தாமதமாக தொடங்கிய தேர்வு - கவலையுடன் இருந்த பெற்றோர்களிடம் நிலைமையை கூறிய கலெக்டர்
தேர்வு மையத்திற்கு வெளியே கூடியிருந்த தேர்வர்களின் பெற்றோர்களிடமும் நிலைமையை எடுத்துக் கூறி கவலைப்பட வேண்டாம் நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டது.
தஞ்சாவூரில் குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வு நேற்று நடந்தது. இதில் தேர்வர்களுக்கு வழங்கப்பட்ட வினாத்தாளில் புக்லெட் சீரியல் நம்பர் மாறி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் தேர்வர்கள் குழப்பம் அடைந்தனர். இதன் காரணமாக தேர்வு குறிப்பிட்ட நேரத்தில் தொடங்காமல் தாமதமாக தொடங்கியது.
தமிழ்நாட்டில் நேற்று குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வு நடைபெற்றது. ஏற்கனவே கடந்த ஆண்டு நடந்த முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இந்த தேர்வு நடத்தப்பட்டது. காலையில் தமிழ் மொழி தகுதி தாள் தேர்வும், மதியம் பொதுத்தேர்வும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.186 மையங்களில் தேர்வு நடந்தது. முதலில் தமிழ் மொழி தகுதி தாள் தேர்வு நடந்தது.
அந்த வகையில் தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை பாரத் அறிவியல் கல்லூரி, மன்னர் சரபோஜி அரசு கல்லூரி, வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம், சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகம், கலைமகள் மேல்நிலைப்பள்ளி, அடைக்கலமாதா கல்லூரி ஆகிய 6 மையங்களில் தேர்வு நடைபெற்றது. இத் தேர்வை 2025 பேர் எழுத தகுதி பெற்றிருந்தனர்.
இந்நிலையில் தஞ்சாவூர் பாரத் கல்லூரியில் காலை 9.30 மணிக்கு தொடங்க வேண்டிய தேர்வானது தொடங்கப்படாமல் காலதாமதம் ஏற்பட்டது. இதனால் தேர்தவர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது. இதற்கு காரணம் தேர்வர்களுக்கு வழங்கப்பட்ட வினாத்தாளில் புக்லெட் சீரியல் நம்பர் மாறி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதுதான்.
இதனால் தேர்வர்கள் குழப்பம் அடைந்தனர். தொடர்ந்து தேர்வு குறிப்பிட்ட நேரத்தில் தொடங்கவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உடனடியாக பாரத் கல்லூரிக்கு விரைந்து வந்தார். நிலைமையை கவனித்து சரியான வினாத்தாள் கொடுக்க உடனடி நடவடிக்கை எடுத்தார்.
தேர்வர்களிடம் நிலைமையை விளக்கி கூறி வினாத்தாள் சரியான முறையில் கொடுக்கப்பட்டு விட்டது. இதனால் நீங்கள் கவலைப்பட வேண்டாம். காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கும். இதில் அரை மணி நேரம் ஏற்பட்ட கால தாமதத்தை ஈடுகட்டும் வகையில் தேர்வு முடியும் நேரம் ஆன 12.30 மணிக்கு பதிலாக 1 மணிக்கு தேர்வு முடியும் என்று கலெக்ர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.
மேலும் தேர்வு மையத்திற்கு வெளியே கூடியிருந்த தேர்வர்களின் பெற்றோர்களிடமும் நிலைமையை எடுத்துக் கூறி கவலைப்பட வேண்டாம் நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டது என்று தெரிவித்தார். இதேபோல் கூடுதல் கலெக்டர் சுகபுத்ராவும் தேர்வு மையத்தில் ஆய்வு செய்தார்.
மேலும் சரபோஜி கல்லூரி தேர்வு மையத்திலும் வினாத்தாள் குளறுபடியால் அரை மணி நேரம் தாமதமாக தேர்வு தொடங்கியது. தொடர்ந்து மதியம் 1 மணி வரை தமிழ் மொழி தகுதி தேர்வு நடைபெற்றது.
இதேபோல் தமிழ்நாட்டில் பல்வேறு தேர்வு மையங்களிலும் வினாத்தாளில் சீரியல் நம்பர் மாறி இருந்ததால் தாமதமாக தேர்வு தொடங்கியது என்று தகவல்கள் வெளியானது. மதியம் 2 மணிக்கு தொடங்க உள்ள பொதுத்தேர்வானது 2.30 மணிக்கு தொடங்கி மாலை 5.30 மணிக்கு முடிவடையும் என தெரிவிக்கப்பட்டது.