தஞ்சை: திருமண்டங்குடி சர்க்கரை ஆலை பிரச்னை; ஆட்சியர் அலுவலகம் முற்றுகை - விவசாயிகள் கைது
விவசாயிகள் பெயரில் கடன் வாங்கி மோசடி செய்த மோசடி பேர்வழி இன்று வெளியில் உள்ளார் அவரை கைது செய்யவில்லை.
தஞ்சாவூர்: திருமண்டங்குடி சர்க்கரை ஆலை பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்தி தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் 150 பேரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே திருமண்டங்குடியில் திரு ஆரூரான் சர்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலையில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முதல்-அமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கடந்த 30-ந் தேதி முதல் சர்க்கரை ஆலை முன்பு கரும்பு விவசாயிகள் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். 10-வது நாளாக காத்திருப்பு போராட்டம், 11-வது நாளில் ஒற்றைக்காலில் நின்றது என தங்களின் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் திருமண்டங்குடி சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது. இதில் கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் ரவீந்திரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் சாமி.நடராஜன், விவசாய தொழிலாளர் சங்க மாநில நிர்வாகியும், கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ.,வுமான சின்னத்துரை மற்றும் ஏராளமாக கரும்பு விவசாயிகள் பங்கேற்றனர். இவர்களை போலீசார் தடுத்து நிறுத்த முற்பட்டதால் தடுப்பை மீறி கரும்பு விவசாயிகள் செல்ல முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 150 கரும்பு விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.
போராட்டம் குறித்து கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் ரவீந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:
தஞ்சாவூர் மாவட்டம் திருமண்டங்குடி, திரு ஆருரான் சர்க்கரை ஆலை கடந்த நான்கு ஆண்டுகளாக செயல்படவில்லை. கரும்பு விவசாயிகளுக்கு தர வேண்டி நிலுவைத் தொகையை வழங்காமல் ஆலையை மூடிவிட்டனர். விவசாயிகளின் பெயரில், வங்கிகளில் 300 கோடி ரூபாய் கடனை வாங்கிக் கொண்டு, விவசாயிகளை கடனாளியாகி விட்டனர். தற்போது கால்ஸ் நிறுவனம் ஆலையை வாங்கி உள்ளது. ஆனால் விவசாயிகளின் பிரச்சனையை புதிய நிர்வாகம் தீர்க்கவில்லை. பழைய ஆலை நிர்வாகம் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையும் வழங்கவில்லை, விவசாயிகள் பேரில் வங்கியில் வாங்கிய கடன் தொகையும் செலுத்த மறுத்து வருகின்றனர். விவசாயிகளை கடனாளியாக தெருவில் நிறுத்தி உள்ளனர். இதில் 15000 கரும்பு விவசாயிகளின் குடும்பம் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 20 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடந்து வருகிறது. ஆலை நிர்வாகம் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ள நிலையில், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் போராட்டம் நடத்தினோம். கடந்த அதிமுக ஆட்சியில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. திமுக ஆட்சியிலாவது நீதி கிடைக்குமா என போராடி வருகிறோம். அரசு இந்த பிரச்சினைகள் தலையிடவில்லை.
விவசாயிகள் பெயரில் கடன் வாங்கி மோசடி செய்த மோசடி பேர்வழி இன்று வெளியில் உள்ளார் அவரை கைது செய்யவில்லை. விவசாயிகளின் பெயரில் உள்ள கடன் தொகையை மாநில அரசு, புதிய ஆலை நிர்வாகத்தின் பெயரில் மாற்றிவிட்டு, விவசாயிகளை கடனிலிருந்து விடுவிக்க வேண்டும். விவசாயிகளுக்கு வரவேண்டிய நிலுவைத் தொகையை வட்டியுடன் சேர்த்து மாநில அரசு பெற்றுத்தர வேண்டும். முதல்வர் ஸ்டாலின் இதில் தலையிட்டு நிரந்தர தீர்வு காண வேண்டும்.