தஞ்சாவூரில் தமிழறிஞர் தட்சிணாமூர்த்திக்கு சாகித்திய அகாடமியின் பாஷா சம்மான் விருது
தஞ்சாவூரில் தமிழறிஞர் தட்சிணாமூர்த்திக்கு (85) சாகித்திய அகாடமியின் பாஷா சம்மான் விருது வழங்கப்பட்டது.
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் தமிழறிஞர் தட்சிணாமூர்த்திக்கு (85) சாகித்திய அகாடமியின் பாஷா சம்மான் விருது வழங்கப்பட்டது.
சாகித்திய அகாடமியில் 1996ம் ஆண்டு பாஷா சம்மான் விருது அறிமுகம் செய்யப்பட்டது. இந்த விருது குறிப்பிட்ட மொழிகளின் பரவல், நவீனமயமாக்கல் அல்லது செழுமைப்படுத்துவதில் நல்ல பங்களிப்பைச் செய்த எழுத்தாளர்கள், அறிஞர்கள், ஆசிரியர்கள், கலைஞர்கள் அல்லது மொழிபெயர்ப்பாளர்களுக்கு வழங்கப்படுகிறது.
படைப்பிலக்கிய சாகித்திய அகாடமி விருது வழங்கப்படுவது போன்று, பாஷா சம்மான் விருதுக்கும் ரூ. 1 லட்சம் விருதுத் தொகையாக வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு மொழிகளைச் சேர்ந்த 4 அறிஞர்களுக்கு பாஷா சம்மான் விருது வழங்கப்படுகிறது.
அந்தவகையில் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்ட மூவர் கொண்ட நடுவர் குழுவினர் 2019ம் ஆண்டுக்கான பாஷா சம்மான் விருதுக்கு தஞ்சாவூர் அருளானந்த நகரைச் சேர்ந்த தமிழறிஞர் பேராசிரியர் அ. தட்சிணாமூர்த்தியை தேர்வு செய்தனர்.
இந்த விருது புதுடில்லியில் மார்ச் மாதம் நடைபெற இருந்த சாகித்திய அகாடமி விருது வழங்கும் விழாவில் வழங்கப்படுவதாக இருந்தது. ஆனால், பேராசிரியர் தட்சிணாமூர்த்திக்கு உடல் நலக் குறைவால் புதுதில்லிக்குச் செல்ல இயலவில்லை. எனவே, இந்த விருதை சாகித்திய அகாடமியின் தமிழ்மொழி ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் இரா. அறவேந்தன், ஆலோசனைக் குழு உறுப்பினர் உ. அலிபாவா உள்ளிட்டோர் தட்சிணாமூர்த்தியின் இல்லத்துக்கு சென்று, அவருக்கு சாகித்திய அகாடமியின் பாஷா சம்மான் விருதை வழங்கினர்.
அப்போது, சாகித்திய அகாதெமி செயலர் சீனிவாச ராவ் செல்பேசி மூலம் தட்சிணாமூர்த்தியைத் தொடர்பு கொண்டு பாராட்டு தெரிவித்தார். இதில் தமிழ்ப் பல்கலைக்கழக நாட்டுப்புறவியல் துறைத் தலைவர் இரா. காமராசு, பாரதிதாசன் பல்கலைக்கழகத் தமிழ்த் துறை முன்னாள் தலைவர் பா. மதிவாணன், ந.மு.வே. நாட்டார் திருவருள் கல்லூரி ஆட்சிக் குழுத் தலைவர் மு. இளமுருகன், முனைவர் சுப்பராயலு, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர், அறவேந்தன் கூறுகையில், பாஷா சம்மான் விருது சாகித்திய அகாடமி வழங்குகிற மிக முக்கியமான விருது. தற்கால இலக்கியத்துக்கு ஆண்டுதோறும் இவ்விருது தமிழுக்கு வழங்கப்படுகிறது. அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளுக்கும் ஆண்டுதோறும் ஏதேனும் ஒரு நூலை தெரிவு செய்து சாகித்திய அகாடமி விருது வழங்கப்படுகிற
ஆனால், பாஷா சம்மான் விருதை அனைவரும் வாங்க முடியாது. இந்த விருதை இந்திய அரசு 4 விருதுகளாகத் தெரிவு செய்து ஒவ்வொரு ஆண்டுக்கும் சில வரையறைகளை உருவாக்கி வைத்து வழங்குகிறது. இதில், 2 விருதுகள் செம்மொழி அல்லது இடைக்கால இலக்கியத்துக்கு பங்காற்றிய மூத்த அறிஞர்களுக்கு வழங்கப்படும்.
மற்ற இரு பாஷா சம்மான் விருது அங்கீகரிக்கப்படாத 24 மொழிகளுக்கும் அப்பாற்றப்பட்டு இருக்கிற ஏனைய மொழிகளின் வளர்ச்சிக்கு பாடுபடுவோருக்கு வழங்கப்படுகிறது. இதுவரை மிகச் சில மூத்த அறிஞர்கள்தான் இந்த விருதைப் பெற்றுள்ளனர். சாகித்திய அகாடமி விருதை விட பன்மடங்கு உயர்ந்த விருது இது. இந்த விருதை வாழ்நாள் சாதனையாளர்களால்தான் பெற முடியும். இந்த விருது தமிழறிஞர் தட்சிணாமூர்த்திக்குக் கிடைத்திருப்பது மிகப் பெரிய மகிழ்ச்சிக்குரியது என்று தெரிவித்தார்.
இவருக்கு ஏற்கெனவே மத்திய செம்மொழித் தமிழாய்வு மையம் 2015 ஆம் ஆண்டில் தொல்காப்பியர் விருதும், தமிழக அரசு 2003 ஆம் ஆண்டில் பாரதிதாசன் விருதும் வழங்கியுள்ளன. தவிர, இவருக்கு பல்வேறு அமைப்புகள் விருதுகள் வழங்கி கௌரவித்துள்ளன.