தஞ்சையில் ஸ்கேட்டிங் தளம், கையுந்து பந்து விளையாட்டு தளம் திறப்பு
தஞ்சையில் ரூ.5 கோடியில் அமைக்கப்பட்ட ஸ்கேட்டிங் தளம், கையுந்து பந்து விளையாட்டு தளத்தை திறந்து வைத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
தஞ்சாவூர்: தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டரங்கத்தில் ஸ்கேட்டிங் தளம், கையுந்து பந்து விளையாட்டு தளம் உட்பட ரூ. 5 கோடியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டரங்கம் நகரின் முக்கிய மைதானங்களில் ஒன்றாகும். இங்கு முக்கிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இந்த மைதானம் உள்ளது. திட்டத்தின் தேவைக்கு ஏற்ப, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தரநிலைகள் மற்றும் விவரக்குறிப்புகளின்படி, தேவைகளைப் பூர்த்தி செய்ய மைதானத்தில் வசதிகள் மேம்படுத்தப்பபட்டுள்ளது.
அன்னை சத்யா விளையாட்டு மைதானம் மேம்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் மாநகர இளைஞர்களின் உடல்நலம் பேணும் பொருட்டு ரூ.2 கோடி மதிப்பில் ரோலர் ஸ்கேட்டிங் சறுக்கு தளம் அமைக்கப்பட்டு காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் பூங்காக்கள் மற்றும் இளைஞர்கள் உடற்பயிற்சி கூடங்கள் அமைக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது.
இந்நிலையில் தஞ்சாவூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அன்னை சத்யா விளையாட்டரங்கத்தில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மக்கள் தேக நலன் கருதி ரூ.3 கோடியில் நடைபயிற்சி மேற்கொள்ளும் வகையில் நடைபாதை (1200 மீட்டர்) மின்விளக்குகளுடன் கூடிய தார்சாலை, அலங்கார மின் விளக்குகள் மற்றும் இருக்கைகள் அமைக்கப்பபட்டன.
இதேபோல் ரூ.2 கோடியில் திறந்தவெளி ரோலர் ஸ்கேட்டிங் சறுக்கு தளம், கழிவறைகள், நுழைவாயில் மற்றும் கையுந்துபந்து மைதானங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் நிறைவடைந்தது.
இதையடுத்து ரோலர் ஸ்கேட்டிங் சறுக்கு தளம், நுழைவாயில், கையுந்து பந்து மைதானங்கள், நடைபயிற்சி நடைபாதை ஆகியவற்றை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து ரோலர் ஸ்கேட்டிங் சறுக்கு தளத்தில் மாணவர்கள் ஸ்கேட்டிங் செய்வதை தொடங்கி வைத்தார். தொடர்ந்து தஞ்சை மாவட்ட ரோலர் ஸ்கேட்டின் அசோசியேஷன் செயலாளர் ராஜூ தலைமையில் வந்திருந்த 40 மாணவ, மாணவிகள் ஸ்கேட்டிங் செய்தனர்.
இதில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தஞ்சாவூர் எம்.பி., பழனிமாணிக்கம், எம்எல்ஏக்கள் திருவையாறு துரை.சந்திரசேகரன், தஞ்சாவூர் டி.கே.ஜி. நீலமேகம், அரசு தலைமை கொறடா கோவி. செழியன், தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், ஆணையர் சரவணகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக தஞ்சை மாவட்ட எல்லையான விளாங்குடி, பள்ளியக்ரஹாரம், ஆற்றுப்பாலம் உட்பட பல பகுதிகளில் கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அன்னை சத்யா ஸ்டேடியம் பகுதியில் மாநில மருத்துவர் அணி சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.