மூலிகைச் செடிகளின் பயன்கள்.....இளம் தலைமுறைகளுக்கு எடுத்துச் சொல்லும் மூலிகைப் பெண்மணி..!
கரிசாலையின் மீது எனக்கு ஆர்வம் அதிகம் என்பதால், கரிசாலை அதிக அளவில் வளர்க்கப்படுகிறது. நினைவாற்றலுக்கு வல்லாரையை மட்டுமே கூறுகிறோம். கரிசாலையும் நினைவாற்றலுக்கு பயன்படக்கூடிய மூலிகைச் செடியாகும்.
மூலிகைச் செடிகளின் பயன்களை இளம் தலைமுறைகளுக்கு எடுத்துச் சொல்லும் ஓய்வு பெற்ற ஆசிரியர் மூலிகைப் பெண்மணி அமுதவல்லி.
திருவாரூர் அருகே சேந்தமங்கலத்தில் வசிக்கும் அமுதவல்லி. இவர் பணிபுரியும் காலத்திலிருந்தே மூலிகைச் செடிகளை இலவசமாக வழங்கியதால், மூலிகைப் பெண்மணி என்ற பெயர் பெற்றவர். சேந்தமங்கலத்தில் இவரது வீட்டுக்கு முன்புறம் பறவைகளுக்கு நீரும், உணவும் தரும் வகையில் மேடை அமைக்கப்பட்டுள்ளது. தெருவிலும் இவர் வழங்கிய மரக்கன்றுகள் வளர்ந்து கொண்டிருக்கின்றன. வீட்டுத் தோட்டத்தில், தரையே கண்ணுக்குத் தெரியாதபடி, பல்வேறு வகையான செடிகள் வளர்ந்து நிற்கின்றன. அனைத்துமே மூலிகைச் செடிகள் என்கிறார் அமுதவல்லி.நம்மாழ்வாரிடம் நற்பெயர் வாங்கிய இவருக்கு மூலிகைகளின் மீது எவ்வாறு ஆர்வம் வந்தது, இலவசமாக தரும் எண்ணம் ஏன் ஏற்பட்டது என்று கேட்டோம்.
அவர் தெரிவித்தது, "எனது தந்தை 20 மாடுகள் போல வைத்திருந்தார். அத்துடன், வீட்டில் காய்கனித் தோட்டமும் அமைத்திருந்தோம். மாடுகளிலிருந்து கறக்கும் பாலை, விற்காமல் எங்களிடம் பணி புரிவோருக்கே தந்தை கொடுத்து விடுவார். அதேபோல் தோட்டத்திலிருந்து விளையும் காய்கனிகளையும் அவர்களுக்கு கொடுப்போம். இதற்கென தொகை ஏதும் பெறுவதில்லை. இதனாலேயே, எந்தப் பொருள்களையும் விற்கும் எண்ணம் எனக்கு ஏற்பட்டதில்லை. எனவேதான், வீட்டில் விளைவிக்கும் மூலிகைகளையும், காய்கனி உள்ளிட்டவற்றையும் வேண்டுவோருக்கு இலவசமாக வழங்கி வருகிறேன். ஆசிரியராக பணி புரிந்தபோது மூச்சு விடுவதில் (ஆஸ்துமா) சிரமம் இருந்தது. இதனால், அலோபதி வைத்திய முறைகளை நாடியபோது பக்க விளைவுகள் ஏற்பட்டன. செலவு அதிகமானதே தவிர, குணமடையவில்லை. மூச்சு விடுவது தொடர்பான பிரச்னைக்கு மூலிகைகளை நாடினால் என்ன என்ற எண்ணம் தோன்றியது. அதுபோல, மூலிகைகளை பயன்படுத்தத் தொடங்கியபோது, எனது மூச்சுப் பிரச்னை நீங்கியது.
ஏற்கனவே, சிறு வயதில் காய்கறித் தோட்டம் வளர்த்திருந்த அனுபவம், மூலிகையால் மூச்சுப் பிரச்னை நீங்கியது ஆகியவை எனது எண்ணத்துக்கு மேலும் ஆர்வத்தை ஊட்ட, மூலிகைச் செடிகளை சேகரித்து தோட்டமாக வைக்கத் தொடங்கினேன். நான் பணிபுரிந்த பள்ளியில், கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் வந்து, மஞ்சள் கரிசாலை குறித்து விளக்கிப் பேசினார். அதன்பிறகு, தஞ்சையில் நடைபெற்ற கண்காட்சியிலிருந்து இரண்டு மஞ்சள் கரிசாலை செடிகளை வாங்கி வந்து தோட்டத்தில் வைத்தேன். இந்த மஞ்சள் கரிசாலை வள்ளலார் கண்ட மூலிகையாகும். வள்ளலார் 485 மூலிகைகள் குறித்து நமக்கு தெரிவித்துள்ளார். அவற்றை பயன்படுத்தினாலே, நோயில்லாமல் நீண்ட நாள்கள் இளமையாக வாழ முடியும். அதன்படியே, மூலிகைத் தோட்டத்தை உருவாக்கி, மற்றவர்களுக்கும் வழங்கத் தொடங்கினேன். பணிபுரியும் காலத்தில் பிரமி, வல்லாரை, கரிசாலை, ஓமவல்லி, துளசி, தூதுவளை, காசினி,பெரியாநங்கை, பொன்னாங்கண்ணி, முசுமுசுக்கை, வாத நாராயணம், செம்பருத்தி, பசலை, திருநூற்றுப்பச்சிலை, மணத்தக்காளி உள்ளிட்ட பல்வேறு செடிகளை வளர்க்கத் தொடங்கினேன். பின்னர், பள்ளிகளில் நிகழ்ச்சிகள் நடைபெறும்போது, இந்த மூலிகைகளை இலவசமாகவே வழங்கினேன். தற்போது, சேந்தமங்கலத்துக்கு குடிபெயர்ந்தாலும் அங்கும் மூலிகைத் தோட்டத்தை உருவாக்கி உள்ளேன். இதுதவிர, 5 வெவ்வேறு இடங்களில் மூலிகைத் தோட்டம், பழத்தோட்டம் என அமைத்து பராமரித்து வருகிறேன். அங்கு இந்த செடிகளுடன் நிலவேம்பு உள்ளிட்டவையும் வளர்க்கப்படுகின்றன.
கரிசாலையின் மீது எனக்கு ஆர்வம் அதிகம் என்பதால், கரிசாலை அதிக அளவில் வளர்க்கப்படுகிறது. நினைவாற்றலுக்கு வல்லாரையை மட்டுமே கூறுகிறோம். கரிசாலையும் நினைவாற்றலுக்கு பயன்படக்கூடிய மூலிகைச் செடியாகும். ஒடித்து வைத்தாலே வளரும் தன்மை கொண்டது. மூலிகைகளை பிரபலப்படுத்துவதை அறிந்த நம்மாழ்வார், திருவாரூரிலுள்ள எனது வீட்டுக்கு 2002 இல் வந்தார். அப்போது அவர் பெரிய அளவில் பிரபலமாகவில்லை. ஆட்டோவில் வந்து இறங்கிய அவருக்கு, இரண்டு பேர் எனது வீட்டை அடையாளம் காட்டிவிட்டுச் சென்று விட்டனர். பின்னர், திரும்பி தனியாகவே வேறு ஆட்டோவில் ஏறிச் சென்றார். இதேபோல், அவர் இறப்பதற்கு ஒரு மாதத்துக்கு முன்பு மீண்டும் வந்தார். அப்போது பிரபலமடைந்திருந்தார். குடவாசலில் நடைபெறும் போராட்டத்துக்குச் சென்றவர், வீட்டுக்கு வந்து மாடித் தோட்டத்தை பார்வையிட்டார். மாடித் தோட்டத்தை சிறந்த முறையில் உருவாக்கி இருப்பதாக பாராட்டி விட்டுச் சென்றார். தற்போது, தோட்டத்தில் அமைக்கப்பட்டிருக்கும் கொடி வகை மூலிகைகள், காய்கனிச் செடிகள் அவருடைய ஆலோசனையின்படியே அமைக்கப்பட்டவை.
அதாவது, வீடு என்பது சுத்தமாக இருக்க வேண்டும், தோட்டம் என்பது காடாக இருக்க வேண்டும் என நம்மாழ்வார் கூறுவார். கொடி போன்றவைகளின் அருகில் பயனுள்ள மரங்களை வைத்து விட்டால், அவைகள் இயற்கையாக தானாக வளரும் என்பார். அதன்படியே, இங்குள்ள படரும் செடிகளுக்கு அருகில் மரங்கள் நடப்பட்டு, வளர்க்கப்பட்டு வருகின்றன. பணி ஓய்வுக்குப்பிறகும் மூலிகைச் செடிகளை அனைவருக்கும் வழங்கி வருகிறேன். திருவிழாக்கள், கோயில் நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களுக்கு மூலிகைச் செடிகள் வழங்கும் பணிகளை செய்கிறேன். தற்போது, செடிகளை விட விதைகளை அனைவரும் விரும்புவதால், விதைகளாகவும் வழங்கி வருகிறேன். வீடு தேடி வருவோருக்கும், அவர்களுக்கு தேவையான மூலிகைச் செடிகளை வழங்கி வருகிறேன். நம்மாழ்வாரைப் பார்த்து வளர்ந்த விதையொன்று, பயனுள்ள செடிகள் தரும் விருட்சமாக வளர்ந்து நிற்கிறது. 69 வயதை கடந்து விட்ட விருட்சத்திடமிருந்து பயன் பெற்ற இளம் தலைமுறையினர் ஏராளம். தான் பெற்ற மூலிகைகளின் தம்மோடு நிறுத்தி விடாமல் அடுத்த கட்டத்துக்கு இளம் தலைமுறையினர் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதே, மூலிகைப் பெண்மணி அமுதவல்லியின் வேண்டுகோளாக உள்ளது.