திருநங்கைகளுக்கு பால்பண்ணை - ராமகிருஷ்ண மடத்திற்கு நீதிபதிகள் பாராட்டு
திருநங்கைகள் சொந்தகாலில் நின்று உழைக்க பால்பண்ணை அமைத்து கொடுத்த தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்திற்கு சென்னை மாவட்ட வணிகவியல் நீதிமன்ற நீதிபதி பாராட்டுக்கள் தெரிவித்தார்.
திருநங்கைகளின் வாழ்க்கைத்தரம் உயரவும், அவர்கள் சொந்த காலில் நின்று உழைக்கவும் தஞ்சாவூர் ராமகிருஷ்ணா மடம் பால்பண்ணை அமைத்து கொடுத்துள்ளது. தஞ்சாவூரில் உள்ள திருநங்கைகளின் ஒருங்கிணைப்பாளர் சத்யா உட்பட 5 பேர் பால்பண்ணை அமைத்து, அதன் மூலம் தங்களது வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்ள தஞ்சாவூரில் உள்ள ராமகிருஷ்ண மடத்திடம் உதவிகள் கோரினர்.
இதையடுத்து மடத்தின் தலைவர் ஸ்ரீமத் விமூர்த்தானந்த மகராஜ் ஏற்பாட்டின் பேரில், திருநங்கைகள் சத்யா உள்ளிட்ட 5 பேரும் மாடு வளர்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது. தொடர்ந்து பாபநாசம் அருகே உதாரமங்கலம் ஊராட்சி கொத்தங்குடி கிராமத்தில் புஷ்பகலா, கவிதா ஆகியோர் தங்களது இடத்தில் திருநங்கைகள் மாடு வளர்க்க இடம் வழங்கினர். அதன்படி ஏற்கெனவே ஒரு பசுமாடும் கன்றும் வழங்கப்பட்டது.
தொடர்ந்து அந்த இடத்தில் ஸ்ரீ சாரதாம்மா கோசாலை என்ற பெயரில் பால்பண்ணை அமைக்கவும், மடத்தின் பக்தர் வெங்கடேசன் என்பவர் ரூ.1 லட்சம் மதிப்பில் மாட்டு கொட்டகை அமைத்து தந்தார். மேலும் மடத்தின் சார்பில் இரு பசுவும், கன்றுகளும் வழங்கப்பட்டது. இந்த பால்பண்ணையில் சிறப்பு பூஜைகள் நடத்தி, பால்பண்ணையை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், சென்னை மாவட்ட வணிகவியல் நீதிமன்ற நீதிபதி எஸ்.சத்தியமூர்த்தி கலந்து கொண்டார். பின்னர் அவர் பேசுகையில், திருநங்கைகள் மீது பலரும் அனுதாபம் காட்டுகிறார்கள். ஆனால் அவர்களுக்கு வேண்டியது அனுதாபமல்ல, மாறாக அவர்கள் சொந்த காலில் நின்று வாழும் தன்னம்பிக்கை அவர்களுக்குத் தேவை. தன்னம்பிக்கையை பெற அவர்களுக்கு முறையான வாழ்வாதாரம் தேவைப்படுகிறது. இந்த வாழ்வாதாரத்தை தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடம் சரியாக தேர்வு செய்து வழங்கியுள்ளது. இதனை பயன்படுத்திக் கொண்டு சமூகத்தில் திருநங்கைகள் வாழ்ந்து காட்ட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் ஸ்ரீமத் விமூர்த்தானந்த மகராஜ், உதாரமங்கலம் ஊராட்சித் தலைவர் பழனி, துணைத் தலைவர் குமார் மற்றும் கிராம மக்கள், திருநங்கைகள் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், "திருநங்கைகள் என்றாலே அராஜகம் செய்து பணம் பறிப்பவர்கள் என்ற எண்ணம்தான் அனைவரின் மனதிலும் பதிந்துள்ளது. அதை மாற்றி அவர்களும் நம்மை போல்தான் என்ற எண்ணம் மக்கள் மனதில் வருவதற்கு இது நல்ல முயற்சி. வாழ்வில் உழைத்து முன்னேறும் திருநங்கைகளை பார்த்து பிற திருநங்கைகளும் தங்களை மாற்றிக் கொள்வர். கடந்த வாரத்தில் தஞ்சையில் ஒரு பழக்கடையில் பணம் கேட்டு கொடுக்காததால் திருநங்கைகள் அந்த கடையை அடித்து உடைத்த சம்பவமும் நடந்தது. அதில் இரு திருநங்கைகள் கைது செய்யப்பட்டனர். ஆனால் இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் உழைத்து முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இவர்களை பார்த்து வர வேண்டும்" என்று தெரிவித்தனர்.