லதாமங்கேஷ்கர் மறைவு : துக்கம் அனுசரிப்பு - அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்ட தேசிய கொடி..
பாடகி லதா மங்கேஷ்கர் மறைவுக்கு துக்கம் அனுசரிக்கும் விதமாக அனைத்து ஒன்றிய, மாநில அரசு அலுவலகங்களிலும் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது.
புகழ்பெற்ற பாடகி லதாமங்கேஷ்கர் மறைவுக்கு தஞ்சையில் உள்ள அரசு அலுவலகங்களில் தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்பட்டன
புகழ் பெற்ற பாடகி லதா மங்கேசுக்கர் 28 செப். மாதம் 1929 பிறந்தார். ஹேமா என்ற இயற்பெயரைக் கொண்ட லதா மங்கேசுக்கர் 1929 இல் மராத்தியப் பிராமணக் குடும்பம் ஒன்றில் பிறந்தார். தந்தை தீனநாத் மங்கேசுகர், மராத்திய, கொங்கணி இசைக்கலைஞர் ஆவார். இவர் செவ்வியல் பாடகரும் நாடக நடிகரும் ஆவார்.
லதா மங்கேஷ்கரின் தந்தை-வழிப் பாட்டனார் கோவாவில் உள்ள மங்கேசி கோயில் பூசாரி ஆவார். லதாவின் தாய்-வழிப் பாட்டனார் குஜராத்தைச் சேர்ந்த செல்வாக்கு மிக்க தொழிலதிபர் ஆவார். லதா குஜராத்தி நாட்டுப் பாடல்களான பாவாகத்தின் கர்பா போன்றவற்றை தாய்-வழிப் பாட்டியிடம் இருந்து கற்றுக் கொண்டார்.
தீனநாத் கோவாவில் உள்ள மங்கேசி என்ற தனது பிறந்த ஊரின் நினைவாகத் தனது குடும்பப் பெயரை மங்கேஷ்கர் என மாற்றிக் கொண்டார். லதாவின் இயற்பெயர் ஹேமா தந்தையின் நாடகம் ஒன்றில் நடித்த லத்திக்கா என்ற பெண் பாத்திரத்தின் நினைவாக இவரது பெயரை லதா என மாற்றிக் கொண்டார். லதாவின் குடும்பத்தில் இவரே மூத்தவர். அவருக்குப் பின் பிறந்த மீனா, ஆஷா, உஷா, இருதயநாத் ஆகிய நால்வரும் புகழ் பெற்ற பாடகர்களும், இசைக்கலைஞர்களும் ஆவர். தனது ஐந்தாவது அகவையில் லதா தந்தையின் மராத்திய மொழியில் மேடையெற்றப்பட்ட இசை நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார். இவர் திருமணம் செய்யாமலே வாழ்ந்தார்.
இந்தியப் பின்னணிப் பாடகியும், இசையமைப்பாளரும், தயாரிப்பாளரும் ஆவார். இவர் இந்தியாவின் மிகவும் செல்வாக்கு மிக்க பாடகர்களில் ஒருவராக பரவலாகக் கருதப்படுகிறார். எழுபது ஆண்டுகளுக்கு மேலாக இந்திய இசைத் துறையில் இவர் ஆற்றிய பங்களிப்பானது இந்தியாவின் இசைக்குயில், மிலேனியத்தின் குரல், இன்னிசை இராணி போன்ற கௌரவப் பட்டங்களைப் பெற்றது.குறிப்பாக இந்தி, வங்காள, மராத்தி மொழிகள் உட்பட முப்பத்தாறுக்கும் மேற்பட்ட இந்திய மொழிகளிலும் சில வெளிநாட்டு மொழிகளிலும் பாடல்களைப் பாடியுள்ளார். இவர் தனது வாழ்நாள் முழுவதும் பல பாராட்டுகளையும் மரியாதைகளையும் பெற்றார். 1987-இல் இந்திய அரசால் தாதாசாகெப் பால்கே விருது வழங்கப்பட்டது.
2001 ஆம் ஆண்டில், நாட்டிற்கு இவர் ஆற்றிய பங்களிப்பைப் போற்றும் வகையில், இந்தியாவின் உயரிய குடிமக்களுக்கான விருதான பாரத ரத்னா விருது இவருக்கு வழங்கப்பட்டது, இது எம். எஸ். சுப்புலட்சுமிக்குப் பிறகு இந்தப் பெருமையைப் பெறும் இரண்டாவது பெண் பாடகி ஆவார். 2007 ஆம் ஆண்டில், பிரான்ஸ் தனது உயரிய குடிமக்கள் விருதான, செவாலியே விருதை அவருக்கு வழங்கியது.லதா மங்கேசுக்கர் மூன்று தேசியத் திரைப்பட விருதுகள், 15 வங்காளத் திரைப்படப் பத்திரிகையாளர் சங்க விருதுகள், நான்கு பிலிம்பேர் விருதுகள், இரண்டு பிலிம்பேர் சிறப்பு விருதுகள், பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளார். 1974 இல், லண்டனில் உள்ள ராயல் ஆல்பர்ட் மண்டபத்தில் இசை நிகழ்ச்சி நடத்திய முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார்.
இவர், பாரத ரத்னா, தாதாசாஹெப் பால்கே விருது, பத்ம விபூசண், பத்ம பூசண் போன்ற இந்தியாவின் உயரிய விருதுகளை வாங்கியிருந்தார். இந்நிலையில் பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6 ந்தேதி மும்பையில் காலமானார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகம், மாவட்ட காவல்துறை அலுவலகம், ரயிலடி உட்பட பல அரசு அலுவலகங்களில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது. பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் (92) கடந்த 29 நாட்களாக மும்பையில் உள்ள ப்ரீச்கேண்டி என்ற மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.கொரோனா மற்றும் நிமோனியா பாதிப்பால் அனுமதிக்கப்பட்டிருந்த அவரது உடல்நிலை மோசமடைந்ததால் தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக நாடு முழுவதும் இரு நாட்கள் துக்க தினமாக அனுசரிக்குமாறு மத்திய அரசு அனைத்து மாநில அரசுகளையும் கேட்டுக் கொண்டது.
இதையடுத்து பாடகி லதா மங்கேஷ்கர் மறைவுக்கு துக்கம் அனுசரிக்கும் விதமாக தமிழ்நாட்டின் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், மாவட்ட காவல்துறை அலுவலகம் உட்பட அனைத்து ஒன்றிய, மாநில அரசு அலுவலகங்களிலும் உள்ள தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது. அந்த வகையில் ரயிலடியில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான கொடிக்கம்பத்தில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறந்தது.