தஞ்சையில் 15 பயனாளிகளுக்கு ரூ.9.21 லட்சம் மதிப்புள்ள செயற்கை கை,கால்கள் வழங்கல்
15 பயனாளிகளுக்கு ரூ.9,21,100 மதிப்பிலான செயற்கை கை கால்கள் வழங்கும் நிகழ்ச்சி தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடந்தது.
தஞ்சாவூர்: மாற்றுத்திறனாளிகள் நாளை ஒட்டி 15 பயனாளிகளுக்கு ரூ.9,21,100 மதிப்பிலான செயற்கை கை கால்கள் வழங்கும் நிகழ்ச்சி தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடந்தது.
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உடலியல் மருத்துவம் மற்றும் புனர்வாழ்வுத்துறை சார்பில் சர்வதேச மாற்றுதிறனாளிகள் தினத்தை முன்னிட்டு நேற்று 15 பயனாளிகளுக்கு செயற்கை கை கால்களை முதல்வர் பாலாஜி நாதன் வழங்கினார்.
கை, கால்களை இழந்த மாற்றுத்திறனாளிகள் பயன்
தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 2019 ஆம் ஆண்டு முதல் உடலியல் மருத்துவம் மற்றும் மறுவாழ்வுத்துறை சார்பில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் நவீன செயற்கை கை, கால் உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் தஞ்சாவூர் மட்டுமின்றி அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த கை, கால்களை இழந்த மாற்றுத்திறனாளிகளும் பயனடைந்துள்ளனர்.
ஒரே ஆண்டில் ரூ.65 லட்சம் மதிப்பு செயற்கை அவயங்கள் வழங்கல்
வேறு எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் தற்பொழுது வரை ரூ. 65,73,900 மதிப்புடைய 127 நவீன செயற்கை கால் மற்றும் கை அவையங்கள் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி புனர்வாழ்வு துறையின் மூலமாக வழங்கப்பட்டுள்ளது.. மேலும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் நவீன செயற்கை கை,கால் அவையங்கள் வழங்குவதில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி தமிழகத்திலேயே முன்னிலை வகிக்கிறது.
மாற்றுத்திறனாளிகள் தினத்தை ஒட்டி வழங்கப்பட்டது
டிசம்பர் 3 சர்வதேச மாற்றுதிறனாளிகள் தினத்தை முன்னிட்டு நேற்று 15 பயனாளிகளுக்கு ரூ.9,21,100 மதிப்பிலான செயற்கை கை கால்களை முதல்வர் பாலாஜி நாதன் வழங்கினார். நிகழ்ச்சிக்கு மருத்துவ கண்காணிப்பாளர் ராமசாமி, நிலைய மருத்துவ அலுவலர் செல்வம், துணை நிலை மருத்துவ அலுவலர் முகமது இத்ரிஸ் மற்றும் முத்து மகேஷ், உடலியல் மற்றும் புனர்வாழ்வு மருத்துவத்துறை துறைத் தலைவர் (பொறுப்பு) திருமலை பாண்டியன் மற்றும் உடலியல் மருத்துவம் மற்றும் மறுவாழ்வுத்துறை மருத்துவர்கள் சுகந்தி பாலமுரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
செயற்கை உபகரணங்கள் நிலைய நிபுணர்கள் வெங்கடேஷ், தேவேந்திரன், கவிதா சுரேஸ் ராஜன் மற்றும் இயன்முறை வல்லுநர் அம்பிகை முருகேசன் செவிலியர்கள், செவிலிய கண்காணிப்பாளர்கள் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்தனர். மேலும் மருத்துவ காப்பீடு திட்ட, மாவட்ட திட்ட அலுவலர் விஜய் ஆனந்த், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜா, உடன் இருந்தனர்.
பதிவு செய்து செயற்கை அவயங்களை பெறுங்கள்
மேலும் கை கால்களை இழந்த மாற்றுத்திறனாளிகள் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியின் உடலியல் மருத்துவம் மற்றும் மறுவாழ்வுத்துறையில் பதிவு பெற்று நவீன செயற்கை கை, கால்கள் உபகரணங்களை பெற்று பயன்பெறுமாறு கல்லூரி முதல்வர் பாலாஜி நாதன் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபை வழிகாட்டுதல்படி 1992-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3-ஆம் தேதி சர்வதேச மாற்றுதிறனாளிகள் தினம் (World Disability Day) கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில், மாற்றுத்திறனாளிகளின் பிரச்னைகளைப் புரிந்துகொள்வது, அவர்களைக் கண்ணியத்துடன் நடத்துவது மற்றும் அவர்களின் நல்வாழ்வு, உரிமைகள், அவர்களுக்கு உரிமை கொடுப்பது இந்த நாளின் நோக்கமாகும்.