புகையில்லா இளைஞர் உலகம்... தஞ்சையில் மாணவர்கள் நடைபயணம்
புகையிலை பொருட்களை ஒழிப்பது குறித்த விழிப்புணர்வு நடைபயணம் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலைய ஆம்னி பஸ் வளாகத்தில் இருந்து பாரத் கல்லூரி வரை நடந்தது.
தஞ்சாவூர்: சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் புகையில்லா இளைஞர்கள் உலகம் என்ற தலைப்பில் மாணவர்கள் மத்தியில் புகையிலை பொருட்களை ஒழிப்பது குறித்த விழிப்புணர்வு நடைபயணம் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலைய ஆம்னி பஸ் வளாகத்தில் இருந்து பாரத் கல்லூரி வரை நடந்தது.
புகையிலை பயன்பாட்டை மறுப்பது அல்லது கைவிடுவது என்ற இலக்கோடு இளைய சமுதாயத்தை ஊக்குவிக்கும் பொருட்டு கடந்த செப்டம்பர் 24ஆம் தேதி புகையில்லா இளைஞர்கள் உலகம் 2.0 தொடங்கப்பட்டது. தீங்கான விளைவுகளை ஏற்படுத்தும் புகையிலையிலிருந்து இளைஞர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது இந்நிகழ்ச்சி நோக்கமாகும்.
விழிப்புணர்வு கல்வி அளிக்கக்கூடிய சாதனங்களை அளித்தல், மாவட்டம் முழுவதிலும் உள்ள இளைய சமுதாயம் புகை இல்லா வாழ்வியல் முறைகளை வாழ ஊக்குவிக்கும் பொருட்டு புகையிலை இல்லாத கிராமம், கல்வி நிலையங்கள் ஆகியவற்றை அமைத்தல், புகைப்பிடித்தலுக்கான கட்டுப்பாட்டு அபராதங்கள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஆகியவற்றை நடத்துவது இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.
அந்த வகையில் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் ஆம்னி பஸ் வளாகத்தில் இருந்து நடை பயணத்தை வல்லம் டிஎஸ்பி கணேஷ் குமார் கொடியசைத்து தொடக்கி வைத்தார். இதில் பான் செக்கர்ஸ் கல்லூரி, சுவாமி விவேகானந்தா கல்லூரி, மருது பாண்டியர் கல்லூரி பாரத் காலேஜ் பொன்னையா ராமஜெயம் பல்கலைக்கழகம், பெரியார் மணியம்மை யுனிவர்சிட்டி, சாஸ்த்ரா பல்கலைக்கழகம், வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி உட்பட பல கல்லூரிகளை சேர்ந்த 1000க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் நடை பயணமாக பாரத் கல்லூரி வளாகத்தை அடைந்தனர்.
அங்கு பாரத் கல்லூரி சேர்மன் புனிதா கணேசன், மாணவ, மாணவிகளுக்கு பங்கேற்பு சான்றிதழை வழங்கினார். இதில் வல்லம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அஜந்நன் முன்னிலை வகித்தார். டாக்டர் பாரதி, சுகாதார ஆய்வாளர்கள் சிவக்குமார், ரமேஷ், அகீஸ்வரன், புரவலன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சிங்காரவேல், சுகாதார ஆய்வாளர்கள் மணிகண்டன் சிங்காரவேல் ஆகியோர் செய்திருந்தனர்.
மது மற்றும் போதை பொருட்களில் உடல்நலனுக்கு பாதிப்பினை உண்டாக்குகிற, அப்பழக்கத்தைத் தூண்டுகிற வேதிப்பொருட்கள் அதிக அளவு கலப்பதால் பெரும்பாலானோர் போதை நோயாளிகளாக மாறுவதோடு மன நோயாளிகளாகவும் மாறுகின்றனர். உலக அளவில் தற்போது போதைப் பொருள் பயன்பாடு மிகவும் கடுமையான சுகாதார பிரச்சினையாக உள்ளது. இப்படி போதைப் பழக்கம் சமூகத்தின் சாபக்கேடாக மாறிவருகிறது.
உலகம் முழுவதும் 2.30 கோடி மக்கள் பல்வேறு வகையான போதைப் பொருட்களைப் பயன்படுத்துவதாக ஐக்கிய நாடுகளின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. நகர்ப்புறங்களில் சிகரெட், மது மற்றும் போதைப் பொருள் பழக்கமானது ஆண்கள் மட்டுமின்றி பெண்களிடத்திலும் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஒருவர் தன் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண குடி மற்றும் போதைப் பொருட்களை நாடுகிறாரோ, அவருக்கு பிரச்சினை ஏற்படும் போதெல்லாம் அந்தப் பொருட்களின் துணையுடனே அவர் தீர்வு காண முயற்சிக்கும் நிலை ஏற்படுகிறது. இப்படி ஏதோ ஒரு விதத்தில் ஒரு போதைப் பொருளை முதலில் பயன்படுத்தத் தொடங்கியவர்கள் நாட்கள் செல்லச் செல்ல அடுத்தடுத்து எல்லா வகையான போதைப் பொருட்களையும் பயன்படுத்திப் பார்க்க விரும்புகிறார்கள். போதைப் பொருள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு வகை வேதிப்பொருள் உள்ளது. இது உடல் நலத்தை மட்டுமல்ல மனநலத்தையும் பாதிக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.