கேரளா வியாபாரிகள் நேரடி விற்பனை... ஒரு கிலோ ரூ.50க்கு அமோகமாக விற்ற அன்னாசி பழங்கள்
அன்னாசி பழம் சாப்பிடுவதால் காது மற்றும் சளித்தொல்லை, ப்ளூ காய்ச்சல் உள்ளிட்டவற்றில் இருந்தும் பாதுகாப்பு கிடைக்கும்.
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் அன்னாசி பழங்கள் விற்பனை செம சூப்பராக நடந்து வருகிறது. 2 கிலோ அன்னாசி பழங்கள் ரூ.100க்கு விற்கப்படுவதால் மக்கள் அதிகளவில் வாங்கி செல்கின்றனர். மேலும் தற்போது குளிர்காலம் என்பதால் சளி தொந்தரவுக்கு அன்னாசி பழம் நல்லது என்பதாலும் அதிகளவில் மக்கள் வாங்குகின்றனர்.
கேரள மாநிலத்தில் இருந்து அறுவடை செய்யப்பட்ட அன்னாசி பழங்கள் விற்பனைக்காக தஞ்சாவூரில் குவித்து வைக்கப்பட்டுள்ளன. பல வகைகளில் பல்வேறு சத்துக்கள் நிறைந்த பழங்களில் அன்னாசி பழமும் ஒன்று. இதில் நம் உடலுக்கு தேவையான தாது பொருட்கள். விட்டமின்கள், நார்ச்சத்துக்கள் அதிகளவில் உள்ளன.
அன்னாசிப்பழம் பார்ப்பதற்கு கரடுமுரடான பூப்போல இருந்தாலும், உள்ளே பலாப்பழ சுளை போல இனிப்பாகவும், சற்று புளிப்பு சுவைகொண்ட கோடைகால பழவகைகளில் ஒன்றாகும். இதில் 75% நீர்சத்தும், மீதம் சர்க்கரை, வைட்டமின் ஏ, சி, பொட்டாசியம், நார்சத்து, ப்ரோமிலைன் (Bromelain) என்ற சக்தி வாய்ந்த வேதிப்பொருள் அதிக அளவிலும், மருத்துவ நன்மைகள் உள்ளது.
அடிக்கடி தலைவலி, ஒற்றை தலைவலிக்கு, விக்கல், தொடர் விக்கல், மூளை கோளாறு, செரிமான பிரச்சனை, மலசிக்கல், கீரைப்பூச்சி வெளியேற, மூட்டு வலி, பற்கள் மற்றும் எலும்புகள் வலிமையாகும், கண் பார்வை தெளிவடைய, பித்தம், பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைநோய், தொண்டை கரகரப்பு, தொண்டை அழற்சி உடனடி, நிவாரணியாக செயல்படுகிறது.
இயற்கை நமக்கு அளித்துள்ள கொடைகளில் முக்கியமான பழங்களில் ஒன்று அன்னாச்சி பழம். அன்னாசியில் மாங்கனீஸ் சத்துக்கள் நிறைய உள்ளன. அன்னாசி பெரும்பாலும் வெப்பமான பகுதிகளில் பயிரிடப்படுகிறது. புரதத்தை செரிக்கக் கூடிய புரோமலைன் என்ற என்சைம் இதில் அதிகம் உள்ளது. இது ரத்தம் உறையாமல் பாதுகாக்கிறது. தையாமின் மற்றும் வைட்டமின் சி சத்தும் அன்னாசியில் அதிகம் உள்ளது.
அன்னாசி பழம் சாப்பிடுவதால் காது மற்றும் சளித்தொல்லை, ப்ளூ காய்ச்சல் உள்ளிட்டவற்றில் இருந்தும் பாதுகாப்பு கிடைக்கும். இப்பழத்தில் உள்ள மாங்கனீஸ் உடலில் ஆன்டி ஆக்சிடன்ட்களின் சக்தியை அதிகரிக்கும். இது இதய நோய்கள் மற்றும் மாரடைப்பில் இருந்து பாதுகாப்பளிக்கிறது. இப்பழத்தில் உள்ள இதர பிற வைட்டமின்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. சோர்வின்றி செயல்பட, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள அன்னாசி நிறைய சாப்பிடலாம்.
அன்னாசி பழங்கள் கேரளம், திண்டுக்கல், நாமக்கல், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பயிர் செய்யப்பட்டு வருகின்றன. இந்த வகையில் கேரளாவில் விளைவிக்கப்பட்ட அன்னாசி பழங்கள் தஞ்சாவூருக்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த பழங்கள் 2 கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டன. குறைந்த விலையில் அன்னாசி பழங்கள் விற்பனை செய்யப்பட்டதால் ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.
இதுகுறித்து பழ வியாபாரிகள் தரப்பில் கூறியதாவது: இந்த பழங்கள் இயற்கையான முறையில் பழுத்த பழங்கள். தஞ்சாவூரில் இவை விரைவில் விற்று விடும். கேரளா உட்பட பல்வேறு இடங்களில் விளைவிக்கப்பட்ட இந்த பழங்களை இங்கு உள்ள வியாபாரிகளிடம் மொத்த விலைக்கு விற்று நாங்கள் எங்கள் ஊருக்கு சென்று விடுவோம்.
ஆனால் இந்த முறை நேரடியாக பொது மக்களுக்கு குறைந்த விலையில் வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த பழங்களை போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத இடங்களில் தரைக்கடையாக போட்டும், வாகனங்களில் வைத்தும் விற்பனை செய்து வருகிறோம்.
கேரளாவில் இருந்து கொண்டு வரப்படும் அன்னாசி பழங்களுக்கு சுவை கூடுதலாக இருக்கும். இவ்வாறு வியாபாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.