விளையாடிய குழந்தைக்கு வினையானது வாய்க்கால்: நீரில் மூழ்கி பலியான சோகம்
வினோத், மோனிஷா மற்றும் அக்கம் பக்கத்தினர், உறவினர் என பலரும் பல இடங்களில் குழந்தை தர்னீஸை; வெகுநேரமாக தேடியுள்ளனர்.
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் வீட்டில் விளையாடியபடியே வெளியில் சென்ற குழந்தை வாய்க்காலில் தவறி விழுந்து பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் பகுதியை சேர்ந்தவர் வினோத் (32). மீன்பிடிதொழிலாளி. இவரது மனைவி மோனிஷா (27). இவர்களுக்கு ஹரிணி (3), என்ற பெண் குழந்தை, ஒன்றரை வயதில் தர்னீஸ் என்ற ஆண்குழந்தை.
இந்நிலையில் நேற்று முன்தினம் மோனிஷா வீட்டின் உள்ளே சமையல் வேலை செய்துக்கொண்டு இருந்தார். அப்போது வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த தர்னீஸ், வீட்டை விட்டு வெளியே சென்றதை மோனிஷா கவனிக்கவில்லை.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து பெய்த மழையால் பல்வேறு பகுதிகளிலும் மழை நீர் தேங்கி உள்ளது. அதேபோல் வினோத் வீட்டின் முன்பும் மழை நீர் தேங்கி இருந்தது. வெளியில் சென்ற குழந்தை தர்னீஸ் தேங்கி இருந்த மழைநீரில் தவறி விழுந்து அருகில் இருந்த வாய்க்காலில் இழுத்து செல்லப்பட்டுள்ளான். இதற்கிடையில் சமையல் வேலையை முடித்து விட்டு தர்னீஸை மோனிஷா தேடியுள்ளார். ஆனால் தர்னீஸை காணவில்லை. இதையடுத்து வினோத், மோனிஷா மற்றும் அக்கம் பக்கத்தினர், உறவினர் என பலரும் பல இடங்களில் குழந்தை தர்னீஸை; வெகுநேரமாக தேடியுள்ளனர்.
அப்போது, வாய்க்காலில் தர்னீஸ் விழுந்து கிடந்ததை கண்டு வினோத், மோனிஷா மற்றும் அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்து, குழந்தையை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே தர்னீஸ் இறந்து விட்டதாக தெரிவித்தனர். மழை நீரில் மூழ்கி குழந்தை தர்னீஸ் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் மருத்துவமனைக்கு சென்று பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். மேலும், உடற்கூறாய்வை விரைந்து முடிக்க மருத்துவர்களிடம் வலியுறுத்தினார்.
இச்சம்பவம் தொடர்பாக சேதுபாவாசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் துரைராஜ் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.