தஞ்சாவூர் - விழுப்புரம் இரட்டை வழி அகல ரயில் பாதை திட்டம் - தற்போதைக்கு வாய்ப்பில்லை என தெற்கு ரயில்வே பொதுமேலாளர் பேட்டி
திருவாரூர் - காரைக்குடி இடையே வரும் ஜனவரி மாத இறுதியில் வழக்கம் போல் பயணிகள் ரயில் இயக்கப்படும். இந்த தடத்தில் விரைவு ரயில்கள் இயக்குவது தொடர்பாக இன்னும் முடிவெடுக்கவில்லை.
தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் பயணிகள் குளிரூட்டப்பட்ட கட்டண அறை, இருப்பு பாதை காவலர்கள் ஓய்வறை ஆகியவற்றை திறந்து வைத்தும், பல்வேறு கட்டமைப்பு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து தஞ்சாவூர் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழனி மாணிக்கம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, அறந்தாங்கி ரயில் உபயோகிப்பாளர்கள் சங்கத்தினர், தஞ்சாவூர் எம்எல்ஏ நீலமேகம் சார்பிலும் பல்வேறு ரயில் வசதிகள் கேட்டு கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஜான்தாமஸ் கூறுகையில், திருவாரூர் - காரைக்குடி இடையே வரும் ஜனவரி மாத இறுதியில் வழக்கம் போல் பயணிகள் ரயில் இயக்கப்படும். இந்த தடத்தில் விரைவு ரயில்கள் இயக்குவது தொடர்பாக இன்னும் முடிவெடுக்கவில்லை. தஞ்சாவூர் - விழுப்புரம் இடையே இரட்டை வழி அகலப்பாதை வேண்டும் என்றால் 70 சதவீதம் சரக்கு ரயில் போக்குவரத்து இருக்க வேண்டும். ஆனால் அந்த அளவுக்கு சரக்கு ரயில் போக்குவரத்து இல்லாததால், இந்த திட்டத்துக்கு தற்போது வாய்ப்பில்லை. கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட பயணிகள் ரயில்கள் தற்போது சில ரயில்கள் இயக்கப்படுகிறது. கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு மீண்டும் ஒவ்வொன்றாக இயக்கப்படும் என்றார். ஆய்வின் போது தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மேலாளர் மனீஷ் அகர்வால் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
பாராமளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழனி மாணிக்கம் கூறுகையில், தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் அனைத்து நடைமேடைகளில் மேற்கூரையும், சுரங்கப்பாதையும் அமைக்க வேண்டும். அதில் லிப்ட் வசதியும் வேண்டும். திருச்சி- சென்னை சோழன் சூப்பர் பாஸ்ட் விரைவு ரயிலின் பயண நேரத்தை குறைக்க வேண்டும். திருவனந்தபுரம்-திருச்சி விரைவு ரயிலை தஞ்சாவூரிலிருந்து இயக்க வேண்டும். காரைக்கால் - எர்ணாகுளம் விரைவு ரயிலில் கூடுதல் ஏசி பெட்டிகள் இணைக்க வேண்டும். மதுரை - சென்னை வாராந்திர ரயிலை தினசரி ரயிலாக இயக்க வேண்டும் என பொது மேலாளரிடம் கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது என்றார்.
இதே போல் கும்பகோணம் ரயில் நிலையத்தில் நேற்று பொதுமேலாளர் ஜான்தாமஸ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது தஞ்சாவூர் மாவட்ட ரயில்வே உபயோகிப்பாளர்கள் சங்க செயலாளர் ஏ.கிரி, கும்பகோணம் அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் வீ.சத்தியநாராயணன், பாபநாசம் வர்த்தகர் சங்க தலைவர் குமார், பாபநாசம் ரயில் பயணிகள் சங்க செயலாளர் சரவணன், திருச்சி கோட்ட ரயில்வே உபயோகிப்பாளர் ஆலோசனை குழு உறுப்பினர்கள் சுந்தரவிமல்நாதன் முதலானோர் வரவேற்றனர். பின்னர் ரயில் பயணிகள் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
அதில், மயிலாடுதுறை வழியான தஞ்சாவூர்-விழுப்புரம் ரயில் பாதையை இரட்டை வழி பாதையாக மாற்றவும், நீடாமங்கலம்-கும்பகோணம்-விருதாச்சலம் இடையே புதிய ரயில் பாதை அமைக்கவும், கும்பகோணத்தில் முன்னாள் மத்திய ரயில்வே அமைச்சர் அறிவித்தபடி விரைவாக விவேகானந்தர் நினைவு அருங்காட்சியகம் திறக்கவும், கும்பகோணத்தில் ரயில் யாத்ரி நிவாஸ் தங்கும் விடுதி அமைக்கவும், கும்பகோணம் தஞ்சாவூர் வழியாக மும்பை, போடிநாயக்கனூர், ஹைதராபாத், பழனி உள்ளிட்ட இடங்களுக்கு நேரடி ரயில் வசதி வேண்டும்.பட்டுக்கோட்டை வழியான ரயில் பாதையில் சென்னைக்கு தினசரி இரவு நேர ரயில் இயக்கவும், பாபநாசம் ரயில் நிலையத்தில் மைசூர், செந்தூர் ரயில்கள் மீண்டும் நின்று செல்ல அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை மனுக்கள் வழங்கப்பட்டது.