நீண்டகாலமாக சிறையில் உள்ள முஸ்லீம்களை விடுதலை செய்ய வேண்டும் - எஸ்டிபிஐ வலியுறுத்தல்
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு பிறந்த நாள் விழாவில் நீண்ட காலமாக சிறையில் உள்ள முஸ்லிம்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
தஞ்சாவூர்: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு பிறந்த நாள் விழாவில் நீண்ட காலமாக சிறையில் உள்ள முஸ்லிம்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
தஞ்சை பிரகதமணி திருமண மண்டபத்தில் சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா (எஸ்டிபிஐ) கட்சியின் தஞ்சை மண்டல தலைவர்கள் சங்கமம் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு தஞ்சை மண்டல தலைவர் தப்ரே ஆலம் பாதுஷா தலைமை தாங்கினார்.
தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் ரியாஸ் அகமது வரவேற்றார் நிகழ்ச்சியில் கட்சியின் தமிழ் மாநில தலைவர் நெல்லை முபாரக் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
எஸ்டிபிஐ கட்சி தமிழக முழுவதும் பாராளுமன்ற தேர்தலுக்கு தயார்படுத்திக் கொள்வதற்காக நிர்வாகிகள் சந்திக்கும் நிகழ்ச்சியை மண்டல வாரியாக நடத்தி வருகிறது. கூட்டத்தில் பூத் கமிட்டி அமைப்பது உட்பட பல்வேறு தேர்தல் ஆலோசனைகள் நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டது. இரண்டு நாட்களுக்கு முன்பு ஒடிசாவில் நடந்த பயங்கர ரயில் விபத்துக்கு காரணமான அதிகாரிகள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும்.
சம்பந்தப்பட்ட ரயில்வே துறை அமைச்சர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். இந்த விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு எஸ்டிபிஐ கட்சி சார்பில் நெஞ்சார்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.
டெல்லியில் கடந்த ஒரு மாத காலமாக தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வரும் மல்யுத்த வீரர்கள் பிரச்னையை தீர்க்க சம்பந்தப்பட்ட பாஜக எம்பி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக அவரை கைது செய்ய வேண்டும். மேலும் அவரது பதவியை பறிக்க வேண்டும்.
மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி நூற்றாண்டு பிறந்த நாள் விழா நடைபெறும் இந்த நேரத்தில் தமிழக சிறைகளில் நீண்ட காலமாக வாடி வரும் 37 முஸ்லிம்களையும், வீரப்பன் கூட்டாளிகளான பெருமாள், ஆண்டியப்பன் ஆகியோரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
தஞ்சை மாவட்டம் திருமலங்குடியில் உள்ள ஆரூரான் சர்க்கரை ஆலை பிரச்சனை சம்பந்தமாக 188 நாட்களாக உள்ளிருப்பு போராட்டம் நடத்திவரும் விவசாயிகள் பிரச்சனைக்கு தமிழக அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும். பல்வேறு வகையிலும் கரும்பு விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் குறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள காவிரி டெல்டா பகுதியில் விவசாயத்தை பாதிக்கும் வகையிலான எந்த ஒரு திட்டத்தையும் ஒன்றிய அரசும் தமிழக அரசும் அனுமதிக்க கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.