திருவாரூர் பயிற்சி மருத்துவர் தற்கொலை வழக்கு... சிபிசிஐடிக்கு மாற்றம்..
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவர் தற்கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவர் தற்கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை பயிற்சி மருத்துவர் விடுதியில் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் மோகனூரைச் சேர்ந்தவர், கடந்த 2017 ஆம் ஆண்டு நீட் தேர்வில் வெற்றி பெற்று கடந்த நான்கு வருடங்களாக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்றுவிட்டு தற்போது திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக இருந்து வருகிறார். இவர் பயிற்சி மருத்துவர்களுக்கான விடுதியில் தங்கி வந்துள்ளார்.
கடந்த இரண்டு நாட்களாக அவர் பணிக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து, மாணவி இரண்டு நாட்களாக பணிக்கு வராதது குறித்து கேட்பதற்காக அதே விடுதியைச் சேர்ந்த அவரது தோழி ஒருவர் மாணவிக்கு போன் செய்தார். போனை எடுக்காத காரணத்தினால் கதவைத் தட்டியுள்ளார். கதவும் திறக்கப்படாததால் வாட்ச்மேன் மற்றும் இதர பயிற்சி மருத்துவர்கள் சேர்ந்தது கதவை உடைத்து பார்த்தபோது அவர் தற்கொலை செய்தது தெரிய வந்தது.
உடனடியாக அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததுடன் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து திருவாரூர் தாலுகா காவல்துறையினர் மாணவி எழுதிய கடிதத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
மாணவி, கடந்த ஆறு மாத காலமாக மன அழுத்தத்திற்கு சிகிச்சை பெற்று வந்ததாகவும் இதன் காரணமாக அவருக்கு துணையாக அவரது அக்கா வந்து விடுதியில் 2 நாட்கள் தங்கியிருந்ததாகவும் கூறப்படுகிறது. இச்சூழலில், திருவாரூர் டிஎஸ்பி சிவராமன் தலைமையில் காவல்துறையினர் விடுதியில் தங்கியிருந்த சகப் பயிற்சி மருத்துவர்கள் மற்றும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் ஆகியோரிடம் இந்த தற்கொலை தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
மேலும், தற்கொலை செய்து கொண்ட பயிற்சி மருத்துவரின் உடல் பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. விடுதி அறையில் பெண் பயிற்சி மருத்துவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மருத்துவ மாணவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இப்பொழுது நாமக்கல் மாவட்டம் மோகனூர் கிராமத்திலிருந்து அவர்களுடைய பெற்றோர்கள் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வருகை தந்து உயிரிழந்த தனது மகளின் உடலை பார்த்து கதறி அழும் காட்சி அனைவரையும் கண்கலங்க வைத்தது.
மேலும், நீட் தேர்வு முதன்முதலாக தமிழ்நாட்டில் வந்த பொழுது அதிக மதிப்பெண் பெற்று மருத்துவராகி நம் கிராமத்திற்கும் நம் நாட்டிற்கும் பெருமை சேர்த்திட வேண்டும் என எனது மகள் கூறி இருந்தால் ஆனால் இன்று தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்திருக்கிறார் இதற்கான காரணம் என்ன என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி உண்மை தன்மையை வெளிக்கு கொண்டு வர வேண்டும் என பெற்றோர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)