திருவாரூர்: உரிய காரணமின்றி பத்திர பதிவு செய்ய மறுத்த பதிவுத்துறை தலைவருக்கு ரூ. 1 லட்சம் அபராதம்
புகார்தாரருக்கு மன உளைச்சல் மற்றும் பொருள் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளதாக இந்த ஆணையம் கருதி புகார்தாரருக்கு இழப்பீடாக ஒரு லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்
உரிய காரணமின்றி பத்திர பதிவு செய்ய மறுத்ததற்காக பத்திர பதிவுத்துறை தலைவர் உள்ளிட்ட மூன்று பேருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபாரதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை மருதங்காவெளி தோப்பைச் சேர்ந்த இந்திராணி தனக்கு சொந்தமான 115 குழி புஞ்சை நிலத்தை தனது மகன் சக்திவேல் பெயருக்கு 25,000 ரூபாய் மதிப்புள்ள முத்திரைத் தாளில் 03.05.2019 தேதியிட்ட செட்டில்மெண்ட் பத்திரம் எழுதிக் கொடுத்து அதனை பதிவு செய்வதற்காக பதிவு கட்டணம் ரூ.4000, கணினி கட்டணம் ரூ.100 குறுந்தகடு கட்டணம் ரூ.50 உட்பிரிவு கட்டணம் ரூ.40 என மொத்தம் 4190 ரூபாய் செலுத்தி இணையதளம் மூலம் முத்துப்பேட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவிற்காக தாக்கல் செய்துள்ளார். இதனையடுத்து தாயும் மகனும் பதிவிற்காக முத்துப்பேட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில் நேரில் ஆஜராகும் போது இந்த சொத்து தொடர்பாக முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் உள்ளதாகவும், விசாரணை முடியும் வரை முத்துப்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் பத்திரப்பதிவை தற்காலிகமாக நிறுத்தி வைக்க தெரிவிப்பதாகவும் கூறி செக் ஸ்லீப் மூலம் திருப்பி உள்ளனர்.
இதனையடுத்து சக்திவேல் தரப்பில் வழக்கறிஞர் மூலம் முத்துப்பேட்டை சார்பதிவாளர், நாகப்பட்டினம் மாவட்ட பதிவாளர் மற்றும் பத்திர பதிவுத்துறை தலைவர் ஆகியோருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதற்கு முத்துப்பேட்டை சார் பதிவாளர் அலுவலகம் சார்பில் 19.06.2019 அன்று முத்துப்பேட்டை உதவி காவல் ஆய்வாளர் கடிதத்தின் அடிப்படையிலேயே ஆவணம் பதிவு செய்வதை மறுத்ததை ஒப்பு கொண்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து சேவை குறைபாடு செய்ததாக கூறி சக்திவேல் தரப்பில் திருவாரூர் மாவட்ட குறைதீர் ஆணையத்தில் 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சக்கரவர்த்தி மற்றும் உறுப்பினர்கள் லட்சுமணன் பாக்கியலட்சுமி அடங்கிய அமர்வு முத்துப்பேட்டை காவல் ஆய்வாளர் கொடுத்துள்ள கடிதத்திற்கு எந்தவித சட்டப்படியான அங்கீகாரமும் இல்லை என தெரிந்திருந்தும் சார் பதிவாளர் ஆவணத்தை திருப்பி உள்ளதாகவும் இதனால் முத்துப்பேட்டை சார் பதிவாளர் பதிவு சட்டத்தின்படி நடந்து கொள்ளவில்லை என்றும் மாவட்ட பதிவாளர் மற்றும் பத்திர பதிவுத்துறை தலைவரின் சுற்றறிக்கையின்படி நடந்து கொள்ளவில்லை என்றும் இந்திராணி விசாரணைக்கு ஆஜராகததால் பத்திர பதிவுத்துறை அலுவலகத்திற்கு வந்தால் விசாரணைக்கு அனுப்பி வைக்க கோரி கொடுக்கப்பட்ட ஆணவம் என்றும் இந்த ஆணையம் கருதுகிறது. மேலும் சிவில் சம்பந்தமான புகார்களை காவல் நிலையத்தில் எடுக்கக் கூடாது என்று உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் வழிகாட்டி இருந்தும் அதனை மதிக்காமல் முத்துப்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் விசாரணை முடியும் வரை பத்திர பதிவு செய்யக்கூடாது என்று கூறியிருப்பது எந்த சட்டப்படியும் ஏற்க இயலாத ஒன்றாகும். மேலும் இந்திராணியை விசாரணைக்காக காவல்நிலையம் அனுப்பி வைக்கும் பொருட்டு சார்பதிவாளர் வேண்டுமென்றே ஆவணத்தை திருப்பி அனுப்பி உள்ளதை இந்த ஆணையம் சேவை குறைபாடாக கருதுகிறது.
மேலும் மாவட்ட பதிவாளர் மற்றும் பதிவுத்துறை தலைவரின் கீழ் சார் பதிவாளர் பணியாற்றி வருவதாலும் புகார்தாரர் தரப்பில் அனுப்பப்பட்ட வழக்கறிஞர் நோட்டீஸிற்கு எந்தவித பதிலும் மாவட்ட பதிவாளரும் பதிவுத்துறை தலைவரும் அளிக்கவில்லை என்பதால் இதனை சேவை குறைபாடாக இந்த ஆணையம் கருதுகிறது. இவர்களின் செயல் அனைத்தும் புகார்தாரருக்கு மன உளைச்சல் மற்றும் பொருள் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளதாக இந்த ஆணையம் கருதி புகார்தாரருக்கு இழப்பீடாக ஒரு லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் 03.05.2019 தேதியிட்ட தான செட்டில்மெண்ட் பத்திரத்தை இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட ஆறு வாரத்துக்கு காலத்திற்குள் பதிவு செய்து தர வேண்டும் என்றும் மேலும் வழக்கு செலவிற்காக ரூபாய் பத்தாயிரம் வழங்க வேண்டும் எனவும் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்