திருவாரூர்: மருத்துவ காப்பீடு தொகை தொடர்பான வழக்கு - மாவட்ட ஆட்சியருக்கு நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
மருத்துவ காப்பீடு தொகை கேட்டு மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் மண்டல மேலாளர் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கும் விண்ணப்பித்துள்ளார். இது நாள் வரை அவருக்கு காப்பீடு தொகை வழங்கப்படவில்லை.
அரசு ஊழியருக்கு மருத்துவ காப்பீடு தொகை தரவில்லை என்று தொடரப்பட்ட வழக்கில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட நான்கு பேர் உடனடியாக மருத்துவ செலவு தொகை வழங்க நடவடிக்கை வேண்டும் என நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி உப்பு குளத்தெருவை சேர்ந்த மகேந்திர பூபதி என்பவர் திருத்துறைப்பூண்டியில் இயங்கி வரும் மாநில வரி அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 25.07.2018 அன்று தஞ்சையில் உள்ள உதவி ஆணையர் அலுவலகத்தில் முக்கிய கோப்புகளை ஒப்படைத்து விட்டு அவர் வரும்போது மன்னார்குடியில் கழிவறையில் சிறுநீர் கழிக்க சென்றதில் அங்கு தவறி விழுந்துள்ளார். இதில் அவரது வலது முழங்கால் மூட்டு மூன்று செதில்களாக உடைந்து திருத்துறைப்பூண்டி தனியார் மருத்துவமனையில் ரூபாய் 48,000 செலவு செய்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து ஒரு மாத காலம் மருத்துவ விடுப்பில் இருந்த அவர் மருத்துவ காப்பீடு தொகை கேட்டு மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் மற்றும் மண்டல மேலாளர் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கும் விண்ணப்பித்துள்ளார். இது நாள் வரை அவருக்கு காப்பீடு தொகை வழங்கப்படவில்லை.
இதுகுறித்து அவர் முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு புகார் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து கடந்த ஜூலை 2020இல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அரசு ஊழியருக்கு மருத்துவ செலவு தொகை வழங்கலாம் என்கிற அரசு ஆணையினை குறிப்பிட்டும், திருத்துறைப்பூண்டி தனியார் மருத்துவமனை புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சேரவில்லை என்பது குறித்து தனக்கு தெரியவில்லை என்றும், மேலும் அப்போது தனக்கு ஏற்பட்ட வலியின் காரணமாகவும் அறுவை சிகிச்சைக்கு பிறகு சுயநினைவு இல்லாத காரணத்தினாலும் தன்னால் வேறு மருத்துவமனைக்கு செல்ல முடியவில்லை என்பதை குறிப்பிட்டும் தனக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் பொருள் நஷ்டத்திற்கு இழப்பீடாக இரண்டு லட்ச ரூபாய் கேட்டும் திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் இது குறித்து வழக்கு தொடர்ந்து உள்ளார்.
இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய ஆணையத் தலைவர் சக்கரவர்த்தி மற்றும் உறுப்பினர்கள் பாக்கியலட்சுமி லட்சுமணன் அடங்கிய அமர்வு, உயர் நீதிமன்ற உத்தரவின்படி புகார்தாரர் புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தில் உறுப்பினராக இருப்பதாலும் தமிழ்நாடு மருத்துவ வருகை விதிகளின் படி புகார்தாரருக்கு மருத்துவ செலவுத்தொகை கிடைக்கக் கூடியது என இந்த ஆணையம் கருதுவதாலும், மேலும் மருத்துவ செலவுக்கான கொடுக்கப்பட்ட ஆவணங்களை கணக்கிட்டு மருத்துவ இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், வழக்கு செலவிற்காக 3000 ரூபாயும் மாவட்ட ஆட்சியர் மாவட்ட கருவூல அதிகாரி மாவட்ட சுகாதார இணை இயக்குனர் மற்றும் யுனைடெட் இன்சூரன்ஸ் நிறுவன மண்டல மேலாளர் ஆகியோர் இணைந்து உத்தரவு பிறப்பித்த ஆறு வார காலத்திற்குள் வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது. அதே சமயம் புகார்தாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் பொருள் நஷ்டத்திற்கு கோரிய இழப்பீடு தொகையினை இந்த ஆணையம் ஏற்க மறுக்கிறது என்றும், இதனால் இந்த மனு பகுதியாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது என்றும் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்