Thiruvarur: குடவாசல் அருகே நெல் கொள்முதல் நிலைய கட்டுமான பணியை தொடங்க விடாமல் விவசாயிகள் எதிர்ப்பு
கொள்முதல் நிலையத்திற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தின் அருகே அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி செயல்படுவதால் பள்ளி குழந்தைகளுக்கும் அச்சுறுத்தலாக அமையும்
குறுகலான சாலை மற்றும் அருகாமையில் பள்ளி உள்ளதால் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைய உள்ள இடத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே பெரும்பண்ணையூர் கீழ் தெருவில் கடந்த 1984 ஆம் ஆண்டு முதல் தற்காலிக இடத்தில் திறந்தவெளி நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. திரியம்பகாபுரம்,மருதமாணிக்கம், சர்வமானியம், எலந்தவனஞ்சேரி, கோவில்பத்து, பெரும்பண்ணையூர் கிராமங்களை சேர்ந்த 1000 ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்களில் விளைவிக்கப்படும் நெல்லை இந்த கொள்முதல் நிலையத்தின் வாயிலாக விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் இதற்கு நிரந்தர கட்டிடம் கட்ட வேண்டும் என்கிற விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் புதிதாக நெல் கொள்முதல் நிலையம் கட்ட முடிவு எடுத்தது. அதன் அடிப்படையில் கோவில் பத்து கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் இடம் தேர்வு செய்து கட்டுமான பணியும் தொடங்க உள்ளது. இந்த நிலையில் கோவில் பத்து கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையத்தை தொடங்கக்கூடாது எனவும் நெல் கொள்முதல் நிலையம் இருக்கின்ற பகுதியில் அதிக குடியிருப்புகள் உள்ளதால் நெல் மூட்டைகளை ஏற்றிச் செல்ல வந்து செல்லும் லாரிகளால் அப்பகுதி மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் எனவும், கொள்முதல் நிலையத்திற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தின் அருகே அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி செயல்படுவதால் பள்ளி குழந்தைகளுக்கும் அச்சுறுத்தலாக அமையும் என்றும் மேலும் தற்போது அரசு தேர்வு செய்துள்ள இடத்தில் 200 ஆண்டுகால பழமையான அரசமரம் இருப்பதாகும் அதையும் அரசு வெட்ட முயற்சிப்பதாகவும் கூறி விவசாயிகளும் பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவிப்பதோடு, நெடுஞ்சேரி சாலையில் விவசாயிகள் தங்களுக்கு சொந்தமான நிலத்தில் நெல் கொள்முதல் நிலையம் கட்டித் தர வேண்டும் என்றும் கூறி தற்போதைய நெல் கொள்முதல் நிலைய கட்டுமான பணியை தொடங்க விடாமல் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக திருவாரூர் முதுநிலை மண்டல மேலாளர் ராஜ ராஜனிடம் கேட்டபோது, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தான் நெல் கொள்முதல் நிலையத்தை புதிதாக கட்ட ஏற்பாடு செய்யப்பட்டது. அரசு புறம்போக்கு நிலத்தில் மட்டுமே நெல் கொள்முதல் நிலையம் கட்ட முடியும், விவசாயிகளுக்கான இடத்தில் நெல் கொள்முதல் நிலையம் கட்ட முடியாது என்றும் மேலும் தற்போது விவசாயிகள் அளிக்கின்ற இடமானது இடத்திற்கு அருகில் நீர்நிலை அமைந்துள்ளதால் அந்த இடத்தில் கட்டப்படும் கட்டிடத்தின் உறுதித் தன்மை பாழ்படும் என்பதால் விவசாயிகள் மாற்று இடமாக அரசு புறம்போக்கு நிலத்தை தேர்வு செய்து கொடுத்தால் அதில் கட்டிடம் கட்டுவதற்கு தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் இது குறித்து விவசாயிகள் கூறும்போது, நாங்கள் தேர்வு செய்து கொடுத்த இடத்தில் இடம் பள்ளமாக இருப்பதாகவும் அதில் மண் கொட்ட வேண்டும் என்று அதிகாரிகள் கூறியதால் மண் கொட்டி மேடுப்படுத்தி கொடுத்தும் கூட அதில் கொள்முதல் நிலையம் கட்ட அரசு மறுப்பதாகவும் தெரிவித்துள்ளனர். அரசு அதிகாரிகள் விவசாயிகள் இடையே நெல் கொள்முதல் நிலையம் கட்டுவதில் இருவேறு கருத்துக்கள் நிலவுவதால் கட்டுமான பணி தாமதம் அடையும் சூழல் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்