவாரி இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்துள்ளனர்.