தஞ்சை விளார் சாலை பழுதான பாதாள சாக்கடை குழாய் சீரமைப்பு பணி: மாநகராட்சி மேயர் பார்வையிட்டு ஆய்வு
விளார் பகுதியில் பழுதடைந்த பாதாள சாக்கடை குழாயால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து இந்த பிரதான குழாயை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் விளார் சாலையில் பழுதான பாதாள சாக்கடை குழாய் சீரமைக்கும் பணியை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.
தஞ்சாவூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.35 விளார் சாலையில் பாதாள சாக்கடை பிரதான குழாய் பழுதடைந்துள்ளது. இந்த பழுதடைந்த குழாயில் மருத்துவக்கல்லூரி, எல்.ஐ.சி.காலனி, பாலாஜி நகர் மற்றும் புதிய பேருந்து நிலைய பகுதிகளில் இருந்து சுமார் 154 கி.மீட்டர் நீளத்திற்கு கழிவுநீரானது மாரிக்குளம் கழிவுநீர் நீரேற்று நிலையத்தை வந்தடைகிறது.
மேலும் சாலக்காரத்தெரு, பழைய ரெஜிஸ்டர் ஆபிஸ் ஆகிய பகுதிகளிலும் பாதாள சாக்கடை பிரதான குழாய் பழுதடைந்துள்ளது. இதில் விளார் பகுதியில் பழுதடைந்த பாதாள சாக்கடை குழாயால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து இந்த பிரதான குழாயை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பொக்லைன் இயந்திரம் வாயிலாக பழுதான பாதாள சாக்கடை குழாய் நீக்கப்பட்டு புதிதாக மாற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்பணிகளை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், ஆணையர் கண்ணன், செயற்பொறியாளர் சேர்மகனி, மண்டலக் குழு தலைவர் ரம்யா சரவணன் ஆகியோர் பார்வையிட்டனர்.
பின்னர் மேயர் சண்.ராமநாதன் நிருபர்களிடம் கூறியதாவது: விளார் சாலை பாதாள சாக்கடை குழாய் தொடர் மழையால் பழுதானது. இதனால் இப்பகுதியை சேர்ந்த கடந்த சில நாட்களாக மக்கள் பாதிக்கப்பட்டனர். உடன் இதுகுறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு சீரமைப்பு பணிகள் தொடங்கின. சுமார் 154 கி.மீட்டர் நீளத்திற்கு கழிவுநீரானது மாரிக்குளம் கழிவுநீர் நீரேற்று நிலையத்தை வந்தடைகிறது. இப்பகுதியில் ஏற்பட்ட இந்த பழுதை உடன் சீரமைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து பொக்லைன் கொண்டு வரப்பட்டு தேவையான குழாய்களும் கொண்டு வந்து இப்பணிகள் நடந்து வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் இந்த பணி நிறைவடைந்து விடும்.
எனவே பொதுமக்கள் இது குறித்து அச்சப்பட தேவையில்லை. இதேபோல் சாலக்காரத்தெரு, பழைய ரெஜிஸ்டர் ஆபிஸ் ஆகிய பகுதிகளிலும் பாதாள சாக்கடை பிரதான குழாய் பழுதடைந்துள்ளது. அவற்றையும் சீரமைக்கும் பணிகள் துரிதமாக நடக்கிறது. தொடர் மழையால் மற்றும் கழிவுநீரின் வேகத்தால் இந்த பாதிப்பு ஏற்பட்டது. தற்போது சீரமைப்பு பணிகள் விரைந்து நடந்து வருகிறது. பொது மக்களுக்கு இனி எந்தவித இடையூறும் இருக்காது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பாதாள சாக்கடை குழாய் உடைப்பால் மக்கள் அவதியடைந்த நிலையில் உடன் இதுகுறித்து நடவடிக்கை மேற்கொண்டு பழுதான குழாயை மாற்ற அறிவுறுத்தி பணிகளை விரைந்து முடுக்கி விட்ட மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு விளார் சாலை பகுதியை சேர்ந்த பொது மக்கள் பாராட்டும் நன்றியும் தெரிவித்தனர்.