7 ஆண்டுகளாக மின்சார வசதி இல்லாமல் வாழ்ந்து வரும் 40 குடும்பத்தினர் - வேதனையில் கிராம மக்கள்
மழைக்காலம் வந்தால் பாதி அளவு நீரில் வீட்டில் வசித்து வருகிறோம் இரவு நேரத்தில் விஷ ஜந்துகள் குழந்தைகளை கடித்து பலமுறை மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
![7 ஆண்டுகளாக மின்சார வசதி இல்லாமல் வாழ்ந்து வரும் 40 குடும்பத்தினர் - வேதனையில் கிராம மக்கள் thiruvarur 40 families living without electricity for 7 years Villagers in agony TNN 7 ஆண்டுகளாக மின்சார வசதி இல்லாமல் வாழ்ந்து வரும் 40 குடும்பத்தினர் - வேதனையில் கிராம மக்கள்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/01/61eff4ec10b9b20325c5f4daba97912f1664599165251185_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் அருகே தென்கால் என்ற இடத்தில் 40 கூலித் தொழிலாளர் குடும்பங்கள் வீடுகள் அமைத்து கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் திருவாரூர் நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளுக்காக இந்த வீடுகள் அனைத்தும் மாற்று இடம் தருவதாக கூறி அகற்றப்பட்டன. இந்த நிலையில் அம்மையப்பன் அருகே அம்மா நகர் என்ற இடத்தில் இருந்த கருவேல மர காடுகளை அழித்து விட்டு மாற்று இடம் அந்த மக்களுக்கு தரப்பட்டது. இந்த நிலையில் இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் கட்டிட தொழிலாளர்கள் செங்கல் சூளையில் பணியாற்றுபவர்கள், சுமைதூக்கும் தொழிலாளர்கள், உள்ளிட்ட தினக்கூலி தொழிலாளர்கள் குடும்பங்கள் மட்டுமே இங்கு வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 7 ஆண்டுகளாக அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மின்சார வசதி ஏற்படுத்தி தரப்படவில்லை என அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். தமிழ்நாட்டில் நாங்கள் தனித்தீவில் வசிப்பது போல் வசித்து வருகிறோம் என இப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் கூறும் பொழுது... சாலை விரிவாக்கத்திற்காக நாங்கள் வாழ்ந்து வந்த இடத்தை விட்டுக் கொடுத்தோம் ஆனால் தற்பொழுது நாங்கள் இருக்கும் இடத்தில் மின்சார வசதி தண்ணீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் தவித்து வருகிறோம். ஒவ்வொரு நாளும் பகலில் மட்டுமே நிம்மதியாக இருப்பதாகவும் இரவு நேரம் வந்தால் ஒவ்வொருநாளும் எங்களின் உயிரை கையில் பிடித்துக்கொண்டு வாழ்ந்து வருவதாக கண்ணீர் மல்க அந்த பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். ஒவ்வொரு முறையும் தேர்தல் சமயத்தில் மட்டும் அரசியல்வாதிகள் வந்து உடனடியாக உங்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தருகிறோம் என தெரிவித்து விட்டு செல்கிறார்கள் ஆனால் அதனுடன் அந்த கதை முடிந்துவிடுகிறது நாங்கள் பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
குழந்தைகளையும் முதியவர்களையும் வீட்டில் வைத்துக் கொண்டு வாழ்ந்து வருவது மிகப் பெரிய கஷ்டமாக இருக்கிறது மழைக்காலம் வந்தால் பாதி அளவு நீரில் வீட்டில் வசித்து வருகிறோம் இரவு நேரத்தில் விஷ ஜந்துகள் குழந்தைகளை கடித்து பலமுறை மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருகிறார்கள். சில குழந்தைகள் விஷ ஜந்துக்கள் கடித்து உயிர் இழந்திருக்கிறார்கள். ஆனால் இதுவரை மின்சார வசதி மட்டும் தரப்படவில்லை தற்போது தமிழகத்தில் புதிதாக வந்துள்ள ஆட்சியாளர்கள் எங்களின் வாழ்க்கை நிலையை கருத்தில் கொண்டு மின்சார வசதி குடிநீர் வசதி உள்ள அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தர வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டதற்கு நீர்நிலை புறம்போக்கு இடத்தில் அந்த பகுதி மக்கள் வசித்து வருகின்றனர் அதனால் அவர்களுக்கு மின்சார வசதி கொடுக்க முடியாத நிலை உள்ளது மாற்று இடம் ஏற்பாடு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)