திருபுவனத்தில் கடையடைப்பு போராட்டம் - கைத்தறி சேலைகளுக்கு ஜிஎஸ்டி வரியை நீக்க கோரிக்கை
’’காதிக்கு வரி விலக்கு அளித்தது போல் கைத்தறி பட்டு மற்றும் பட்டு சேலை உற்பத்தி பொருட்களுக்கு விதித்துள்ள ஜிஎஸ்டி வரியினை நீக்க கோரிக்கை’’
கைத்தறி பட்டு மற்றும் உற்பத்திப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தில், திருபுவனம் பட்டு கைத்தறி நெசவு தொழில் பாதுகாப்பு குழு சார்பில் கடையடைப்பு, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய மாநில அரசுகளால் கைத்தறி பட்டு மற்றும் பட்டு சேலை உற்பத்தி பொருட்களுக்கு விதித்துள்ள ஜிஎஸ்டி வரியினை காதிக்கு வரி விலக்கு அளித்தது போல், குடிசைத்தொழிலான கைத்தறிக்கும் முழுமையாக ஜிஎஸ்டி வரியினை ரத்து செய்திட வேண்டும், கச்சா பட்டு விலை 1 கிலோ 4 ஆயிரத்தில் இருந்து 6 ஆயிரம் ஆக கடுமையாக விலை உயர்ந்துள்ள காரணத்தினால் பட்டு சேலைகள் விலை உயர்ந்துள்ள நிலையில், தொழில் பாதிப்பு, விற்பனை பாதிப்பு, பட்டு சேலைகள் விற்பனை தேக்கம் ஏற்படுகின்ற அபாய சூழ்நிலையினை கருத்தில் கொண்டு கச்சா பட்டிற்கு மான்யம் வழங்க வேண்டும்.
கச்சா பட்டு தட்டுபாடின்றி கிடைத்திட விலை குறைத்திட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து பதுக்கல் இன்றி கைத்தறிக்கு வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடையடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு, திருபுவனம் சில்க் சிட்டி தலைவர் சேதுராமன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவாக அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பட்டு கைத்தறி நெசவுத் தொழிலாளர் சங்க தலைவர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு கைத்தறி நெசவுத் தொழிலை பாதகாக்க நெசவுத் தொழிலாளர்கள், அனைத்து கூட்டுறவு சங்க நெசவாளர்கள், பட்டு ஜவுளி விற்பனையாளர்கள், பட்டு கைத்தறி சிறு உற்பத்தியாளர்கள், வணிக சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கடையடைப்பு போராட்டம் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு நேர கடையடைப்பு நடைபெற்றது. இதில் சுமார் 100 கடைகள் அடைக்கப்பட்டன. இது குறித்து போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கூறுகையில்,சுபமுகூர்த்தத்ன்று மணப்பெண் திருபவனம் பட்டு சேலை உடுத்தி வந்தால் தான் பெருமை என்பது காலம் காலம் தொட்டு உள்ளது.
ஒவ்வொரு முகூர்த்த நாட்களுக்கு முன்பு குடும்பத்துடன் திருபுவனத்திற்கு வந்து பட்டு சேலைகள் வாங்கி செல்வார்கள். இந்த பழக்கம் இன்றளவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பட்டு நெசவு தொழில் குடிசைத்தொழிலாக தான் உள்ளது. அதற்கு ஜிஎஸ்டி வரி விதிப்பதால், ஏழை நெசவு தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் பெரும்பாலான நெசவு தொழிலாளர்கள், நெசவுத்தொழிலை விட்டு வேறு தொழிலுக்கு சென்று விட்டார்கள். தற்போது நெசவுத்தொழில் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. கச்சா பட்டின் விலை வரலாறு காணாத வகையில் உயந்துள்ளதால், பட்டு சேலை விலை அதிகரித்துள்ளதால், வாடிக்கையாளர்கள் வாங்குவது குறைந்து விட்டது. இதனால் சேலைகள் மற்றும் பட்டுத்துணிகள் அதிகளவில் தேக்கம் அடைந்து விட்டது. கச்சா பட்டுவை, பெருமுதலாளிகள் பதுக்குவதை தடுத்தால் தான் பட்டு நெசவுத்தொழில் முன்னேற்றம் அடையும். இதில் மத்திய மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், திருபுவனம் பட்டு என்ற பெருமை மறைந்து விடும் என்றார்.