தஞ்சாவூரில் சோகம்: கல்லணைக் கால்வாயில் குதித்து குழந்தைகளுடன் பெண் தற்கொலை
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பூச்சந்தை அருகே 20 கண் பாலம் பகுதியில் கைக்குழந்தை, 5 வயது சிறுவன், 14 வயது சிறுமியுடன் பெண் ஒருவர் கல்லணை கால்வாயில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில் 3 பேர் உடல்களை பொதுமக்கள் மீட்டனர். குழந்தை கதி என்னவானது என்று தெரியவில்லை.
தஞ்சாவூர் பூச்சந்தை அருகே கல்லணைக்கால்வாயில் 20 கண் பாலம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் நேற்று மதியம் கைக்குழந்தை, 5 வயது சிறுவன், 14 வயது சிறுமியுடன் ஒரு பெண் கல்லணை கால்வாய் கரையில் நடந்து வந்துள்ளார். அப்போது திடீரென இரு குழந்தை மற்றும் சிறுமியுடன் அந்த பெண் சட்டென்று கல்லணை கால்வாயில் குதித்து விட்டார். ஆற்றில் தண்ணீரின் வேகம் அதிகம் இருந்ததால் 4 பேரும் நீரில் மூழ்கினர்.
இதனை அங்கு குளித்துக் கொண்டிருந்த பொதுமக்கள் பார்த்து உடனடியாக ஆற்றில் குதித்து அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் 14 வயது சிறுமி, 5 வயது சிறுவன் மற்றும் அந்த பெண் ஆகியோர் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இருப்பினும் நீரில் மூழ்கியதால் அந்த 3 பேரும் இறந்த நிலையில்தான் மீட்கப்பட்டுள்ளனர். கைக்குழந்தை மட்டும் ஆற்றில் அடித்து செல்லப்பட்டு விட்டது.
தொடர்ந்து பொதுமக்கள் தஞ்சாவூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் ஆற்றில் சிறுமி, சிறுவன், கைக்குழந்தையுடன் குதித்து தற்கொலை செய்து கொண்ட அந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள். குடும்பத்தகராறில் தற்கொலை செய்து கொண்டனரா? அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களா? அல்லது கடன் பிரச்சினையால் தற்கொலை செய்து கொண்டனரா என்பது குறித்து தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட கைக் குழந்தையின் உடலை தஞ்சாவூர் தீயணைப்பு படை வீரர்கள் 5 பேர் மாலை வரை சூரக்கோட்டை வரை சென்று தேடிப்பார்த்தனர். இருப்பினும் குழந்தையின் உடல் கிடைக்கவில்லை. இச்சம்பவம் தஞ்சைப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.





















