ஏழு டூ ஒன்பது நீங்க வரவே கூடாது... திருச்சி கலெக்டரின் அறிவிப்பு எதற்காக?
திருச்சி பழைய பால்பண்ணை பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு உயிர்பலி ஏற்படுகிறது என்று தொடர்ந்து ஏராளமான புகார்கள் கூறப்பட்டு வந்தது.

தஞ்சாவூர்: போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து கனரக வாகனங்களும் திருச்சி மாநகருக்குள் வர முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை மாவட்ட கலெக்டர் சரவணன் வெளியிட்டுள்ளார். போக்குவரத்து நெரிசலால் சிக்கி திணறும் திருச்சி என்று ஏபிபிநாடு செய்தி வெளியிட்டு இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
திருச்சி பழைய பால்பண்ணை பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு உயிர்பலி ஏற்படுகிறது என்று தொடர்ந்து ஏராளமான புகார்கள் கூறப்பட்டு வந்தது. கனரக வாகனங்கள் குறிப்பிட்ட நேரத்தில்தான் நகர் பகுதியில் சென்று வர வேண்டும். ஆனால் அனைத்து நேரத்திலும் கனரக வாகனங்கள் இயக்கப்படுவதால் நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் ஏற்பட்டு வந்தது. இது குறித்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் தொடர்ந்து புகார்கள் எழுப்பி வந்தனர்.

முக்கியமாக பள்ளி தொடங்கும் நேரம் மற்றும் பள்ளி முடிந்து மாணவ, மாணவிகள் வீட்டிற்கு திரும்பும் நேரத்தில் வெகுவாக பாதிக்கப்பட்டு வந்தனர். குறிப்பாக பால்பண்ணை சிக்னல், திருச்சி கன்டோன்மென்ட் சாலை, ரயிலடி ரவுண்டானா, அமெரிக்கன் ஆஸ்பத்திரி சாலை, உறையூர் பகுதி என்று பல்வேறு பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசலால் மக்கள் வெகுவாக அவதியடைந்து வந்தனர். பணி முடிந்து வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பும் பெண்கள் வெகுவாக அவதியடைந்து வந்தனர். இதுகுறித்து ஏபிபிநாடு செய்தி வெளியிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பழைய பால் பண்ணை ரவுண்டானா பகுதியில் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். இந்நிலையில் திருச்சி - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக திருச்சி மாவட்ட கலெக்டர் சரவணன் அறிவித்து உள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது: தினந்தோறும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து கனரக வாகனங்களும் பால்பண்ணை சந்திப்பு வழியாக திருச்சி மாநகருக்குள் வருவதற்கு முற்றிலும் தடை செய்யப்படுகிறது. மேற்படி நேரத்தில் திருச்சி மாநகருக்குள் வருகை தரும் கனரக வாகனங்கள் துவாக்குடி - பஞ்சப்பூர் மார்க்கத்தில் செல்ல வேண்டும். பஞ்சப்பூர்- தஞ்சாவூர் நெடுஞ்சாலை வழியாக செல்லும் எல்லா இடைநில்லா பேருந்துகளும் (பாய்ண்ட் டூ பாய்ண்ட் பஸ்கள்) பஞ்சப்பூர்- தஞ்சாவூர் பைபாஸ் (அரைவட்ட சுற்றுச்சாலை) மார்க்கத்தை பயன்படுத்த வேண்டும்.
திருவெறும்பூர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, மாநகர துணை போலீஸ் கமிஷனர் (தெற்கு), வட்டார போக்குரத்து அதிகாரி, வருவாய் கோட்டாட்சியர் ஆகியோர் அடங்கிய ஒரு துணைக்குழு மேற்கண்ட நடைமுறைகளை ஆய்வு செய்து காலமுறையாக அறிக்கை அனுப்பி வைக்க ஏதுவாக வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இந்த அறிவிப்பை முறையாக தொடர்ந்து நடைமுறைப்படுத்தினால் திருச்சி பால்பண்ணை மற்றும் திருச்சி நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் பெருமளவில் குறைந்து விடும். இதனால் வாகன ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்கள் நிம்மதி அடைவார்கள். அறிவிப்புடன் இல்லாமல் தொடர்ந்து செயல்படுத்தி தொழில் வளர்ச்சியில் வெகுவாக முன்னேற்றம் கண்டு வரும் திருச்சியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பு.





















