தஞ்சையில் எலுமிச்சைப்பழம், நார்த்தம்பழம் விலை கடுமையாக உயர்வு
வரத்து குறைவால் எலுமிச்சை மற்றும் நார்த்தம் பழம் விலை உயர்ந்துள்ளது.
தஞ்சாவூர்: தஞ்சையில், வரத்து குறைவினால் எலுமிச்சைப்பழம், நார்த்தம் பழம், நெல்லிக்காய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் சர்பத் ஸ்டால் வைத்துள்ள வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.
கோடை வெயிலை கண்டு மக்கள் அச்சம்
கோடைகாலம் தொடங்கியதில் இருந்தே வெயில் தாக்கம் அதிகளவில் உள்ளது. இதனால் காலை வேளையில் கூட மக்கள் வெளியில் வருவதற்கு அச்சப்பட்டு வருகின்றனர். மதிய வேளைகளில் மற்ற நாட்களில் பரபரப்பாக இருக்கும் தஞ்சை சாலைகள் வெறிச்சோடி போய் காணப்படுகிறது. காரணம் வெயிலுக்கு பயந்து மக்கள் நடமாட்டம் குறைந்ததால்தான். வெப்பத்தில் இருந்து தங்களை காத்துக் கொள்ள மக்கள் படாதபாடு பட்டு வருகின்றனர். இந்நிலையில் கரும்புச்சாறு, இளநீர், எலுமிச்சை ஜூஸ், நுங்கு, சர்பத், என உடலுக்கு குளுமை தரும் பொருட்களை மக்கள் அதிகம் வாங்கி சாப்பிட்டு வருகின்றனர். இந்நிலையில் வரத்து குறைவால் சர்பத் தயாரிக்க முக்கியமாக தேவைப்படும் எலுமிச்சை, நார்த்தம்பழம் விலை உயர்ந்துள்ளது.
தஞ்சை காமராஜர் மார்க்கெட்
தஞ்சை அரண்மனை வளாகத்தில் காமராஜர் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு 250-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. தஞ்சை மார்க்கெட்டிற்கு ஆந்திரா, கர்நாடகா, மத்திய பிரசேதம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தில் கிருஷ்ணகிரி, ஓசூர், நீலகிரி, பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. மேலும் இங்கிருந்து பட்டுக்கோட்டை, திருவையாறு, ஒரத்தநாடு மற்றும் தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கும் காய்கறிகள் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படும்.
காய்கறிகள் விலை ஏறுமுகம்
கடந்த சில மாதங்களாகவே தக்காளியை தவிர அனைத்து காய்கறிகளின் விலையும் தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக தற்போது பீன்ஸ் விலை கிலோ ரூ.160 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதைதொ டர்ந்து அவரைக்காய் விலை கடந்த வாரம் கிலோ ரூ.40 இருந்த நிலையில் தற்போது ரூ.86க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆந்திரா, ஒட்டன்சத்திரம் போன்ற ஊர்களில் விளைச்சல் குறைவினால் தஞ்சைக்கு அவரைக்காய் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. ஊட்டச்சத்து மிகுந்த அவரைக்காய் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற வியாதிகளுக்கு தீர்வளிப்பதால் இல்லத்தரசிகள் வழக்கமாக கிலோ கணக்கில் வாங்கி செல்வார்கள். ஆனால் விலை உயர்வால் அதனை குறைந்த அளவில் வாங்கி செல்கின்றனர்.
கிடுகிடுவென்று விலை உயர்ந்த எலுமிச்சைப்பழம்
எலுமிச்சைப்பழம் கடந்த மாதம் கிலோ ரூ.60-க்கு விற்பனையான நிலையில் தற்போது படிப்படியாக விலை உயர்ந்து கிலோ ரூ.200 வரை விற்பனை செய்யப்படுகிறது. பல்வேறு மருத்துவ குணங்களை உடைய எலுமிச்சைபழம் தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் பயிரிடப்படுகிறது. எல்லா காலத்திலும் கிடைக்கும் எலுமிச்சையை கோடை காலத்தில் சர்பத் உள்ளிட்ட குளிர்பானம் தயாரிப்பதற்கு பெரிதும் பயன்படுவதால் இதன் தேவை அதிகமாக இருக்கும்.
வரத்து குறைந்ததால் விலை உயர்வு
ஆந்திரா, சென்னை, புதுக்கோட்டை பகுதிகளில் இருந்து தஞ்சைக்கு வரத்து குறைந்ததால் எலுமிச்சை பழத்தின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. சில்லரை கடைகளில் கடந்த மாதம் ரூ.10க்கு மூன்று எலுமிச்சைப்பழம் கிடைக்து வந்தது. ஆனால் தற்போது ரூ.15க்கு ஒரு எலுமிச்சைப்பழம் மட்டுமே கிடைக்கின்றது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதேபோல் நார்த்தம் பழம் ஒரு கிலோ ரூ.80க்கு விற்பனை செய்யப்படுகிறது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் சர்பத் கடைகளில் அதிகம் எலுமிச்சை மற்றும் நார்த்தம் பழங்களை பயன்படுத்தி வருகின்றனர்.
அதனால் வரத்து குறைவால் எலுமிச்சை மற்றும் நார்த்தம் பழம் விலை உயர்ந்துள்ளது. அதே போல் ஒரு கிலோ நெல்லிகாய் ரூ. 80க்கு விற்பனை செய்யப்படுகிறது.