தஞ்சையில் வண்ண வண்ண விநாயகர்கள்... காகித கூழால் தயாரிப்பு: மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு
தஞ்சாவூர் வெண்ணாற்றங்கரை பகுதியில் வர்ணங்கள் மின்ன காகித கூழால் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் விற்பனை வெகு மும்முரமாக நடந்து வருகிறது.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் வெண்ணாற்றங்கரை பகுதியில் வர்ணங்கள் மின்ன காகித கூழால் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் விற்பனை வெகு மும்முரமாக நடந்து வருகிறது. இதில் பலவித உயரங்களில் கிடைப்பதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். இதனால் விநாயகர் சிலைகள் விற்பனை கனஜோராக நடந்து வருகிறது.
பிள்ளையார் உருவானது குறித்து ஆன்மீக கதை ஒன்று உண்டு. ஒரு நாள் பார்வதி தேவி குளிக்கச் சென்றாள். அங்கு காவலுக்கு தனது உதவியாளர்கள் யாரும் இல்லாததால், தன் உடம்பில் இருந்த அழுக்கு மூலம் ஒரு சிறுவனை உருவாக்கி உயிர்கொடுத்து காவலுக்கு நிற்கச் சொன்னார். யாரையும் உள்ளே விடவேண்டாம் எனவும் கட்டளையிட்டார்.
அப்போது அங்கே வந்த சிவபெருமானை தடுத்தான் அந்தச் சிறுவன். கோபமுற்ற சிவபெருமான் அவன் தலையை துண்டித்தார். பின்னர் பார்வதியின் மைந்தன் என்பதை அறிந்த சிவபெருமான் அச்சமுற்று, தன் பூதகணங்களை அழைத்து அவர்கள் முதலில் பார்க்கும் ஜீவராசியின் தலையை துண்டித்து எடுத்து வருமாறு கூறினார். அவர்கள் முதலில் பார்த்ததோ ஒரு யானையை. சிவபெருமானின் கட்டளைப்படி அந்த யானையின் தலையை துண்டித்து எடுத்து வந்தனர்.
அதனை சிவபெருமான் அந்த சிறுவனின் உடம்பில் ஒட்டவைத்து மீண்டும் உயிர் கொடுத்தார். அப்போது வெளியே வந்த பார்வதி பிள்ளை யாரு? எனக் கேட்டார். அதுவே அச்சிறுவனுக்கு பெயராகிவிட்டது. அச்சிறுவன் தான் பிள்ளையார். இவர் இந்துக்களின் முதற்கடவுளாக வணங்கப்படுகிறார்.
இந்துக்கள் கொண்டாடும் பண்டிகைகளுள் ஒன்று விநாயகர் சதுர்த்தி விழா. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு ஒரு மாதத்துக்கு முன்னரே விநாயகர் சிலைகள் தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெறும். ஆனால் தற்போது விநாயகர் சிலைகள் செய்வதற்கான மூலப்பொருட்கள் விலையேற்றம் காரணமாக பல்வேறு இடங்களில் சிலைகள் தயாரிக்கப்படுவது நிறுத்தப்பட்டு விட்டது. ஒரு சில இடங்களில் மட்டும் தயார் செய்யப்பட்டு பல்வேறு இடங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
காஞ்சிபுரத்தில் விற்பனை செய்யப்படும் விநாயகர் சிலைகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அதன்படி தஞ்சைக்கும் விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வந்துள்ளன. இதில் 1 அடி முதல் 7 அடி உயரம் வரையிலான வட இந்திய விநாயகர் சிலைகள், ராஜ கணபதி, சிம்ம வாகனம், பசு வாகனம், மான் மற்றும் பசு வாகனம், யானை வாகரம், அன்ன பட்சி வாகனம், மாடு மற்றும் எலி வாகனம், தாரை விநாயகர் போன்ற விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வந்துள்ளன.
இந்த சிலைகள் அனைத்தும் காகித கூழால் தயாரிக்கப்பட்டு, ரசாயன கலவை இல்லாத வர்ணம் பூசப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளன. தஞ்சை பள்ளியக்ரகாரம் வெண்ணாற்றரை ஆனந்தவல்லியம்மன் கோவில் தெருவில் இந்த சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த சிலைகள் ரூ.100 முதல் ரூ.18 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது.
இதுகுறித்து சிலைகள் விற்பனை செய்து வரும் பூங்குழலி சண்முகம் கூறுகையில், "நாங்கள் சுய உதவிக்குழுக்கள் மூலம் விநாயகர் சிலைகளை தயார் செய்து முன்பு விற்பனை செய்து வந்தோம். அதன் பின்னர் வெளியூர்களில் இருந்து வாங்கி வந்து விற்பனை செய்து வருகிறோம். தற்போது மூலப்பொருட்கள் விலை உயர்ந்து விட்டது. இதனால் சிலை கொள்முதல், லாரி வாடகை என தற்போது சிலைகளின் விலை கணிசமாக உயர்ந்து விட்டது. கொரோனா காரணமாக 3 ஆண்டுகள் விற்பனை நடைபெறவில்லை. கடந்த ஆண்டு முதல் மீண்டும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இங்கிருந்து கும்பகோணம், நாகப்பட்டினம், பேராவூரணி, வல்லம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்து சிலைகளை வாங்கி செல்வார்கள்" என்றார்.