Thanjavur: மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு; கொள்ளிடம் ஆற்றில் பிணம் போல் படுத்து விவசாயிகள் நூதன போராட்டம்
கல்லணைக்கு ஆபத்து ஏற்படாத வகையில், டெல்டாவை சேர்ந்த முதல்வர் அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.
தஞ்சாவூர்: கல்லணை அருகே மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், உத்தரவை திரும்பப் பெறக்கோரியும் இந்திய கம்யூ., கட்சியினர் மற்றும் விவசாயிகள் கொள்ளிடம் ஆற்றில் இறங்கி நுாதன போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில், கொள்ளிடம், காவிரி, வைப்பாறு, பாம்பாறு, மலட்டாறு, தெற்கு வெள்ளாறு, தென் பெண்ணையாறு, கொசஸ்தலை, பாலாறு உள்ளிட்ட ஆறுகளில், 25 இடங்களில் மணல் குவாரி அமைக்க, சமீபத்தில் தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.
குறிப்பாக, தஞ்சாவூர் மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றில், சாத்தனுார், மருவூர், கோவிந்தநாட்டுச்சேரி, கோதங்குடி, திருச்சென்னம்பூண்டி, கல்லணை என ஆறு இடங்களில் 1,62,735 யூனிட் மணல் அள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதில், கல்லணையில் 315 யூனிட் மணல் அள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனால், கல்லணை அருகே மணல் அள்ளுவதால், கல்லணைக்கு பாதிப்பு ஏற்படும். கொள்ளிடம் ஆற்றில் அதிகளவில் மணல் அள்ளும் சூழலில், கூட்டு குடிநீர் திட்டங்கள் பாதிக்கும் அபாயம் உள்ளதாக, டெல்டா விவசாயிகளும், பொதுமக்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து விவசாய சங்கங்கத்தினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தும், இந்த திட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தியும் தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். மேலும் பல போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு மணல் அள்ள அனுமதி அளித்தால் அது விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் பெரும் இழப்பை ஏற்படுத்தும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கல்லணையில், மணல் குவாரி தொடர்பான உத்தரவை திரும்பபெற வேண்டும் எனக்கோரி, விவசாயிகளும், இ.கம்யூ., கட்சி ஒன்றிய செயலாளர் முகில் தலைமையில், கொள்ளிடம் ஆற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், சிலர் கழுத்தில் மாலை அணிந்து பிணம் போல படுத்து நுாதன முறையில் எதிர்ப்பு தெரிவித்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை, தோகூர் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து இ.கம்யூ., ஒன்றிய செயலாளர் முகில் நிருபர்களிடம் கூறியதாவது: கல்லணையை சுற்றி 10 கி.மீ.,துாரத்திற்கு மணல் அள்ள கூடாது என விதி உள்ளது. ஆனால் கல்லணை அருகே மணல் அள்ள அரசு அனுமதி அளித்துள்ளது. ஏற்கனவே, முக்கொம்பில் மணல் அள்ளியதால் தான் இடிந்தது. அதே போல, கல்லணைக்கு ஆபத்து ஏற்படாத வகையில், டெல்டாவை சேர்ந்த முதல்வர் அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்றார்.
போராட்டத்தில் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் சதீஸ்குமார், கார்த்திக், தங்கமணி, ஜெயபால் மற்றும் நிர்வாகிகள் மாரிமுத்து, அய்யாராசு, அமிர்தராஜ், சம்சுதீன், இப்ராஹிம், முத்துலெட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.