39 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்ப்பல்கலைக்கழகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்ட அச்சு இயந்திரம்
’’தமிழக முதல்வர் திறந்து வைத்தால், சிறப்பாக இருக்கும் என்பதற்காக, அவரது கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது’’
தஞ்சாவூர் தமி்ழ்ப் பல்கலைக் கழகத்திற்கு சொந்த உபயோகத்திறகாகக 39 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு கோடி மதிப்பீட்டில் புதியதாக ஜெர்மனியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அச்சு இயந்திரம், பல கட்ட முயற்சிகளுக்கு பிறகு தற்போது இடமாற்றம் செய்யப்பட்டு பிரத்தியோகமான கட்டிடத்தில் சிறப்பாக இயங்குவதறிந்த பல்கலைக் கழகத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகம் கடந்த 1981ஆம் ஆண்டு தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் தொடங்கப்பட்டது. இப்பல்கலைக் கழகத்தின் முதல் துணைவேந்தரான வ.அய்.சுப்பிரமணியம் என்பவர் தமிழின் ஆராய்ச்சி நூல்கள், தொலைநிலைக் கல்விக்கான நூல்களையும், பல்கலைக் கழக பதிப்பு நூல்களையும் தாமே அச்சிட வேண்டும் என்ற குறிக்கோளோடு கடந்த 1982-ம் ஆண்டு ஜெர்மனியிலிருந்து ஒரு கோடி மதிப்பீட்டில் அச்சு இயந்திரத்தை வரவழைத்து தஞ்சாவூர் நகரப்குதியிலுள்ள அரண்மனை வளாகத்தில் நிறுவினார். ஆண்டுதோறும் ஏராளமான நூல்கள் தமிழ் பல்கைக்கழக பதிப்புத்துறை சார்பில் தொடர்ந்து அச்சிட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 1990 ஆம் ஆண்டு தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் செயல்பட்டு வந்த தமிழ்ப் பல்கலைக் கழகம், திருச்சி சாலையில் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பரளவில் இடமாற்றம் செய்யப்பட்டு தற்போது அங்கு இயங்கி வருகிறது.
ஆனால் அரண்மனை வளாகத்தில் நிறுவப்பட்ட அச்சு இயந்திரத்தை இடமாற்றம் செய்தால், அந்த இயந்திரம் மறுபடியும் செயல்படாத நிலைக்கு சென்றுவிடும் என தொழில் நுட்ப வல்லுனர்கள் தெரிவித்தனர். இதனால், ஒரு கோடி மதிப்பில் இறக்குபதி செய்யப்பட்ட இயந்திரத்தை தமிழ் பல்கலைக் கழகத்தில் பணியாற்றிய 12 துணைவேந்தர்களும் அச்சு இயந்திரத்தை இடமாற்றம் செய்யும் திட்டத்தை கிடப்பில் போட்டு விட்டனர். இந்நிலையில் தமிழ் பல்கலைக் கழகத்தில் பதிப்புத்துறை, விற்பனைத்துறை ஆகியவற்றை ஒருங்கிணைத்து புதிய கட்டிடம் கட்டப்பட்டது. அந்த கட்டிடங்களில் நிரந்தர புத்தக விற்பனைக்கு ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், பதிப்புத்துறைக்கு தேவையான அச்சு இயந்திரத்தை பல்கலைக் கழக துணைவேந்தர் கோ.பாலசுப்பிரமணியன், இடமாற்றம் செய்வது என முடிவு செய்தார். இதனையடுத்து புதிய கட்டிடத்துக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் அச்சு இயந்திரம் 7 லட்சத்து 5 ஆயிரம் செலவில் டென்டர் கோரப்பட்டு அதன்படி இடமாற்றம் செய்யப்பட்டது. புதிய வளாகத்தில் நிறுவப்பட்ட அச்சுஇயந்திரம் மீண்டும் பொருத்தினால் செயல்படாது என கூறி,யாரும் டெண்டர் எடுக்க முன்வராத நிலையில், தற்போது அந்த இயந்திரம் சிறப்பாக செயல்பட்டு வருவதால், ரூ. ஒரு கோடி வீணாகவில்லை என்பதையறிந்த, பல்கலைக்கழகத்தில் உள்ள பேராசிரியர்கள் முதல் பணியாளர்கள் வரை அனைவரும் மகிழ்ச்சி அடைகின்றனர்.
இதுகுறித்து பதிப்புத்துறை இயக்குநர் பேராசிரியர் தியாகராஜன் கூறுகையில்,
ஜெர்மன் நாட்டிலிருந்து 39 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கோடி மதிப்பீட்டில் வாங்கப்பட்டு பல்கலைக் கழக நூல்கள் அச்சிடப்பட்டு வந்தது. அரண்மனை வளாகத்திலிருந்து இடமாற்றம் செய்ய, யாரும் வராமல், பலரும் தயக்கம் காட்டியகால், அந்த திட்டம், கைவிடப்பட்டது. இந்நிலையில், தற்போதுள்ள துணைவேந்தர், இந்த திட்டத்தில் துணிவுடன், முடிவெடுத்து செயல்பட்டதால் அச்சு இயந்திரத்தை புதிய வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது. பல வண்ணங்களில் அச்சிடப்படும் இந்த இயந்திரத்தின் இன்றைய விலை பல கோடி ரூபாயாக உயர்ந்து விட்டது. இந்த அச்சு இயந்திரத்தில் தற்போது பல்கலைக் கழகத்தின் நூல்கள் அனைத்தும் அச்சிட தயாராக உள்ளோம். இந்த புதிய பதிப்புத்துறை கூடத்தையும், அச்சகத்தையும் தமிழக முதல்வர் திறந்து வைத்தால், சிறப்பாக இருக்கும் என்பதற்காக, அவரது கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது என்றார்.