ஆன்லைன் நெல் கொள்முதலில் குளறுபடி - நேரடியாக கொள்முதல் செய்யக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
’’வருவாய்த்துறையின் கணக்கின்படி பசலி ஆண்டு 1431 என குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது சம்பாவுக்கும் அதே ஆண்டு குறிப்பிட்டு வழங்கப்படுவதால், ஆன்லைனில் இரட்டை பதிவு என கூறி நிராகரிக்கப்படுகிறது'’
குறுவையில் நெல் கொள்முதலில் பசலி ஆண்டு பதிவானதால், சம்பாவில் கொள்முதல் செய்ய ஆன்லைன் முன்பதிவு நிராகரிக்கப்படுவதால், இந்த முறையை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் முன்பாக நேற்று தமிழக விவசாயிகள் சங்க கூட்டியக்கத்தின் சார்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டியக்கத்தின் மாநில துணைத் தலைவர் கக்கரை ஆர்.சுகுமாரன் தலைமை வகித்து, நெல் கொள்முதலுக்கு ஆன்லைன் பதிவு முறையை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினார். ஆர்ப்பாட்டத்துக்கு பின் செய்தியாளர்களிடம் சுகுமாரன் கூறுகையில், டெல்டா மாவட்டங்களில் குறுவை அறுவடை முடிந்து தற்போது சம்பா, தாளடி அறுவடை துவங்கியுள்ளது. தமிழக அரசு நெல்லை கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்ய வேண்டுமானால், அறுவடைக்கு முன்பு ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் கூறியுள்ளது.
விவசாயிகள் இதற்காக வருவாய்த்துறையில் கிராம நிர்வாக அலுவலரிடம் சிட்டா, அடங்கல் ஆகியவற்றை பெற்று அதனை ஆன்லைனில் பதிவு செய்ய முயன்று வருகின்றனர். ஆனால் குறுவை சாகுபடி செய்த விவசாயிகள் அப்போது பெற்ற சிட்டா, அடங்களில் வருவாய்த்துறையின் கணக்கின்படி பசலி ஆண்டு 1431 என குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது சம்பாவுக்கும் அதே ஆண்டு குறிப்பிட்டு வழங்கப்படுவதால், ஆன்லைனில் இரட்டை பதிவு என கூறி நிராகரிக்கப்படுகிறது. இதே போல் புல எண்கள், வருவாய் கிராமம், குறிப்பிட்ட நாட்களுக்குள் அறுவடை செய்ய முடியாமல் போனால், மீண்டும் முதலிலிருந்து பதிவு செய்ய வேண்டும் என பல்வேறு குளறுபடிகள் இருப்பதால் இந்த ஆன்லைன் பதிவு முறையை ரத்து செய்ய வேண்டும்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் சம்பா அறுவடை தீவிரமாகியுள்ளதால் தேவையான இடங்களில் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும். கொள்முதல் பணியாளர்களுக்கு கூலியை தமிழக அரசு உயர்த்தியுள்ளதால், விவசாயிகளிடம் மூட்டைக்கு 40 ரூபாயை கட்டாயப்படுத்தி கொள்முதல் பணியாளர்கள் பெறக்கூடாது. கூடுதல் எடை வைத்து நெல் கொள்முதல் செய்யக்கூடாது. போதியளவு சாக்குகளை இருப்பு வைத்து உடனடியாக தேக்கமில்லாமல் கொள்முதல் பணியை துரிதப்படுத்த வேண்டும். தினந்தோறும் ஆயிரம் மூட்டைகளுக்கு மேல் கொள் முதல் செய்ய வேண்டும், மழை காலங்களில் கூடுதலாக பணியாளர்களை நியமித்து, கூடுதலாக நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும். சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளை கண்காணிக்க தனிஅலுவலரை நியமிக்க வேண்டும் என்றார்.தொடர்ந்து முதுநிலை மண்டல மேலாளரை சந்தித்து கூட்டியகத்தின் சார்பில் கோரிக்கை மனுவை விவசாயிகள் வழங்கினர்.