வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் இருப்பதால் மீண்டும் புத்துயிர் பெறும் தட்டச்சு பயிற்சி நிலையங்கள்..!
1980ம் ஆண்டு கால கட்டத்தில் அதிக இளைஞர்கள் பட்டப்படிப்பு முடித்துவிட்டதால், ஏற்பட்ட வேலையில்லா திண்டாட்டத்தின்போது தட்டச்சு முடித்தால் எளிதாக வேலை பெறலாம் என்ற விழிப்புணர்வும் ஏற்பட்டது.
வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் இருப்பதால் மீண்டும் புத்துயிர் பெறும் தட்டச்சு பயிற்சி நிலையங்கள். மீண்டும் தட்டச்சு பயிற்சி நிலையங்களில் குவிய தொடங்கிய மாணவர்கள்.
தட்டச்சுக் இயந்திரத்தை 1714ம் ஆண்டு ஹென்றிமில் என்பவர் ஆங்கில தட்டச்சு கண்டுபிடித்தார். இதனைத் தொடர்ந்து 1936ம் ஆண்டில் இலங்கையை சேர்ந்த முத்தையா என்பவர் தமிழ் தட்டச்சு இயந்திரத்தை கண்டுபிடித்தார். அதைத் தொடர்ந்து 1954ம் ஆண்டில் ஸ்டாண்டர்ட் தட்டச்சு இயந்திரம் வடிவமைக்கப்பட்டது. அந்த தட்டச்சுதான் தற்போது நாம் பயன்படுத்தி வருகின்றோம். சிறிய அலுவலகம் தொடங்கி, ஜனாதிபதி அலுவலகம் வரை ஸ்டெனோ கிராபர் என்ற பணியிடம் இன்றளவும் உள்ளது. இந்தப் பணிக்கு தகுதியாக தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தெரிந்த நபரே பணியமர்த்தப்படுகின்றார்கள். இன்று தட்டச்சுக்கு பதிலாக கம்ப்யூட்டர் அந்த இடத்தை ஆக்கிரமித்துள்ளது. இது காலம் ஏற்படுத்திய மாற்றம் என்றாலும் இன்றளவும் இந்த ஸ்டெனோ கிராபர் பணியிடத்துக்கு தட்டச்சு பயிற்சிதான் அடிப்படையாக உள்ளது. கடந்த 1980 ம் ஆண்டு கால கட்டத்தில் அதிக இளைஞர்கள் பட்டப்படிப்பு முடித்துவிட்டதால், ஏற்பட்ட வேலையில்லா திண்டாட்டத்தின்போது தட்டச்சு முடித்தால் எளிதாக வேலை பெறலாம் என்ற விழிப்புணர்வும் ஏற்பட்டது. அதன் காரணமாக தெருவுக்குத் தெரு தட்டச்சு பயிலகங்கள் உருவாக தொடங்கின.
பத்தாம் வகுப்பு படிக்கும்போதிலிருந்தே தட்டச்சு வகுப்புக்கு பிரத்தியேகமாக மாணவ, மாணவிகள் சென்று வந்தனர். அந்த காலகட்டத்தில் நேரடியாக அரசிடம் அங்கீகாரம் பெற்ற தட்டச்சு பயிலகங்கள் 3300. இது தவிர ஏனைய தட்டச்சு பைலகங்கள் மேற்கண்ட 3300 தட்டச்சு பைலகங்கள் வாயிலாக தேர்வுக்கு அனுப்பி வந்தனர். இந்த நிலையில், கம்ப்யூட்டரின் வரவு காரணமாக தட்டச்சுக்கு மெல்ல மெல்ல மவுஸ் குறைய தொடங்கியது. கடந்த 1998ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரை தட்டச்சு முற்றிலும் மறந்து போன ஒன்றாகிவிட்டது. உலகமயமாக்கல், தாராளமய மக்கள் கொள்கையின் காரணமாக வேலை வாய்ப்பு அதிக அளவு பெருகியதால் பெரும்பாலானோர் அரசு வேலையை ஒரு பொருட்டாக கருதாமல் பல்வேறு வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டனர். இதன் காரணமாக நேரடியாக கணினியை கையாள தெரிந்தால்போதும் என்கின்ற மோகத்தில், தட்டச்சு பயிற்சிக்கு மாணவர்களின் வரத்து குறைந்துவிட்டது. இதனால் தமிழகம் முழுவதும் பல தட்டச்சு பயிலகங்கள் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டன. இந்த காலகட்டத்தில் சுமார் 1700 தட்டச்சு பைலகங்கள் மூடப்பட்டதாக அரசின் சுற்றறிக்கைகள் வாயிலாக அறிய முடிகிறது.
தட்டச்சு இயந்திர உற்பத்தியும் நிறுத்தப்பட்டது. இத்தகைய நிலை காரணமாக பயன்பாட்டிலிருந்த தட்டச்சு இயந்திரங்கள் பழுதடைந்து பழைய இரும்பு கடைக்கு செல்லும் நிலை உருவானது. ஆனால், சமீப ஆண்டுகளாக அரசு வேலைக்காக போட்டி தேர்வுகள் எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தனியார் நிறுவனங்களிலும் வேகமாக கணினியில் தட்டச்சு செய்பவருக்கே வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படுகின்றது. எளிதாக அரசுப் பணியை பெறுவதற்கான வழியை மாணவர்கள் ஆராய்ந்தபோது, குரூப் 4 எழுதும் போட்டி தேர்வர்களில், தட்டச்சு தெரிந்தவராக இருந்தால் அவர்களுக்கான மதிப்பெண் 60 மதிப்பெண் கூடுதலாக கணக்கிடப்படுகிறது என்பதை அறிந்துகொண்ட பலரும், தற்சமயம் தட்டச்சு பயிற்சியை நாடி வருகின்றனர். இதன் காரணமாக மூடப்பட்ட பலதட்டச்சு பைலகங்கள் மீண்டும் திறக்கும் நிலை உருவாகியுள்ளது. தட்டச்சு பயிற்சி கொடுப்பதற்கான டெக்னிக்கல் ஆசிரியர்கள் பற்றாக்குறையாக உள்ளனர். இதனை அதிகரிக்க 15 ஆண்டுகளுக்குப் பின்னர் டெக்னிக்கல் ஆசிரியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடப்பாண்டில் அரசு கூடுதலாக தட்டச்சு ஆசிரியர் பயிற்சியை நடத்தியது. இது வரவேற்கத்தக்கது. ஆண்டுதோறும் இந்தப் பயிற்சியை நடத்த வேண்டும். நிறுத்தப்பட்ட தட்டச்சு இயந்திர உற்பத்தியை மீண்டும் தொடங்க, சம்பந்தப்பட்ட நிறுவனங்களை அரசு ஊக்கப்படுத்த வேண்டும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்