எனக்கே இடமில்லையா... பைக் ஸ்டாண்ட் ஊழியருக்கு பளார் - காவலரை சஸ்பெண்ட் செய்த எஸ்.பி.,
பைக் ஸ்டாண்ட் உரிமையாளர் அறிவுரைப்படி ஸ்டாண்ட் ஊழியர் அன்பழகன் தான் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் தனது வாகனத்தை நிறுத்த இடமில்லை என்று கூறிய பைக் ஸ்டாண்ட் ஊழியருக்கு பளார் விட்ட காவலரின் வீடியோ வைரலானதை அடுத்து திருவாரூர் எஸ்.பி., அந்த காவலரை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளார்.
காவல்துறை உங்கள் நண்பன்... உங்கள் பிரச்னைகளை தைரியமாக சொல்லுங்கள் என்று போலீஸ் அதிகாரிகள் அடிக்கடி கூறி வருகிறார்கள். ஆனால் அந்த நண்பன்... எதிரிபோல் இறங்கி அடித்த சம்பவம்தான் தஞ்சை மாவட்டத்தை கடந்த 2 நாட்களாக அதிர்ச்சி அடைய செய்து வருகிறது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் புதிய பேருந்து நிலையம், அருகே வக்கீல் மாணிக்கம் என்பவருக்கு சொந்தமான ஜி.எஸ். என்ற இருசக்கர வாகன நிறுத்துமிடம் உள்ளது. இங்கு நன்னிலம் டி.எஸ்.பி., அலுவலகத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக வினோத் என்பவர் பணிபுரிந்து வருகிறார்.
இவர் 2 நாட்களுக்கு முன்பு தனது குடும்பத்துடன் கும்பகோணம் வந்துள்ளார். தொடர்ந்து தனது பைக்கை நிறுத்த பைக் ஸ்டாண்டிற்கு வந்துள்ளார். அப்போது, அங்கிருந்த, வாகன நிறுத்த ஊழியர் அன்பழகன் என்பவர் வாகனத்தை நிறுத்த இடமில்லை என்று வினோத்திடம் கூற, நான் யார் தெரியுமா... போலீஸ் என்று தெரிவித்துள்ளார். யாராக இருந்தாலும் வாகனம் வைக்க இடமில்லை என ஊழியர் அன்பழகன் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த வினோத் உடனே கும்பகோணம் பேருந்து நிலையத்திலுள்ள புறக்காவல் நிலையத்தில் பணியாற்றிய சுந்தரம் என்ற போலீஸ்காரரை அழைத்து வந்தார். பின்னர் இருவரும் அன்பழகனிடம் பேசிக்கொண்டிருக்கும் போது, போலீஸ்காரர் வினோத், ஸ்டாண்ட் ஊழியர் அன்பழகனை கோபத்துடன் பளார் என்று அடித்து தாக்கினார். இச்சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவானது. இந்த சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாக காவல்துறையினருக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.
இதற்கிடையில் பைக் ஸ்டாண்ட் உரிமையாளர் அறிவுரைப்படி ஸ்டாண்ட் ஊழியர் அன்பழகன் தான் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதுகுறித்து போலீஸ்காரர் வினோத் தரப்பில் கூறுகையில், பைக்கை நிறுத்த இடமில்லை என்று கூறி தன்னை தகாத வார்த்தைகளால் அன்பழகன் திட்டியதால் அறைந்ததாக தெரிவித்தார்.
ஆனால் அப்பகுதியில் உள்ளவர்கள் கூறுகையில் ஸ்டாண்ட்டில் நிறுத்த இடமில்லை என்பதால் அன்பழகன் பலரையும் திருப்பி அனுப்பி விட்டார். அதுபோல்தான் அந்த போலீஸ்காரரையும் திருப்பி அனுப்பினார். ஆனால் அவர் மற்றொரு போலீசை அழைத்து வந்து அன்பழகனிடம் பேசிக் கொண்டு இருக்கும் போதே சடாரென்று அறைந்து விட்டார். காவல்துறை உங்கள் நண்பன் என்று சொல்லிக் கொண்டு இப்படி எதிரி போல் தாக்கினால் என்ன செய்வது என்று கேள்வி எழுப்பினர். இதற்கிடையில் அன்பழகனை போலீஸ்காரர் வினோத் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதுகுறித்து திருவாரூர் எஸ்.பி., சுரேஷ்குமார் கவனத்திற்கு இந்த சம்பவம் சென்றது. உடனே போலீஸ்காரர் வினோத்தை சஸ்பெண்ட் செய்து திருவாரூர் எஸ்.பி., நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்