தஞ்சை: கழிவு நீர் வருவதை தடை செய்ய கோரி கிராம மக்கள் சாலை மறியல்
தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைச் சமாதானப்படுத்தி மாவட்ட கலெக்டரிடம் அழைத்துச் சென்றனர்.
தங்கள் பகுதிக்கு மற்றொரு பகுதியிலிருந்து கழிவுநீர் வருகிறது. இதை தடுக்க உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு வண்ணாரப்பேட்டையை சேர்ந்த பொதுமக்கள் சாலைமறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூர் அருகே மற்றொரு பகுதியிலிருந்து தங்களது பகுதிக்குக் கழிவு நீர் வருவதைத் தடுக்க கோரி வண்ணாரப்பேட்டை கிராம மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் வண்ணாரப்பேட்டை ஊராட்சியைச் சேர்ந்த கிராம மக்கள் சுமார் 20க்கும் அதிகமானோர் மாவட்ட கலெக்டர் அலுவலக முதன்மைச் சாலையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைச் சமாதானப்படுத்தி மாவட்ட கலெக்டரிடம் அழைத்துச் சென்றனர். இதனால் சில நிமிடங்கள் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இந்த போராட்டம் குறித்து வண்ணாரப்பேட்டை ஊராட்சி மன்ற உறுப்பினர் சரவணகுமார் கூறியதாவது:
பிள்ளையார்பட்டி ஊராட்சியிலுள்ள குடிசை மாற்று வாரியக் குடியிருப்பிலிருந்து கழிவு நீர் அதே ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியிலேயே வெளியேறியது. தற்போது, அதை விரிவுப்படுத்தி வண்ணாரப்பேட்டை ஊராட்சி எல்லை வரை கொண்டு வரப்பட்டுள்ளது.
இதனால், வண்ணாரப்பேட்டை ஊராட்சி மக்களின் வாழ்வாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் விவசாயம், கால்நடை வளர்ப்பு மிகவும் பாதிக்கப்படும். மேலும், குடிநீரும் பாதிக்கப்படக்கூடிய அச்சம் உள்ளது.
இதன் காரணமாக வண்ணாரப்பேட்டை, பிள்ளையார்பட்டி ஊராட்சி மக்களிடையே பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. இதுகுறித்து ஏற்கெனவே மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. அதனால்தான் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மண்ணெண்ணை ஊற்றி தீக்குளிக்க முயற்சி:
கும்பகோணம் ரயிலடி அருகில் லால் பகதூர் சாஸ்திரி ரோட்டில் நடராஜன் மகன் சிவராஜ் கடந்த 20 ஆண்டுகளாக சிவராஜ் இன்ஜினியரிங் ஒர்க்ஸ் நடத்தி வருகிறார். கடந்த ஐந்து ஆண்டு முன்பு சிவராஜ் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இவருக்கு கலை பொன்னி என்ற மனைவியும், மூன்று மகன்கள், ஒரு மகளும் உள்ளனர்.
குடும்ப சூழ்நிலை காரணமாக மூத்த மகன் தில்லையரசன் அப்பா நடத்தி வந்த இன்ஜினியரிங் ஒர்க் ஷாப் கவனித்து வந்தார். இரண்டாவது மகன் காவிய தர்ஷன் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தார். மூன்றாவது மகன் பொற்ச்செல்வன் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கிறார். மகள் திலகமதி பத்தாம் வகுப்பு படித்துவிட்டு வீட்டில் உள்ளார். இந்நிலையில் கடையின் உரிமையாளர் சுப்பையன் கடையை காங்கிரஸ் முன்னாள் கவுன்சிலர் அசோகனிடம் விற்று விட்டார்.
இந்நிலையில் அசோகன் கடையை தொடர்ந்து நடத்த வேண்டும் என்றால் ரூ.20 லட்சம் அட்வான்ஸ் கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளார். குடும்ப சூழ்நிலை காரணமாக தன்னால் இவ்வளவு பெரிய தொகை தர முடியவில்லை. ரூ.50 ஆயிரம் மட்டுமே கொடுக்க முடியும் என்று தில்லையரசன் கொடுத்துள்ளார். அதை உரிமையாளர் அசோகன் பெற்றுக் கொண்டு எந்த பதிலும் கூறாமல் சென்றுவிட்டாராம். பின்னர் இரவோடு இரவாக கடையில் இருந்த ரூ.5 லட்சம் மதிப்பு பொருட்களை எடுத்துச் சென்று கடையை இடித்து விட்டு சென்றுவிட்டார். இன்று தில்லையரசன், காவியதர்ஷன் இருவரும் கடைக்கு வந்து பார்த்தபோது கடையில் உள்ள பொருட்களும் மற்றும் கடை இடிந்து கிடைப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து அசோக்கிடம் தொலைபேசியில் கேட்டபோது பதில் கூறாமல் போனை வைத்துள்ளார். கடையில் இருந்து பொருட்களையும் கடைக்கு செலுத்திய மூன்று லட்சத்து 50 ஆயிரம் அட்வான்ஸ் தொகையும் வழங்க வேண்டும். கடை உரிமையாளர் அசோகன் மீது நடவடிக்கை எடுக்க கோரி கலைப்பொன்னி, தில்லையரசன், காவியதர்ஷன், பொற்செல்வன் என அனைவரும் குடும்பத்துடன் கடை முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.