விஜயதசமியையொட்டி வித்யாரம்பம் நிகழ்ச்சி - நெல் மணிகளில் தமிழ் எழுத்துகள் எழுதி வழிபாடு
ஒட்டக்கூத்தரால் பாடல் பெற்ற கூத்தனூர் சரஸ்வதி அம்மன் கோயிலில் விஜயதசமியை முன்னிட்டு சிறப்பு தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தமிழகத்திலேயே சரஸ்வதி கடவுளுக்கு என்று தனி கோயில் திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் அருகே உள்ள கூத்தனூர் கிராமத்தில் அமைந்துள்ளது. ஒட்டக்கூத்தரால் பாடல் பெற்ற கூத்தனூர் சரஸ்வதி அம்மன் கோயிலில் விஜயதசமியை முன்னிட்டு சிறப்பு தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கலை தெய்வமான சரஸ்வதியை வழிபட்டால் கல்வி ஞானம், கலை ஞானம் பெருகும் என்பது மக்களின் நம்பிக்கை.
இந்த நிலையில் நேற்றைய தினம் சரஸ்வதி பூஜையை ஒட்டி நேற்று சரஸ்வதி அம்மனின் பாத தரிசன வழிபாடு நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். மேலும் நோட்டு, புத்தகங்கள், பேனா ஸ்லேட் போன்றவற்றை சரஸ்வதி அம்மனின் பாதத்தில் வைத்து வெண் தாமரை மலர்களை வைத்து வணங்கி குழந்தைகளை சிலேட் நோட்டு போன்ற பொருட்களில் எழுத வைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.
சரஸ்வதி அம்மனின் உற்சவமூர்த்தி சிலைக்கு வெண்பட்டு உடுத்தி அலங்காரம் செய்யப்பட்டு காட்சி அளிக்கப்பட்டது. இன்றைய தினமும் வெண்பட்டு உடுத்தப்பட்டு வெண் தாமரை மலர்களை சரஸ்வதி அம்மனுக்கு காணிக்கையாக ஏராளமான பக்தர்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்துள்ளனர். கொரோனா தொற்று காரணமாக வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமைகளில் கோயில்கள் மூடப்பட்டிருக்கும் என்றும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும் தமிழ்நாடு அரசு முன்னர் அறிவித்திருந்தது.
இந்த நிலையில் நேற்று மாலை அனைத்து கிழமைகளிலும் கோயில்கள் திறந்திருக்கும், பக்தர்களுக்கு வழிபாடு நடத்த அனுமதி உண்டு எனவும் தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதனடிப்படையில் இன்று கூத்தனூர் சரஸ்வதி அம்மன் கோயிலில் பக்தர்களுக்கு வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. விஜயதசமி நாளன்று புதிதாக தொழில் தொடங்குவோர் மற்றும் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது போன்ற நிகழ்வுகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி கூத்தனூர் சரஸ்வதி அம்மன் கோயில் ஏராளமான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்து வந்து நெல் மணிகளில் தமிழ் எழுத்துக்களை எழுதி சரஸ்வதி அம்மனை வழிபாடு செய்து வருகின்றனர். கொரோனா தொற்று காரணமாக முகக் கவசம் அணியாதவர்களுக்கு கோயிலுக்குள் அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல பக்தர்கள் அனைவருக்கும் கிருமிநாசினிகள் வழங்கப்பட்டு அதன் பின்னரே கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஏராளமான பக்தர்கள் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால் பாதுகாப்பிற்காக நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சிதம்பரத்தில் மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் - 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் கைது