சீர்வரிசை கொடுக்க காய்கறிகள் வாங்கும் மக்கள்... விலை கடுமையாக உயர்வு
தஞ்சாவூர் காய்கறி சந்தைக்கு தேனி, ஒட்டன்சத்திரம், உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, நிலக்கோட்டை மற்றும் தஞ்சை பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
விளைச்சல் குறைவு என்பதாலும், வரத்து குறைந்துள்ளதாலும் காய்கறிகள் தஞ்சையில் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் வேதனை அடைந்துள்ளனர். பொங்கல் சீர்வரிசை கொடுப்பதற்கு அதிகளவில் பொதுமக்கள் வாங்குவதாலும், விளைச்சல் குறைவு காரணமாகவும் காய்கறி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
தஞ்சாவூர் காய்கறி சந்தைக்கு தேனி, ஒட்டன்சத்திரம், உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, நிலக்கோட்டை மற்றும் தஞ்சை பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
பொங்கலுக்கு இரண்டு நாளே உள்ள நிலையில் காய்கறிகள் விலை மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது. தக்காளி கிலோ ரூ. 30 க்கும், முருங்கைக்காய் கிலோ ரூ. 120 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கத்தரிக்காய் கிலோ ரூ.40, வெண்டைக்காய் ரூ. 60, சின்ன வெங்காயம் கிலோ ரூ. 80க்கு பீட்ரூட் ரூ. 60 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பொங்கல் சீர்வரிசையின் போது காய்கறிகளும் அதிகளவில் வைக்கப்படுவது கிராம வழக்கம். அதனால் பொதுமக்கள் ஒரே நேரத்தில் அதிகளவு காய்கறி வாங்குவதால் சில வியாபாரிகள் காய்கறிகளின் விலையை சட்டென்று உயர்த்தி உள்ளனர்.
பொங்கல் பண்டிகையை ஒட்டி விற்பனைக்காக வெளியூரில் இருந்து வியாபாரிகள் மஞ்சள் கொத்துகளை கொள்முதல் செய்தனர். ஆனால் விலை அதிகம் என்பதால் கவலையடைந்துள்ளனர். பொங்கல் பண்டிகையில் பொங்கல் பானையில் கட்டுவதற்கு இலைகளுடன் கூடிய மஞ்சள் கொத்து முக்கிய பங்கு வகிக்கிறது.
தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மஞ்சள் கொத்து சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதால் வெளி மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் மஞ்சள் கொத்துக்களை வாங்கி வந்து தஞ்சை மாவட்டத்தில் விற்பனை செய்கின்றனர்.
மஞ்சள் கொத்து தரத்தை பொறுத்து ரூ 6 ரூபாய் முதல் 12 ரூபாய் வரை விற்பனைக்கு கிடைக்கும். ஆனால் இந்த ஆண்டு தஞ்சை பகுதியில் மஞ்சள் கொத்து போதிய சாகுபடி இல்லை. இதன் காரணமாக மஞ்சள் கொத்துக்கள் போதிய அளவில் கிடைக்கவில்லை. தற்போது 20 ரூபாய் முதல் 60 ரூபாய் வரையிலும் மஞ்சள் கொத்துக்கள் வாங்கி வந்து விற்பனை செய்யப்படுகிறது.
மழை மற்றும் கடும் குளிர் காரணமாக மஞ்சள் கொத்து சாகுபடி பாதிக்கப்பட்டதாக விவசாயிகள் கூறுகின்றனர். விவசாயிகளிடம் அதிக விலை கொடுத்து வாங்கி வந்து விற்பதாக வியாபாரிகள் சொல்கின்றனர். அதே நேரத்தில் போதிய வருமானம் இல்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். தற்போது மஞ்சள் கொத்து சந்தையில் 20 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.