பால்குட ஊர்வலத்திற்கு அனுமதி மறுப்பு; தஞ்சை கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்
தஞ்சாவூர் மனோஜிப்பட்டி முத்து மாரியம்மன் கோயில் பால்குடம் மற்றும் பால்காவடி விழாவிற்கு போலீசார் அனுமதி மறுத்ததால் ஏழு கிராமங்களை சேர்ந்தவர்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மனோஜிப்பட்டி முத்து மாரியம்மன் கோயில் பால்குடம் மற்றும் பால்காவடி விழாவிற்கு போலீசார் அனுமதி மறுத்ததால் ஏழு கிராமங்களை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் திரண்டு வந்து கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து திருவிழாவிற்கு அனுமதி மறுக்கப்பட்டால் தேர்தல் புறக்கணிப்பு செய்யப்படும் என்று தெரிவித்தனர்.
முத்துமாரியம்மன் கோயில்
தஞ்சாவூர் மானோஜிப்பட்டியில் அமைந்துள்ளது முத்து மாரியம்மன் கோயில். இக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயிலாகும் இக்கோயில் தஞ்சாவூர் மேலவீதி பங்காரு காமாட்சியம்மன் கோயில் செயல் அலுவலரால் நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது. இக்கோயிலில் கடந்த பல ஆண்டுகளுக்கும் மேலாக பால்குட மற்றும் பால் காவடி திருவிழா நடந்து வருகிறது.
23 ஆண்டுகளாக நடந்து வரும் திருவிழா
ஏழு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மனோஜ் பட்டி கிராமத்தை சேர்ந்த ஐயப்ப பக்தர்களால் சித்திரை மாதம் 1ம் தேதி பால்குடம், காவடி, அக்னி சட்டி போன்றவை ஊர்வலமாக எடுத்து வருவது கடந்த 23 வருடங்களாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் பால்குடம் காவடி திருவிழா நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதையடுத்து பால்குடம் மற்றும் பால் காவடி திருவிழா நடத்த அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டது. தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி போலீஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட மனுவிற்கு முதலில் அனுமதி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அனுமதி மறுக்கப்பட்டதால் அதிர்ச்சி
இந்நிலையில் திடீரென பால் குட ஊர்வலம் மற்றும் பால்காவடி திருவிழாவிற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவித்ததால் மானோஜிப்பட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பால்குடம் மற்றும் காவடி போன்றவை புதுஆற்றங்கரையில் அமைந்துள்ள சப்தகன்னியம்மன் ஆலயத்திலிருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக முத்து மாரியம்மன் ஆலயத்திற்கு வந்தடையும். நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு திருவிழா நடத்த போலீசார் மற்றும் கோட்டாட்சியர் சார்பில் அனுமதி வழங்காமல் உள்ளதாக தெரிய வந்ததால் மானோஜிப்பட்டி மற்றும் 7 கிராமங்களை சேர்ந்த 100க்கும் அதிகமான ஆண்கள், பெண்கள் தஞ்சாவூர் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
தேர்தல் புறக்கணிப்பு செய்வோம்
தொடர்ந்து அப்பகுதி மக்கள் தரப்பில் கூறுகையில், பால்குடம் மற்றும் பால்காவடி திருவிழாவிற்கு அனுமதி வழங்கவில்லை என்றால் வரும் 19ம் தேதி நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் யாரும் வாக்களிக்க மாட்டோம் தேர்தலில் புறக்கணிப்போம்.
கடந்த 23 வருடங்களாக சித்திரைப் பெருவிழா மிக விமர்சையாக கொண்டாடி வருகிறோம். இந்த ஆண்டு எங்களுடைய பால்குடம், காவடி மற்றும் முளைப்பாரி ஆகிய நிகழ்ச்சிகளை எங்கள் பகுதியில் உள்ள வேற்று மதத்தினர் நடத்தவிடாமல் இடையூறு செய்து வருகின்றனர். இதற்கான அனுமதி கேட்டு எங்கள் பகுதி ஆண்கள் போலீசார் சென்ற பொழுது அவர்களின் மனுவையும் நிராகரிப்பு செய்து அலைக்கழித்து மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கினர்.
இதற்கு உரிய உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு நிரந்தர தீர்வு எடுக்கப்படாவிட்டால் நாங்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்து தேர்தல் நாளன்று வீடுதோறும் கருப்புக்கொடி ஏற்றுதல் மற்றும் குடும்ப அட்டையை திரும்ப ஒப்படைத்தல் போன்றவற்றில் ஈடுபடுவோம். மேலும் சாலைமறியல் செய்யவும் தயாராகி விட்டோம் என்று தெரிவித்தனர்.