"கேவலமா இருக்கு" டங்ஸ்டன் விவகாரம்.. முதல்வர் ஸ்டாலினை கிழித்து தொங்கவிட்ட இபிஎஸ்!
டங்ஸ்டன் விவகாரத்தில் அதிமுக துரோகம் இழைத்து விட்டதாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம்சாட்டிய நிலையில், அதற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பதிலடி அளித்துள்ளார்.
மதுரையில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைப்பதற்கான உரிமத்தை இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்துக்கு மத்திய அரசு வழங்கியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் திமுக, அதிமுகவுக்கு இடையே பெரும் வார்த்தை போர் வெடித்துள்ளது.
இதில், அதிமுக துரோகம் இழைத்து விட்டதாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம்சாட்டிய நிலையில், அதற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பதிலடி அளித்துள்ளார்.
"கீழ்தரமான அரசியல்"
எக்ஸ் தளத்தில் இதுகுறித்து குறிப்பிட்ட அவர், "UPA (ஐக்கிய முற்போக்கு கூட்டணி) அரசில் திமுக அங்கம் வகித்த போது, கனிம வளங்களை ஏலம் விடாமல், தனியாருக்கு தாரை வார்த்து கொள்ளை அடிக்கப்பட்டது மற்றும் UPA அரசாங்கம் ஆட்சியில் இருந்தபோது கனிமச் சுரங்கங்களை அவர்களுக்கு வேண்டியவர்களுக்கு உரிமம் வழங்கினார்கள்.
NDA (தேசிய ஜனநாயக அரசு) ஆட்சியில் கனிம வள உரிமங்கள் ஏலமுறையில் விடப்படும் என்ற சட்டத்திருத்தம் கொண்டு வந்து, கனிம வள ஊழலை தடுக்க ஏலமுறையை ஆதரித்துதான் தம்பிதுரை பேசி உள்ளார். தமிழகத்தில் டங்ஸ்டன் சுரங்கம் ஏலம் விடுவதைப்பற்றி தம்பிதுரை நாடாளுமன்றத்தில் எவ்வித கருத்தையும் பேசவில்லை.
இந்த கனிம வள திருத்தச் சட்டம் 2023 நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த போது, திமுக எம்பி-க்கள் எவ்வித எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. உண்மையை மறைத்து, என்னைப்பற்றி இப்படி தவறான தகவலை ஸ்டாலின் ‘X’ வலைதளத்தில் வெளியிட்டு கீழ்தரமான அரசியல் ஆதாயம் தேடுவது வெட்கக்கேடானது. கேவலமானது" என பதிவிட்டுள்ளார்.
முதலமைச்சரின் குற்றச்சாட்டு என்ன?
முன்னதாக, முதலமைச்சர் ஸ்டாலின், இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக மீது கடும் விமர்சனங்களை முன்வைத்திருந்தார். அதில், "சுரங்கம் மற்றும் கனிமத் திருத்தச் சட்ட வரைவிற்கு நாடாளுமன்றத்தில் ஆதரித்து வாக்களித்துவிட்டு, இப்போது சட்டப்பேரவையில் தமிழ்நாட்டின் நலனுக்காகப் பேசுவதுபோல் நடிக்கும் பழனிசாமி, அவதூறுகளைப் பரப்பி உயிர்வாழும் அதிமுகவின் துரோக வரலாற்றுக்கு அடையாளமாய் இருக்கிறார்.
சட்டப்பேரவையில் சொன்னதை மீண்டும் சொல்கிறேன். தமிழ்நாட்டுக்கு ஊறு விளைவிக்கும் எந்தத் திட்டத்தையும் திராவிட முன்னேற்றக் கழகம் ஒருபோதும் அனுமதிக்காது" என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க: BJP DMK: திமுக சொல்லி நாங்க செய்ய மாட்டோம்.. டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை கைவிட பரிசீலனை - அண்ணாமலை